மதிய சீரியல்களின் மகராசி
இரண்டு கொரோனா அலைகள். அதனால் நிகழ்ந்த ஆர்ட்டிஸ்ட் மாற்றங்கள், பிறகு கதாநாயகியே மாறியது எனப் பல்வேறு தடைகளைத் தாண்டி சுமார் மூன்றரை ஆண்டு களாக சிறப்பாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது ‘மகராசி’ சீரியல்.நான்-ப்ரைம் டைம் சீரியல் என்றாலும்கூட மக்களின் மகத்தான ஆதரவைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டிருக்கும் தொடர் இது. அதுமட்டுமல்ல. இரண்டு இயக்குநர்கள் இயக்கிவரும் சீரியலும்கூட.
 ஒரு டீம் வொர்க்காக 950 எபிசோடுகளைத் தொட்டிருக்கும் ‘மகராசி’ குடும்பத்திற்குள் ஒரு எட்டு வைத்தோம். முதலில் தென்பட்டார், கோமதி கேரக்டரில் நடிக்கும் ராகவி. ‘‘‘மகராசி’யில் என்னுடையது ரீபிளேஸ்மெண்ட் கேரக்டர். எனக்கு முன்னாடி அஸ்வினினு ஒருத்தங்க பண்ணிட்டு இருந்தாங்க. கொரோனா நேரத்துல அவங்களால வரமுடியல. அதனால, என்னை அணுகினாங்க.
 இதுல நெகட்டிவ் ரோல். முதல்ல கொஞ்சம் தயக்கம் இருந்தது. அப்புறம், இந்தக் கேரக்டர் பிடிச்சுப்போச்சு. என் ஜர்னியும் சிறப்பாக போயிட்டு இருக்கு. எல்லோருமே ஒரு குடும்பமாக டிராவலாகிட்டு இருக்கோம். நான் நெகட்டிவ் ரோல் பண்றதால மக்கள் என்னை கோபமாகவும், வெறுப்பாகவும்தான் பார்க்கிறாங்க. சிலர் திட்டி கமெண்ட்ஸ் எல்லாம் போடுவாங்க. அது இந்தக் கேரக்டருக்குக் கிடைச்ச வெற்றிதான்னு சொல்லணும்.
 ஆனா, சிலர் நான் வெளியில் போகும்போது என் கேரக்டரில் நான் அணிகிற கம்மல், துணிகளை எல்லாம் பார்த்து குறிப்பிட்டு சொல்வாங்க. ‘மேடம் நீங்க அந்த ஜிமிக்கி போட்டிருந்தீங்கல்ல... அது சூப்பரா இருந்தது’னு பாராட்டுவாங்க. என் காஸ்டியூம்ஸ்கூட ரீச்சாகியிருக்கு...’’ என உற்சாகமாக சொன்னார் ராகவி. தொடர்ந்து ஹீரோ புவியின் தம்பியாக தமிழ் கேரக்டரில் நடிக்கும் விஜய்யும், மாதவி கேரக்டரில் நடிக்கும் பவித்ராவும் ஒன்றாக வந்துசேர இருவரிடமும் பேசினோம்.
 ‘‘எனக்கு இந்த புரொஜெக்ட்ல சீனியர் விஜய். இன்னைக்கு அவங்க ஜோடி வரல. அதனால, நான் என் சீனியர்கிட்ட சில கேள்விகள் கேட்குறேன்...’’ என்றவர், ‘‘இந்த புரொஜெக்ட் உள்ள எப்படி வந்தீங்க?’’ என, பவித்ரா தொடங்கினார்.‘‘‘மகராசி’ சீரியல் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ஏன்னா, இதுதான் என் முதல் சீரியல். தயாரிப்பாளர் ஃபேஸ்புக்ல என் புகைப்படத்தைப் பார்த்திட்டு, ‘இந்த மாதிரி ஒரு புரொஜெக்ட். பண்றீங்களா’னு கேட்டார். அதனால, எனக்கு இது மறக்கமுடியாத புரொஜெக்ட்...’’ என விஜய் நெகிழ, ‘‘சரி, ஆரம்பத்துல இருந்து இப்பவரை நடிப்பைப் பத்தி எவ்வளவு கத்துக்கிட்டீங்க?’’ என அடுத்த கேள்வியைக் கேட்டார் பவித்ரா.
