ஓர் இந்தியர்தான் இனி சர்வதேச காபி ஷாப் நிறுவனத்தின் சிஇஓ!



உலக பெரு நிறுவனங்களை ஆளும் இந்திய வம்சாவளியினர் பட்டியலில் லேட்டஸ்ட் ஆக இணைந்திருக்கிறார் லக்ஷ்மண் நரசிம்மன்.ஆம். இனி ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் அடுத்த CEO இவர்தான். இதன் மூலம் இனி ஸ்டார்பக்ஸின் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் குழுவிலும் அங்கம் வகிக்கப்போகிறார்.ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேஷன் வாஷிங்டனில் உள்ள சியாட்டிலை தலைமையிடமாகக் கொண்ட ஒரு பன்னாட்டு காஃபிஹவுஸ் சங்கிலி. இதன் சிஇஓ ஆக இருந்த ஹாவர்ட் ஷுல்ட்ஸ் பதவி விலகிய நிலையில் இப்பொறுப்புக்கு வருகிறார் லக்ஷ்மண் நரசிம்மன்.

இதற்கு முன் ரெக்கிட் நிறுவனத்தின் சிஇஓ ஆக பதவி வகித்தவர் லக்ஷ்மண் என்பது குறிப்பிடத்தக்கது. 1967ம் ஆண்டு, மே மாதம் பிறந்த லக்ஷ்மணின் சொந்த ஊர் இந்தியாவிலுள்ள பூனே நகரம்.
பூனே இஞ்சினியரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் இஞ்சினியரிங் படித்துவிட்டு பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஜெர்மன் மற்றும் இன்டர்நேஷனல் ஸ்டடீஸில் முதுகலைப் பட்டம் பெற்றார். அதன்பின் அதே பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் எம்பிஏ முடித்தார்.

இவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்பத்துடன் கனெக்டிகட் மாகாணத்தில் இப்போது வசித்து வருகிறார். லக்ஷ்மணுக்கு மொத்தம் 6 மொழிகள் தெரியும் என்பது ப்ளஸ்.தனது முப்பது ஆண்டுக்கால பயணத்தில் உலகின் பிரபலமான, தலை சிறந்த நிறுவனங்களை வழிநடத்தியிருக்கிறார். பட்டியலைப் பார்க்கும்போதே இவர் மீது மலைப்பும் மரியாதையும் ஏற்படுகிறது.

சில மாதங்களுக்கு முன் வரை ரெக்கிட் பென்கிசர் என்ற பிரிட்டிஷ் நிறுவனத்தின் சிஇஓ ஆக பதவியில் இருந்தார் லக்ஷ்மண். இந்த ரெக்கிட்; டெட்டால், ஹார்பிக், லைசால் உள்ளிட்ட சுகாதாரம், உடல்நலம் சார்ந்த பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனம்.ரெக்கிட்டுக்கு முன் - அதாவது 2012 முதல் 2019 வரை பெப்சிகோவை தலைமை தாங்கி வழி நடத்தினார் லக்ஷ்மண். இந்நிறுவனத்தின் அமெரிக்க, ஐரோப்பிய பகுதிகளை வழிநடத்தும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

பெப்சிகோவுக்கு முன் மெக்கின்சே அண்ட் கம்பெனியின் இயக்குனராக பதவி வகித்தார் லக்ஷ்மண். கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் இந்நிறுவனத்தில் பணியாற்றியவர், அப்போது அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆசியாவில் நுகர்வோர் பொருட்கள், சில்லறை விற்பனை மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் உள்ள நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தார்.

இப்படிப்பட்ட அனுபவம் வாய்ந்த லக்ஷ்மண் நரசிம்மன் ஸ்டார்பக்ஸ் செயின் ஆஃப் காபி ஷாப்பின் சிஇஓ ஆக வரும் ஏப்ரல் மாதம் பதவியேற்கிறார்.
இனி இந்திய முறைப்படி டபரா டம்ளரிலும் ஸ்டார்பக்சில் ஃபில்டர் காபி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்!

ஜான்சி