அகநக முகநகையே த்ரிஷாஷாஷாஷா…



‘பொன்னியின் செல்வன் 2’வில் இடம்பெறும் ‘அகநக...’ பாடல் வெளியானது முதல் இணையம் முழுக்க டிரெண்டிங்கில் உள்ளது. ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ல் சின்னதாக ரெண்டு வரிகள் வந்து சென்றது இந்தப் பாடல். அதற்கே சமூக வலைத்தளங்கள் பற்றிக்கொண்டு பாடலைக் கொண்டாடின. இதோ இப்போது முழுப் பாடலும் வெளியாகி இளசுகளும் ஏ.ஆர்.ரஹ்மானின் ரசிகர்களும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருக்கும் இயக்குநர் மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் - 2’ திரைப்படம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரத் தயாராகி வருகிறது.விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத் குமார், விக்ரம் பிரபு, சோபிதா துலிபாலா, ஜெயராம், பிரபு, பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரஹ்மான்... என பல நட்சத்திர நடிகர்களைக் கொண்ட இந்தப் படம் அமரர் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ தமிழ் நாவலை அடிப்படையாகக் கொண்டது.

இரண்டாம் பாகத்தின் முதல் சிங்கிள் பாடலாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடலாசிரியரும் சிறுபத்திரிகைக் கவிஞருமான இளங்கோ கிருஷ்ணன் எழுதி, சக்தி ஸ்ரீகோபாலன் பாடிய வந்தியத்தேவன் (கார்த்தி), குந்தவை (திரிஷா) இடம் பெறும் ‘அகநக முகநகையே...’ என்ற பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் டிரெண்டிங்கில் இருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். கூடவே த்ரிஷாவின் சில புகைப்படங்களும் கிடைத்திருக்கிறதே... அதுதான் மேட்டர்!குந்தவை லுக்கில் அம்சமாக நம்மை ஈர்க்கிறார் த்ரிஷா. தலையில் கொண்டை, பட்டாடைகள், நகைகள்... என இளவரசி குந்தவை ஜொலிக்கவே அவரின் உடைகள், மற்றும் மேக்கப் விபரங்கள் குறித்து பல விபரங்களை அடுக்கினார் மாலினி கார்த்திகேயன்.

இவர்தான் விஜய் - லோகேஷ் கனகராஜ் காம்போவில் உருவாகும் ‘லியோ’ படத்திலும் த்ரிஷாவுக்கு காஸ்ட்யூம் டிசைனர். ‘பொன்னியின் செல்வன் -2’ படத்தில் ஏகா லகானி குழுவில் அஸிஸ்டெண்ட் காஸ்ட்யூம் டிசைனராக த்ரிஷா, கார்த்தி உள்ளிட்ட பலரின் உடைகள், லுக் என பார்த்துப் பார்த்து வடிவமைத்திருக்கிறார். த்ரிஷா மிகவும் அழகாக இருக்கிறாரே... எனக் கேட்பதற்கு முன்னர் ‘பூகம்ப நிலவரம் எப்படி... ‘லியோ’ குழு நலமா...’ என விசாரித்தோம்.

‘‘5.5 ரிக்டார்... பில்டிங்கே பயங்கரமா ஆடிடுச்சு. பயந்து வெளியே ஓடி வந்திட்டோம். எல்லாரும் ஓகே. யாருக்கும் எதுவும் ஆகலை...’’ ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் உற்சாகமானார்.
‘‘யெஸ்... ‘அகநக...’ சூப்பர் பாட்டு. ரஹ்மான் சார் + மணி சார் காம்போ. மேஜிக் மாதிரி இருந்துச்சு அந்தப் பாடல். இந்தப் படத்துக்கு நாங்க லுக் டெஸ்ட் மட்டுமே சுமார் 50 முறைக்கு மேல முயற்சி செய்தோம்.

