தென் இந்திய சினிமாவின் முதல் பெண் எடிட்டர்!



‘‘சினிமாவில் ஒரு லேடி டெக்னீஷியனா தொடர்ந்து இயங்குவது லேசான காரியமில்ல. சினிமாவுக்கு வந்த புதுசுல சில வருடங்கள் வாடகை கட்டவே கஷ்டப்பட்டிருக்கிறேன். பெண்களுக்கு இத்துறை மீது ஆர்வம் இருக்கு.
ஆனால், துணிச்சலா உள்ளே வருவதில்லை. அந்த தயக்கத்துக்கு காரணம், சான்ஸ் கிடைப்பதில்லை. லேடி எடிட்டர் என்றாலே மதிப்பு குறைவுதான். யாரும் நம்பி வாய்ப்பு தருவதில்லை. லேடி எடிட்டர் என்றாலே ஏன் இந்த வேண்டாத வேலை என்ற கண்ணோட்டத்துல பார்க்கிறார்கள். அது நம்முடைய தன்னம்பிக்கையை பதம் பார்க்குமளவுக்கு இருக்கும். அந்த மாதிரி சமயங்களில் தப்பான முடிவு எடுத்துட்டோமானு யோசிச்சதுண்டு.

முன்னணி இயக்குநர்கள் பலரிடம் வாய்ப்பு கேட்டிருக்கிறேன். சில இயக்குநர்கள், முகத்துக்கு நேராகவே லேடி எடிட்டருடன் வேலை செய்ய விருப்பமில்லைனு சொல்லியிருக்காங்க. லேடி எடிட்டராலும் சிறப்பாக எடிட் பண்ணமுடியும் என்று நம்பிக்கை வேணும். எங்களாலும் பண்ண முடியும் என்ற நம்பிக்கை அவ்வளவு எளிதில் வருவதில்லை. இங்கு தொடர்ந்து வேலை செய்வதற்கு ஹிட் தேவைப்படுகிறது...’’ என்று புன்னகைக்கும் எடிட்டர் ப்ரீத்தி மோகன், தென்னிந்திய சினிமாவின் முதல் பெண் எடிட்டர் என்ற பெருமைக்குரியவர்.

ஆக்டிங், காஸ்டியூம் டிசைன் மீதுள்ள ஆர்வத்தால் சினிமாவுக்கு வந்த பெண்கள் மத்தியில் உங்களுக்கு எப்படி எடிட்டிங் துறை மீது ஆர்வம் வந்துச்சு?

அப்பா அட்வகேட். அம்மா பேங்க் ஸ்டாப். அப்பா, கன்னட சினிமா இண்டஸ்ட்ரிக்காக பல வழக்குகளை நடத்தியுள்ளார். அப்படி எங்க ஃபேமிலிக்கு சினிமா டச் ஏற்பட்டுச்சு.
நான் படிச்சது எம்பிஏ. எங்க குடும்பத்துல பலர் அட்வகேட்ஸ். வீட்டுக்கு நான் ஒரே பொண்ணு. நானும் நைன் டூ பைவ் ஜாப் போகணும்னுதான் விரும்பினாங்க. எனக்கு அந்த மாதிரி ஜாப்ல ஆர்வமில்ல. நான் சினிமாவுக்கு வந்தபோது ஆரம்பத்துல அம்மா தயங்கினார். அப்பா சப்போர்ட் பண்ணினார்.

அப்போது நான் ஏழாவது படித்துக்கொண்டிருந்தேன். என்னுடைய ரிலேஷன் ஒருவர் எடிட்டிங் ஸ்டூடியோ வெச்சிருந்தார். அது ஃபிலிமை கட் பண்ணி ஒட்டும் காலம். அங்கேதான் எடிட்டிங்ன்னா என்னன்னு  கத்துக்கிட்டேன். அதிலிருந்து எனக்கு எடிட்டிங் மீது ஆர்வம் அதிகமாச்சு. இப்போது இருக்கிற மாதிரியான கோர்ஸ்கள் அப்போது இல்லை. சின்னச் சின்ன சாப்ட்வேர் மூலம் எடிட்டிங் கத்துக்கிட்டேன். புரபஷனலா ஸ்ரீகர் பிரசாத் சாரிடம் சில காலம் எடிட்டிங் கத்துக்கிட்டேன்.

ஃபிலிம் எடிட்டரா கரியர் எப்போ, எங்கே ஆரம்பிச்சது?

முதன் முதலில் நான் சைன் பண்ணிய படம் ‘தண்டுபாளையம் 4’ என்ற கன்னடப் படம். அந்தப் படத்துக்குப் பிறகு ‘உடும்பறா’ என்ற ஸ்ரீலங்கா படம் பண்ணினேன்.

தமிழில் நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிச்ச ‘மெய்’ என்னுடைய முதல் படம். தொடர்ந்து பிரபுதேவாவின் ‘பொய்க்கால் குதிரை’. சமீபத்துல வரலட்சுமி சரத்குமார் நடிச்ச ‘கொன்றால் பாவம்’ வெளியாச்சு. விரைவில் மஹத், யாஷிகா நடிச்ச ‘இவன்தான் உத்தமன்’, வரலட்சுமி சரத்குமாரின் ‘மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன்’ வெளியாகவுள்ளது. தெலுங்கிலும் ஒரு படம் பண்ணியிருக்கிறேன்.

நீங்கள் ஒர்க் பண்ணிய படங்களில் டெக்னிக்கலி சவாலா எந்தப் படத்துல இருந்துச்சு?