‘‘ஆரம்பத்துல கேமராகூட பார்க்கத் தெரியாது. இப்ப நிறைய பேர் நான் நடிக்கிற சீன்களைப் பாராட்டி வாழ்த்துறாங்க. சமீபத்துல எங்க வெளியில் போனாலும் ‘மகராசி’ தமிழ்னு மக்கள் அடையாளம் கண்டு ஆர்வம் காட்டி பேசுறாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு...’’ என்ற விஜய், ‘‘சரி நான் உங்களைக் கேட்கறேன்...’’ என பவித்ராவிடம் கேள்வியைத் திருப்பினார். ‘‘மகராசி குடும்பத்துல நெகட்டிவ் ரோலாக சேர்ந்திருக்கீங்க. எப்படி ஃபீல் பண்றீங்க?’’ என்றார்.
‘‘இது எனக்கு முதல் புரொஜெக்ட் கிடையாது. மற்ற சேனல்கள்ல ஏற்கனவே பண்ணியிருக்கேன். ஆனா, இதில் உள்ளே வரும்போது நான் புதுசுனு யாரும் என்னை ஃபீல் பண்ண வைக்கல. எல்லோரும் ரொம்ப ஜோவியலா, குடும்பம் மாதிரி பழகினாங்க. சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுல இருந்து எல்லோருமே நல்லா பேசினாங்க. என்னைப் பொறுத்தவரை ஆயிரம் எபிசோடுகளைத் தாண்டி இந்த ஜர்னி தொடரணும்னு விரும்புறேன்...’’ என உற்சாகமாகச் சொன்னார் பவித்ரா.
அடுத்து, கதிரவன் கேரக்டரில் நடிக்கும் ரவிசங்கரிடம் பேசினோம். ‘‘நான் ஹீரோவுக்கு தாய்மாமாவாக நடிக்கிறேன். வீட்டுல என்ன நடந்தாலும் என்கிட்ட கேட்டு பண்றமாதிரி ஒரு முக்கியமான கேரக்டர். எல்லா ஆர்ட்டிஸ்ட்களும் நிறைய ஈடுபாட்டுடன் பண்றாங்க. கதையும் ரொம்ப இன்ட்ரஸ்ட்டானது.
அதனால, இந்த சீரியல் இப்ப வெளிமாநிலங்கள்ல ரீமேக்காகி ப்ரைம் டைம் ஸ்லாட்ல போயிட்டு இருக்கு. மக்கள் ஆதரவால் விரைவில் ஆயிரம் எபிசோடுகளை எட்டிடுவோம்...’’ என ரவிசங்கர் முடிக்க, ஹீரோவின் அப்பாவாக சிதம்பரம் கேரக்டரில் வரும் நடிகர் ‘பூவிலங்கு’ மோகனும், அம்மாவாக செண்பகம் கேரக்டரில் நடிக்கும் நடிகை ஸ்ரீரஞ்சினியும் ஷாட் முடித்து வந்தனர்.
‘‘ரொம்ப சந்தோஷமா இருக்கோம். விரைவில் எங்க ‘மகராசி’ சீரியல் ஆயிரம் எபிசோடுகளைக் கடந்திடும். எங்க டீமே அவ்வளவு ஜாலியாக இருக்கு...’’ என ‘பூவிலங்கு’ மோகன் சொல்ல, அதை ஆமோதிக்கிறார் ஸ்ரீரஞ்சினி.
