எந்த பஸ் வந்தாலும் ஏறத் தயாரா இருக்கிறேன்! நெகிழ்கிறார் சூரி
‘‘உலகத்திலே எத்தனையோ நடிகர்கள், ஹீரோக்கள் இருக்கப்ப நான் ஏன் இந்தப் படத்திலே நாயகன்..? இந்தக் கேள்வி எனக்குள்ளேயும் இருந்துச்சு...’’ தனக்குத்தானே கேள்விகள் கேட்டுக்கொண்டு வெள்ளந்தியாக ஆரம்பித்தார் காமெடி நடிகர் ‘பரோட்டா’ சூரி என்கிற, இப்போது கதை நாயகனாக மாறிய சூரி.
 ‘விடுதலை பாகம் 1’, ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் சூரி கதை நாயகனாகவும், விஜய் சேதுபதி கதா நாயகன் வாத்தியாராகவும் நடித்துள்ளனர். மேலும் பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன்... உட்பட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  ‘‘ஒரு வெள்ளந்தியான காவல் துறை ஓட்டுநர்தான் இந்த குமரேசன். அவனுக்கு தன்னைச் சுத்தி என்ன நடக்குதுனு தெரியாம, எல்லாத்துக்கும் முதல் ஆளா முன்ன போய் நிப்பான். ஆனா, அங்க என்ன நடக்குதுனு தெரியத் தெரிய அவனுக்குள்ள மாற்றங்கள் நடக்குது. அதென்ன என்பதுதான் கதை...’’ புன்னகைக்கிறார் சூரி.
 வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகன்... அந்தத் தருணம் எப்படி நடந்துச்சு?
எத்தனையோ நாட்கள் அவர் கதைக்குள்ள ஒரு நாலு சீன் நடிச்சிட மாட்டோமா, எங்கிட்டாவது தலையக் காட்டிட மாட்டோமான்னு திரிஞ்சவன் நான். நானும் வேல்ராஜ் அண்ணன்கிட்ட தினமும் போன் பண்ணி, ‘அண்ணே... என் பேரை போட்டுவிடுண்ணே, எதாவது கதை டிஸ்கஷன், சந்திப்புன்னு ஓடுச்சுன்னா என்னைய கூப்ட்டு விடுண்ணே’ன்னு சொல்லி அவரைத் தொணத்தி எடுத்திட்டேன்.
அவரும் ‘இருப்பா... கூப்டுவாரு, ஒரு புராஜெக்ட் இருக்கு’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாப்டி. நான் கொடுத்த குடைச்சல்ல அவரே ‘இந்தாப்பா போன் நம்பர்... நீயே அடிச்சு கேளு’னு கொடுத்தாரு. நம்மளை ஏதும் கடுப்புல கோர்த்துவிடுறாரோனு ஒரு டவுட்டு. போன் நம்பர் வந்த ஒரு மணி நேரம் குட்டி போட்ட பூனை மாதிரி கிடந்து அல்லாடுனேன். அப்பறம் தைரியமா, யோசிக்காம வாட்ஸ்அப்புல ஒரு மெஸேஜ் போட்டேன்.
அண்ணனே அடிச்சாரு... ‘வாங்க சூரி... பேசலாம்’னார். போயி உட்கார்ந்த உடனேயே ஒரு கதை சொன்னாரு. அந்தக் கதையிலே ஒரு நாலஞ்சு கேரக்டருக... ஆனா, சொன்ன கதையிலே ஒரு காமெடி சீன் கூட இல்ல. சரி, இருக்கற நாலு கேரக்டர்ல நல்ல கேரக்டரா பார்த்து எதுனா வருதான்னு பார்ப்போம்னு உட்கார்ந்திருந்தேன். இருக்கற அத்தனை ரோலுக்கும் வேற நடிகர்கள் பேரைச் சொல்லிக்கிட்டே இருந்தார். மிச்சம் இருக்கறது அந்த மெயின் கேரக்டருதான். ‘நீங்கதான் மெயின் லீடு’ன்னு வெற்றி அண்ணன் சொன்னார்.