த்ரிஷா மேடமுக்கு டிரெஸ், மேக்கப் எல்லாம் செய்து பார்க்கறதுக்கு முன்னாடி மாடல்கள் வெச்சு சோதிச்சோம். இந்த உடைகள், ஸ்டைலிங்கிற்கு முன்னாடி நம்ம ஊர் கோயில்கள், கல்வெட்டுகள், தஞ்சை மண் சார்ந்த கட்டடங்கள்... எல்லாம் கூட நாங்க கவனிச்சு நோட் செய்துகிட்டோம். உடைகளுக்கு நம் தமிழக கோயில்களில் இருக்கற சிலைகளைத்தான் நாங்க அடிப்படையா எடுத்துக்கிட்டோம். நாம வடிவமைக்கப் போகிற ஆடைகள் எல்லாமே அந்த சிலைகளுக்கும் முந்தைய காலம் என்கிறதால சில ஆய்வுக் குறிப்புகள், புத்தகங்கள் எங்களுக்கு உதவியா இருந்துச்சு.

அந்தக் காலத்திலே ஜாக்கெட் போடுகிற பழக்கம் கிடையாது. இப்போதிருக்கற மாதிரி பின், பட்டன்கள் எல்லாம் கூட கிடையாது. அதெல்லாம் கூட எங்களுக்கு பரீட்சை எழுதுகிற ஃபீல் கொடுத்துச்சு. ஷூட் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே த்ரிஷா மேடம் லுக் டெஸ்ட் நிறைய செய்தோம். அவங்க கொண்டை அலங்காரங்கள் எல்லாமே கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தில் உள்ள வர்ணனைகள்படியே கொண்டு வரணும்னு முடிவு செய்தோம். அதிலே மட்டும் எந்த மாற்றமும் கிடையாது...’’ என த்ரிஷாவின் தோற்றத்திற்கு பின்னணியில் இருந்த தேடல் குறித்து பகிர்ந்த மாலினி கார்த்திகேயன், உடைகள், ஆபரணங்கள் குறித்தும் பேசினார்.

‘‘முழுக்க முழுக்க காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள். அதிலும் மெஷின் தறி எல்லாம் வேண்டாம்னு முடிவு செய்து எல்லாமே தறிப் புடைவைகளா பார்த்துப் பார்த்து தேர்வு செய்தோம்.
த்ரிஷா மேடம் படத்தில் ஒரு 10 லுக்குகளில் வருகிறார்ன்னா அதற்கு முன்னாடி 50க்கும் மேலான லுக் சோதனை செய்திருக்காங்கன்னு அர்த்தம். ஷூட்டுக்கு முன்னாடி மேக்கப், ஸ்டைலிங் மட்டுமே மூணு மணி நேரம் நடக்கும். அதிலும் பெரிய டாஸ்க் இப்போதிருக்கற மேக்கப் லுக் எல்லாம் நாம செய்ய முடியாது. முகத்தில் பிளஷ், லிப்ஸ்டிக், கண் மேக்கப் முதற்கொண்டு இயற்கையா இருக்கணும்.

அந்தக் காலத்திலே எல்லாமே நேச்சுரல்தானே! பூக்களின் சாயங்கள், கண் மைகள் இப்படித்தான் பயன்படுத்தியிருப்பாங்க. அதெல்லாம் கூட நாங்க மேக்கப்பில் கொண்டு வரணும்.
மணி சார்தான் இதற்கு கூடவே இருந்து எங்களுக்கு என்ன வேணும், என்ன இருக்கணும்னு பார்த்துப் பார்த்து கேட்டு வாங்கினார். பிளவுஸ் இல்லாமல் கச்சை பாணியிலே புடவைகளைக் கொண்டே நாங்க கட்டியிருக்கோம்...’’ என்னும் மாலினி, நகைகள் குறித்தும் பகிர்ந்தார். ‘‘கிருஷ்ணன் தாஸ் ஜுவல்லரி டீம்தான் நகைகளை டிசைன் செய்தாங்க. படத்திலே அத்தனை கேரக்டர்களும் பயன்படுத்தின நகைகள் எல்லாமே உண்மையான தங்கம், வைர நகைகள்தான். அதனால்தான் அந்த ராயல் லுக் கிடைச்சது.