‘‘கண்டிப்பாக மோகன் சார். இது ரொம்ப ஹேப்பியான டிராவல். நல்ல ஃப்ரண்ட்ஷிப் கிடைச்சிருக்கு. அருமையான ஸ்டோரி. ஒவ்வொரு சீனும் சிறப்பா வந்திட்டு இருக்கு. சார் கூட நான் முதல்முறையாக நடிக்கிறேன்...’’ என ரஞ்சினி நிறுத்தவும், ‘‘பொதுவாக, சீரியல் என்பது பெண்கள் சார்ந்ததுதான். ஆனா, இதுல ஒவ்வொரு கேரக்டரும் அவ்வளவு அழகாக ஷேப் பண்ணியிருக்காங்க. இல்லையா?’’ என மோகன் சிரித்தபடி தொடர்ந்தார்.
‘‘இந்த சீரியல் பிரமாதமாக டேக்ஆஃப் ஆச்சு. கொரோனா வந்ததால சிலருக்கு சூழ்நிலையால் ஷூட்டிங் அட்டெண்ட் பண்ணமுடியல. இந்த மாதிரி மெகா புரொஜெக்ட்ஸ்ல ஆர்ட்டிஸ்ட்கள் வேலை செய்றது ராணுவத்துல வேலை செய்கிற மாதிரியானதுதான். வேறு தொழில்கள்ல உடல்நிலை சரியில்லனா லீவு போடலாம்.
ஆனா, இந்தத் தொழில்ல ஒரு சீரியல்னு தொடங்கியாச்சுனா அந்தக் கேரக்டர் இருந்தாகணும். ரெண்டு நாள் வரலனா வேறு சீன்களை எடுத்து அட்ஜஸ்ட் பண்ணலாம். ஆனா, நீண்ட நாட்கள்னா கஷ்டம். அப்படியான நிலைமையில்தான் என்னையும் ஸ்ரீரஞ்சினியையும் கேட்கறாங்க. நூறு எபிசோடுகளைத் தாண்டியபிறகு சேர்ந்தோம். இப்ப ஒரு குடும்பமாகிட்டோம்...’’ என்கிற மோகனைத் தொடர்ந்தார் ஸ்ரீரஞ்சினி.
‘‘நான் இந்த சீரியல்ல கமிட் ஆனது ஓவர்நைட்ல நடந்தது. எனக்கு பண்ணலாமா வேண்டாமானு ஒரே குழப்பம். கொரோனா நேரம். அப்ப வெளியிலிருந்து வீட்டு வேலைக்கு யாரையும் வச்சுக்க முடியல. நானே சமையலை முடிச்சிட்டு, பசங்களுக்கு கபசுர குடிநீர் எல்லாம் போட்டு வச்சிட்டு கிளம்பறது சவாலாக இருந்தது. என் மகன்தான் என்னை டிராப் பண்ணிட்டு அழைச்சிட்டு போவான்.
நாங்க வரும்போது முதல்நாளே அறுபதாம் கல்யாண சீன்ல என்ட்ரி கொடுத்தோம்...’’ என்ற ஸ்ரீரஞ்சினி, ‘‘அது ஞாபகம் இருக்கா மோகன் சார்?’’ எனப் புன்னகைத்தார். ‘‘நல்லா ஞாபகம் இருக்கு. அப்ப நாங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரியான கலர்ல டிரஸ் போட்டிருந்தோம். இது நல்லாயிருக்கேனு நிறைய பேர் கமென்ட்ஸ் சொன்னாங்க. அதுல இருந்து நாங்க ஒரே கலர் காஸ்டியூம்ஸைத் தொடர ஆரம்பிச்சிட்டோம்.
‘மகராசி’ சீரியல்ல செண்பகம், கோமதி, பாரதி, புவி, தமிழ்னு இந்த குடும்பம் அவ்வளவு பிரமாதமானது. அதேபோல இயக்குநர்கள், அவங்க குழுவினர், தயாரிப்பாளர் எல்லோரையும் பாராட்டியே ஆகணும். நாங்க ஒரு சீன் முடிச்சிட்டோம்னா ஓய்வெடுக்க முடியும். ஆனா, இயக்குநர்கள் அப்படியிருக்க முடியாது. அடுத்த ஷாட் என்ன, எப்படி வைக்கப் போறோம்னு யோசிச்சிட்டே இருப்பாங்க. ஒவ்வொரு சீனும் பெஸ்ட்டா வர நினைப்பாங்க. இப்படியொரு டீம் வொர்க்தான் ‘மகராசி’ வெற்றிக்குக் காரணம்...’’ என மோகன் முடிக்க, தொடர்ந்து சந்திரிகாவாக நடிக்கும் வந்தனா மைக்கேலிடம் பேசினோம்.
