சென்னையை மிரட்டும் ஜூன் சம்பவம்! இது சம்மர் ஸ்பெஷல்
கடந்தவாரத்தில் சிலநாட்களில் சென்னையில் பெய்த கோடை மழையின்போதே சென்னைவாசிகளில் பலபேர் ‘அப்ப வரும் கோடை ரொம்ப மோசமாகத்தான் இருக்கும்’ என்று ஆருடம் சொல்லத் தொடங்கிவிட்டார்கள். பொதுவாக எந்த நல்ல விஷயத்திலும் ஒரு நெகடிவ்வை கண்டுபிடிப்பது நம் குணம். ஆனால், நமது இந்த குணத்துக்கு அறிவியலும் துணையாக இருப்பதுதான் ஆச்சரியமாக இருக்கிறது. உண்மைதான். இந்த ஜூன் மாதத்தில் சென்னையில் வெப்பம் மட்டும் அல்ல; வெப்பக் காற்றலையே வாட்டி வதைத்து துவைக்கப் போவதாக கணித்திருக்கிறார்கள் நிபுணர்கள்.
 ‘‘எல்லா நேரத்திலும் சென்னைவாசிகள் நினைப்பது சரியாக இருக்கும் என்று சொல்லமுடியாது. ஆனால், இந்த விஷயத்தைப் பொறுத்தளவில் அறிவியலும் லாஜிக்குமாக சேர்ந்து சென்னைவாசிகள் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று சொல்லத் தோன்றுகிறது. உதாரணத்துக்கு, கடந்த வருடம் ஏப்ரல் அல்லது மே மாத சென்னை கோடைக் காலத்தின்போது குளிர்ந்த காற்றும் சேர்ந்து வீசியது. ஆனால், அந்த நேரத்திலும் சென்னையின் வெப்பம் 40.1 டிகிரி செல்சியஸாக இருந்தது.
 குளிர்ந்த காற்று வீசியபோதே வெப்பம் 40.1 ஆக இருந்தது என்றால் இந்த கோடை மழைக்கு முன்பே இந்தியாவில் வெப்பத்தின் அளவு சராசரிக்கு அதிகமாக இருப்பதை இந்திய வானிலை ஆய்வு மையம் கணக்கிட்டிருக்கிறது. இது சென்னைவாசிகள் நினைப்பதை மெய்ப்பிக்கிறது...’’ என்றபடி பேசத் தொடங்கினார் ‘பூவுலகின் நண்பர்கள்’ குழுவைச் சேர்ந்த பிரபாகரன். ‘‘இது எல்லாம் எல்நினோவின் கைங்கரியம்! கடந்த 40 வருடத்தில் கடலானது 0.7லிருந்து 0.8 வரை சூடாகியிருக்கிறது. இது பசிபிக் கடலிலும் பிரதிபலிக்கும். இந்த பசிபிக் கடலின் வெப்பம்தான் கடல் நீரின் அழுத்தத்தால் தாழ்வான பகுதிகளுக்கு இடம்பெயரும்.
 பசிபிக் கடலிலிருந்து மிக நெருக்கமான, தாழ்வான பகுதி இந்தியாதான். இந்த கடல் வெப்பம் தாழ்வான பகுதிகளுக்கு இடம்பெயர்வதைத்தான் எல்நினோ என்கிறார்கள். இந்த இடப்பெயர்ச்சி நீண்ட காலமாக நடந்து வருகிறது. ஆனால், தொடர்ச்சியாக மனிதர்கள் மேற்கொள்ளும் சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகளால் இந்த கடல் வெப்பத்தின் அளவும் பாதிப்பும் கூடிக்கொண்டே போகிறது.
 மொத்தத்தில் காலநிலை மாற்றம்தான் எல்நினோவை மிகத் தீவிரமாகச் செயல்படவைக்கிறது...’’ என்று சொல்லும் பிரபாகரன், வரும் மாதங்களில் இந்திய மற்றும் சென்னையின் சராசரி வெப்ப நிலையில் என்ன மாற்றங்கள் ஏற்படும்... அது மக்களை பாதிக்கக்கூடிய வெப்ப அலைகளை ஏற்படுத்துமா... என்றும் விவரித்தார். ‘‘பொதுவாக வெப்ப அலைகளை இடத்தைப் பொறுத்து இரண்டு வகையாகப் பிரிக்கிறார்கள். ஒன்று, ப்ளெயின்ஸ் எனப்படும் சமவெளி. உதாரணம் சென்னையின் உட்பகுதி. மற்றது கடல் மற்றும் மலைப் பகுதிகள்.