அம்புட்டுதான்... எனக்கு கையும் காலும் ஓடலை. விட்டா வானத்துல பறந்திடுவேன். ஆனா, எதையும் அண்ணன் முன்னாடி காண்பிச்சுக்காம சைலன்டா ‘சந்தோஷம்ண்ணே’னு சொல்லிட்டு வெளியே வந்தேன். உடனேயே எஸ்.கே (சிவகார்த்திகேயன்) தம்பிக்குத்தான் போன் அடிச்சு சொன்னேன்.
வாத்தியார் விஜய் சேதுபதி என்ன சொல்றார்?
ஒரு 20 முத்தமாச்சும் வாங்கியிருப்பேன். ‘வெண்ணிலா கபடிக் குழு’ படம் பண்ணும் போதே சேது சொல்லிக்கிட்டே இருப்பார்... ‘உனக்குள்ள ஒரு எதார்த்த நடிகன் இருக்கான்’னு. எஸ்.கே. தம்பிக்கு அப்பறம் அதிகமா சந்தோஷப் பட்டது சேது. காமெடி மட்டுமில்ல, எந்த நல்ல கேரக்டர் கிடைச்சாலும் செய்ங்க’னு சொன்னார். ஒரு ஷூட்டிங் ஸ்பாட்ல ‘ஒரு நல்ல நடிகருக்கு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி’னு ஒரு இயக்குநர்கிட்ட சொன்னது சேதுவாதான் இருக்கணும். வாத்தியார் கேரக்டர்ல சேது அப்படி செஞ்சிருக்காரு.
படப்பிடிப்பு எப்படி இருந்தது?
நாங்க ஷூட்டிங் எடுத்த அம்புட்டு ஏரியாவும் காட்டுப்பகுதி. ஒவ்வொரு டிரிப்பும் போறப்ப பல கிலோமீட்டர் பயணிச்சுதான் போகணும். முதல் நாள் ஷாட் ரெடினு சொன்னதும் வழக்கமா நமக்குள்ள இருக்கற சூரி வெளியே வந்தான். அண்ணன் கூப்பிட்டார்... ‘சூரி... எல்லாம் நல்லா இருக்கு. ஆனா, எனக்கு சூரி வரவேகூடாது! நான் என்ன சொல்றேனோ அதை மட்டும் செய்யுங்க’னு சொன்னாரு.
முதல்ல ரெண்டு மூணு நாளு கஷ்டமாத்தான் இருந்துச்சு. அப்பறம் அண்ணன் சொன்னத மட்டும் கேட்க ஆரம்பிச்சேன். சொன்னா நம்ப மாட்டீங்க... கௌதம் மேனன் சாரே பார்த்துட்டு ‘எங்கேயுமே அந்த பழைய சூரி தெரியவே இல்ல... நல்லா நடிச்சு இருக்கீங்க’னு சொன்னார்.
கதை - நாயகன் அடுத்து கதாநாயகன்... இனி காமெடியன் சூரியைப் பார்க்க முடியுமா?
பஸ் ஸ்டாப்ல பெட்டியோட நிப்பேன். எந்த பஸ் வந்தாலும் ஏறுறதுக்கு தயாராத்தான் இருக்கேன். நடிச்சா ஹீரோதான் அப்படிங்கற கதை எல்லாம் ஆகாது. எந்த கேரக்டரா இருந்தாலும் செய்வேன். ‘பரோட்டா’ சூரியா மாறி காமெடியும் செய்வேன். நல்ல கேரக்டர் அமைஞ்சா அதையும் செய்வேன்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அடுத்த படம்?
‘கூழாங்கல்’ படம் எடுத்து ஆஸ்கர் நாமினேஷன் வரைக்கும் போனாரே வினோத் ராஜ்... அவர் டைரக்ஷன்லதான் அடுத்த படம் ‘கொட்டுக்காளி’. இந்தப் படத்த என்ன வச்சு சிவகார்த்திகேயன் தம்பி தயாரிக்கிறாரு. நமக்கு நடிக்கிறதுக்கு நிறைய ஸ்கோப் இருக்கு இந்தப் படத்துல. வெற்றி அண்ணே போட்ட விதை கொஞ்சம் கொஞ்சமா முளைக்க ஆரம்பிச்சிருக்கு. ஆனாலும் என்னைக்கும் அதே சூரியாத்தான் இருப்பேன்.
ஷாலினி நியூட்டன்
|