‘‘நான் நார்த் இண்டியன் ரோல்ல நடிக்கிறேன். இந்தமாதிரி கேரக்டர் நான் இதுவரை பண்ணினதில்ல. தோற்றம் ஆகட்டும் நடிப்பு ஆகட்டும் ரொம்ப வித்தியாசமானதாக இருக்குது. எங்க ஹீரோ புவியரசன் கேரக்டர் பண்ற ஆர்யனுக்கு நான் ‘ஸ்நாக் பாபு’னு பெயர் வச்சிருக்கேன். ஏன்னா, எங்க எல்லோருக்கும் நிறைய ஸ்நாக்ஸ் எடுத்திட்டு வருவார். ரொம்ப ஜாலியாக இருப்பார். அப்புறம், பாரதியா வர்ற ஸ்ரீத்திகாவுடன் நான் நிறைய சீரியல்கள் பண்ணியிருக்கேன். அவள் எனக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரண்ட். அப்புறம், மல்லிகா கேரக்டர் பண்ற மௌனிகா, கோமதி கேரக்டர்ல வர்ற ராகவி எல்லோருமே எனக்கு க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ்தான்...’’ என்றார் வந்தனா.
அடுத்ததாக, ‘மகராசி’யின் மகுடங்களான ஆர்யன், ஸ்ரீத்திகாவிடம் பேசினோம். ‘‘மூன்றாண்டுகள் கடந்து பணி செய்திட்டு இருக்கோம். இதுக்குப் பின்னாடி நிறைய பேரின் கடும் உழைப்பு இருக்கு. இத்தனை எபிசோடுகள் தாண்டி எங்களை டிராவல் பண்ண வச்சதுக்கு சன்டிவிக்கும் மக்களுக்கும்தான் நன்றி சொல்லணும்...’’ என எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் சொல்ல, ‘‘நிச்சயமா’’ என அதை ஆமோதித்து தலையாட்டினார் ஸ்ரீத்திகா.
‘‘என்னுடைய பெர்சனல் அனுபவம் என்னனா, ரொமான்ஸ் பண்றது ரொம்ப கஷ்டம்னு நினைச்சு அந்த சீன்ஸ் வரும்போதெல்லாம் ரொம்ப பயப்படுவேன். அப்புறம்தான் தெரிஞ்சது ரொமான்ஸைவிட காமெடி ரொம்ப கஷ்டம்னு...’’ என ஆர்யன் சொல்ல, சட்டென த்திகா, ‘‘அப்ப ரொமான்ஸ்ல முன்னேறிட்டீங்களா...’’ என கலாய்த்தார். ‘‘அப்படினு சொல்ல முடியாது. ஆக்டிங் என்பது லேர்னிங்தானே...’’ என ஆர்யன் பதிலளித்தார். ‘‘சரி, உங்களுக்கு சவாலாக இருக்கிற சீன்கள் அல்லது ரியாக்ஷன்ஸ்னா என்னனு சொல் வீங்க?’’ என ஸ்ரீத்திகாவிடம் கேட்டார் ஆர்யன்.
‘‘சவால் நிறைந்ததுனு பார்த்தால் சிரிக்காமல் நடிக்கிறது. அப்புறம், எமோஷனல் சீன்ஸ்க்கு எல்லாம் கிளிசரின் போடணும். அப்ப ரொம்ப டயர்டு ஆகும். நீங்க என்னை வீட்டைவிட்டு விரட்டுவீங்கல்ல. அந்த சீன்ல எனக்கு எனர்ஜியே போயிடுச்சு. அதனால, இந்தமாதிரியான சீன் எடுக்கிறப்ப ஒரே டேக் போயிட்டால் சிறப்பாக இருக்கும்னு நினைப்பேன்...’’ என்ற ஸ்ரீத்திகாவைத் தொடர்ந்த ஆர்யன், ‘‘நான் டெலிவிஷன்ல ஹீரோவாக பண்றது இதுதான் முதல்முறை. இது என் முதல் சீரியல். இதுல நிறைய கத்துக்க முடியுது...’’ என்றார்.