அவங்களும் எங்களைப் போலவே நிறைய தேடல்கள், சோதனைகள் எல்லாம் செய்தாங்க. இந்த நகைகளை நாங்க சரியா பயன்படுத்தவே நிறைய மெனக்கெடல் தேவைப்பட்டுச்சு.
படத்தில் மட்டுமில்லாம ‘பொன்னியின் செல்வன்’ புரமோஷன் உட்பட சகலத்துக்கும் அவங்களுடைய நகைகளைத்தான் த்ரிஷா மேடம் உட்பட அத்தனை பேரும் பயன்படுத்தினாங்க. இதுக்காகவே தனித்துவமா டிசைன் செய்து கொடுத்தாங்க. எதுவுமே மெஷின் கட் நகைகள் கிடையாது. எல்லாமே கைகளால் உருவாக்கின நகைகள்!’’ என மாலினி கார்த்திகேயன் முடிக்க, பாடலைக் குறித்து சொல்ல ஆரம்பித்தார் இளங்கோ கிருஷ்ணன்.  

‘‘குந்தவைக்கு ஒரு தனிப் பாடல்... அதாவது சோழப் பேரரசி தன்னுடைய நாட்டுக்குள்ளே இருக்கும்போது அவளுக்கென ஒரு உரிமையும், அதன்மேலே இருக்கக் கூடிய ஆளுமையும்தான் இந்தப் பாடல் வரிகள். குறிப்பாக அருணகிரிநாதர் பயன்படுத்தியது போன்ற அந்தாதி வரிகளை இந்தப் பாடலில் காணலாம். அந்தாதி என்றால் ஒரு வரி முடியும் சொல்லில் இருந்து அடுத்த வரி ஆரம்பமாகும்படி அமைப்பது.

அகநக அகநக
முகநகையே
முகநக முகநக
முறுநகையே
முறுநக முறுநக
தருநகையே
தருநக தருநக
வருநகையே...

இதற்குப் பொருள், மரமும், மலரும் அகம் நிறையச் சிரிப்பது என் முகச் சிரிப்பாக இருக்கிறது; என் தேசம் என்பதே பெருமிதம், அதில் இந்தத் தேசத்தை ஆள்கிறவள் என்கையில் பெருமிதம் இன்னும் எவ்வளவு இருக்கும்; அப்படி தன் தேசத்தைப் பார்த்து குந்தவை பெருமிதத்துடன் பாடும் பாடல்தான் இந்த

‘அகநக அகநக முக
நகையே...’
அழகிய புலமே
உனதிள மகள் நான்
வளவனின் நிலமே
எனதரசியும் நீ...

இதற்கு அர்த்தம், அழகிய நிலமே உன் இளைய மகள் நான், வளவன் என்றால் சோழன், சோழனின் நிலமே என்னை ஆளும் அரசியே..!இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு மணி சார் - ரஹ்மான் சார் முதல் பாகத்தில் வந்தியத் தேவன் - குந்தவை சந்திப்பில் வைத்ததன் மூலம் அந்த இடத்தில் காதல் பாடலாகவும் மாறிய மேஜிக் நடந்தது.
பாடலின் பின்பகுதி வரிகளும் கூட அப்படியான வரிகளாகவே கடக்கும்.

உனை நினைக்கையிலே
மனம் சிலிர்த்திடுதே
உன் வழி நடந்தால்
உயிர் மலர்ந்திடுதே
உன் மடி கிடந்தால்
தவிதவிக்கிறதே...

குந்தவை பாடியது தன் தேசத்தின் மடிதனில் கிடந்தால் தவிக்கிறதே என்பதாக இருக்கும். ஆனால், இன்னொரு சாயலில் காதல் வரிகளாகவும் பொருள்படும்...’’ என்கிறார் இளங்கோ கிருஷ்ணன்.

ஷாலினி நியூட்டன்