சமவெளியைப் பொறுத்தளவில் வெப்பமானது 40 டிகிரி செல்சியஸுக்கு அதிகமானால் அது வெப்ப அலையைக் கொண்டுவரும். அதேபோல கடல் மற்றும் மலைப் பகுதிகளில் 30 லிருந்து 35 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பம் அதிகமானால் வெப்ப அலையைக் கொண்டுவரும். இந்த வெப்ப அலையையும் தீவிரத்தைப் பொறுத்து 2 வகையாகப் பிரிக்கலாம். ஒன்று சுமாரானது. அடுத்தது தீவிரமானது.
உதாரணமாக, சென்னையின் வெப்ப நிலை, சராசரியில் இருந்து சுமார் 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கிறது என்றால் அது சுமாரான வெப்ப அலையாக இருக்கும். அதுவே 5க்கும் மேலாகச் சென்றால் தீவிரமான வெப்பமாக மாறும். கடந்த வருடம் ஏப்ரல் - மே மாத சென்னை சம்மரின்போது குளிர்ந்த காற்று அடித்தபோதே சென்னையின் வெப்ப நிலை 40.1 டிகிரி செல்சியஸுக்கு இருந்ததை யோசித்துப் பாருங்கள்.
இந்த வருட ஃபிப்ரவரியில் இந்தியாவின் சராசரி வெப்ப நிலை என்றும் இல்லாத அளவில் சராசரியாக 29.66 டிகிரியாக ரெக்கார்ட் பிரேக் செய்திருக்கிறது. இது சராசரிதான். பிராந்தியம் விட்டு பிராந்தியம் சராசரி வெப்பத்தின் அளவு வெவ்வேறாக இருக்கும். சென்னையானது கடலும், சமவெளியும் சேர்ந்த பகுதி. ஆகவே, 30லிருந்து 40 வரைக்கும்கூட போகலாம். ஆனால், 40க்கு மேல் அதிகமாக புள்ளி 1 டிகிரி செல்சியஸ் போனால்கூட வெப்பக் காற்று வீசலாம். ஆனால், அதையும் தாண்டிச் செல்லும் என்றுதான் புவியியலாளர்கள் சொல்கிறார்கள்.
அதுவும் வரும் ஜூன் மாதத்தில் சென்னையில் என்றும் இல்லாத அளவுக்கு வெப்பக் காற்று தீவிரமாக இருக்கும் என்று கூறுகிறார்கள்...’’ என்று சொல்லும் பிரபாகரன், உலகளவிலும் இந்த விஷயத்தைப் பொருத்திப் பார்க்கிறார்.‘‘உலகளவில் வெப்பத்தின் சராசரி அளவும் மாறத் தொடங்கியிருக்கிறது. அதாவது சுமார் 1.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் அதிகரித்திருக்கிறது. இது 1.5க்கு சென்றால் ஆபத்து என்பதற்காகத்தான் 2014ல் பாரீஸ் உடன்படிக்கை எனும் ஒரு உலகளவிலான ஒப்பந்தம் பல்வேறு நாடுகளுக்கு இடையே கையெழுத்தானது.
காற்றில் கலக்கும் கார்பன் டையாக்சைட் எனும் கரியமில வாயு, பெட்ரோல், டீசல் மற்றும் தெர்மல் ஆலைகளின் பயன்பாட்டை எல்லா நாடுகளுமே தடுப்பது அல்லது குறைத்துக் கொள்வது என்று உறுதி ஏற்றன. 2100க்குள் இந்த 1.5 டிகிரி செல்சியஸ் போய் விடாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று அந்த உடன்படிக்கையில் வேண்டுகோள் விடப்பட்டது.
1.5 டிகிரி போனால் அரிசி விளையாது, கோதுமை விளையாது, தானியங்கள் விளையாது; ஆடு மாடுகள் மற்றும் மனிதர்களுக்கு உடல்ரீதியான பிரச்னை ஏற்படும் என்று அபாய ஒலியை எழுப்பியது. ஆனால், அண்மையில் உலகளவிலான சுற்றுச்சூழல் அமைப்பான ஐ.பி.சி.சி, போகிற போக்கைப் பார்த்தால் 2030க்குள்ளேயே இந்த 1.5 இலக்கை உலகம் அடைந்துவிடும் என்று சாவு மணி அடித்திருக்கிறது.
இதற்கு எல்லோருமே பொறுப்பேற்க வேண்டும். நம் காடுகள், கடல், ஆறு போன்ற நீர்நிலைகளில் சுமார் 50 சதவீதத்தையாவது நம்மால் காப்பாற்ற முடியவில்லை என்றால் கடும் வெப்பத்தை நாம் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும்...’’ என்று ஆதங்கத்தோடு முடித்தார் பிரபாகரன்.
டி.ரஞ்சித்
|