அவர்களைத் தொடர்ந்து ‘மகராசி’ இயக்குநர்கள் இருவரிடமும் பேசினோம். முதலில் பேசிய இயக்குநர் அருள்ராய், ‘‘நான் ‘சித்தி’ தொடர்ல சி.ஜே.பாஸ்கர்கிட்ட இணை இயக்குநராக வேலை செய்தேன். பிறகு, ‘அண்ணாமலை’, ‘மனைவி’ உள்ளிட்ட நிறைய சீரியல்கள் வேலை செய்தேன். அப்புறம், இயக்குநர் திருமுருகன் சாரிடம், ‘நாதஸ்வரம்’ ஆயிரம் எபிசோடுகள் வொர்க் பண்ணினேன். பிறகு, சன் டிவியில் திருமுருகன் சார் தயாரிப்பில் ‘அந்த பத்து நாட்கள்’, ‘மீண்டும் வருவேன்’ சீரியல்கள் இயக்கினேன்.
அந்த வாய்ப்புதான் எனக்கு ‘வம்சம்’ தொடர் இயக்கும் வாய்ப்பை உருவாக்கித் தந்தது. இப்படி பார்க்கிறப்ப சன் டிவியுடன் முப்பது ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பு இருக்கு. சன் டிவிக்கு நன்றி சொல்லிக்கிறேன். அடுத்து எனக்கு வாய்ப்பு கொடுத்த என்னுடைய இயக்குநர்கள், ஆசான்களுக்கு நன்றிகள்.
‘மகராசி’யில் 440 எபிசோடுகள்ல வந்தேன். இந்தத் தொடர்ல முக்கிய அம்சம்னா இதனை இரண்டு இயக்குநர்கள் இயக்கிட்டு இருப்பதுதான். பொதுவாக, இரண்டு இயக்குநர்கள் இணைந்துனு சொல்றப்ப நிறைய பொறுமையும் புரிந்துணர்வும் அவசியம். அப்பதான் மென்மையாகக் கொண்டு போகமுடியும். இல்லனா, ஈகோ வந்திடும். அப்படி வராமல் நாங்க ரெண்டுபேரும் ரொம்ப ஃப்ரண்ட்லியாக இந்தத் தொடரை இயக்குறோம்...’’ என்றார். தொடர்ந்து பேசிய இயக்குநர் சுந்தரேஸ்வரன், ‘‘இந்த சீரியல் ஆரம்பிச்சு நான்கு ஆண்டுகள் ஆகிடுச்சு. இந்த வாய்ப்பைக் கொடுத்த சன்டிவிக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி சொல்லிக்கிறேன். இதுக்கு முன்னாடி ‘வள்ளி’ தொடர் பண்ணினேன். இப்ப ‘மகராசி’ பண்றேன்.
இது மதிய சீரியல்ல வெற்றிகரமாக போயிட்டு இருக்கு. அப்புறம், இந்த சீரியல் வெற்றிக்கு காரணம் ஆர்ட்டிஸ்ட்கள் ப்ளஸ் டெக்னீசியன்கள். ஆர்ட்டிஸ்ட்கள் எல்லாரும் புரிஞ்சு நடிக்கிறாங்க. கேமராமேன்கள் சிறப்பா பண்றாங்க. அடுத்து மணிகண்டன் வசனகர்த்தாவாக சிறப்பாக செய்றார். இப்படி எல்லோரின் ஒத்துழைப்பால் வெற்றி கண்டிருக்கோம். ஆதரவு தந்த மக்களுக்கும் நன்றி...’’ என மகிழ்வாகச் சொன்னார் இயக்குநர் சுந்தரேஸ்வரன்.
செய்தி: பேராச்சி கண்ணன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|