டெக்னிக்கலா பெரிய சேலஞ்ச் இதுவரை வந்ததில்லை. எல்லா படங்களையும் சிறப்பாக எடுத்திருந்தார்கள். ‘கொன்றால் பாவம்’ பொறுத்தவரை இயக்குநர் தயாள் பத்மநாபன் ஷூட் போவதற்கு முன்பே எடிட்டிங் பேட்டர்ன் எப்படி இருக்கணும்னு சொல்லிட்டார். அதனால் டவுட் வரல. படம் முடிந்து என்னுடைய டேபிளுக்கு வந்தபோது எல்லா ஷாட்டும் எடிட்டிங் சென்ஸ்ல இருந்துச்சு.

சில சமயம் என்னுடைய ஃப்ரெண்ட்ஸ் ஹெல்ப் கேட்பாங்க. அந்த மாதிரி ஃப்ரெண்ட்ஸ், தாங்கள் எடிட் பண்ணிய சில படங்களில் நிறைய சேலஞ்ச் இருந்ததால் என்னை கூப்பிடுவாங்க. அந்தப் படங்களில் ஒரு காட்சிக்கு எத்தனை ஷாட் இருந்தால் நல்லா இருக்கும்னு சொல்லி, வழவழ குழகுழன்னு இல்லாம ஷார்ப்பா எடிட் பண்ணிக் கொடுத்திருக்கிறேன்.

நீங்கள் பண்ணும் எடிட்டிங், இயக்குநருக்கு திருப்தியளிக்காதபோது என்ன செய்வீங்க?

‘இவன்தான் உத்தமன்’ பண்ணும்போது நானும் இயக்குநரும் சேர்ந்து ஒரு வெர்ஷன் பண்ணினோம். அது இயக்குநருக்கு திருப்தியா இல்ல. அப்போது, ‘நம்ம இரண்டு பேருடைய ஒப்பீனியன் இல்லாம, உங்க ஸ்டைல் எதுன்னு சொல்லுங்க அதுக்கேத்த மாதிரி ஒரு வெர்ஷன் பண்ணித் தர்றேன். இன்னொண்ணு, என்னுடைய ஸ்டைலில் ஒரு வெர்ஷன்  பண்ணித்தர்றேன். ஃபைனலா இரண்டு வெர்ஷனிலும் நல்லா இருக்கிற ஸ்டைலை ஜாயின் பண்ணிக்கலாம்’னு சொன்னேன். அப்படி இரண்டு வெர்ஷன் பண்ணி இரண்டு வெர்ஷனையும் மிக்ஸ் பண்ணி ஃபைனலா லாக் பண்ணினோம். பெரும்பாலும் இந்த மாதிரி நடக்காது.

எடிட்டிங்ல இப்போது எந்த டூல் ஃபெமிலியரா இருக்கு..?

ப்ரீமியர் ப்ரோ, மூவி மேக்கர்லதான் நான் எடிட்டிங் கத்துக்கிட்டேன். இப்போ, ஆவிட், டாவின்சில ஒர்க் பண்றது பிடிச்சுருக்கு. டாவின்சி ஒர்க் பண்ணும்போது டி.ஐ. பண்ண ஈஸியா இருக்கும். மிக எளிதாக ஃபைனல் புட்டேஜ்க்கு கனெக்ட் பண்ணிடலாம். அந்த வகையில் என்னுடைய ஃபேவரைட் ஆவிட். அதுல சீன்ஸை அரேஞ்ச் பண்றது ஈஸியா இருக்கும். ஃபுட்டேஜ்ல பிரச்னை வந்தா சரி செய்வது ஈஸியா இருக்கும்.

இப்ப டாவின்ஸி டிரெண்ட்ல இருக்கு. டாவின்ஸியை மிக்ஸிங் வரை கொண்டு வந்துள்ளார்கள். எல்லா டிபார்ட்மெண்ட்டும் டாவின்ஸியை யூஸ் பண்ணினால் இம்போர்ட், எக்ஸ்போர்ட் உட்பட பல வேலைகளில் எடிட்டருடைய வேலை ஈஸியாகிவிடும். டாவின்சில ஒரு காட்சியை ஸ்பீடாகக் காட்டியிருந்தால் டிஐ பண்ணும்போதும் அதே ரிசல்ட் கிடைக்கும்.

சிறந்த எடிட்டர் ஒரு படத்துக்கு எப்படி உதவியாக இருக்கிறார்?

சிறந்த எடிட்டர் என்பவர் எல்லா படத்துக்கும் உதவியாக இருப்பார்கள். ஷூட் பண்ணும்போது ஒரு கதையை பிரித்துப் பிரித்துதான் எடுப்பார்கள். அந்தக் கதையை ஒன்றாக்குவது எடிட்டரின் வேலை. கதையை ஒன்றாக்க நல்ல எடிட்டர் கிடைக்கவில்லையென்றால் அந்தக் கதை புரியாமல் போய்விடும்.

எடிட்டருக்கு எது அவசியமாக தெரிந்திருக்க வேண்டும்?

எடிட்டிங் சென்ஸ் தெரிஞ்சிருக்கணும். டெக்னிக்கலா யார் வேண்டுமானாலும் எடிட்டிங் சாப்ட்வேர் கற்றுக்கொண்டு சிறந்து விளங்கமுடியும். எடிட்டிங் சென்ஸ் இருந்தால்தான் ஒரு எமோஷனல் சீன் எந்தளவுக்கு லெங்க்த் இருக்கணும்னு முடிவு செய்ய முடியும். ஒரு சீன் எவ்வளவு இருக்கணும், எந்த மாதிரி சீன் எந்தளவுக்கு இருக்கணும் என்ற முடிவை எடுக்க தெரிஞ்சிருக்கணும்.

சிறந்த எடிட்டிங் என்பதற்கு இலக்கணம் ஏதாவது இருக்கிறதா?

அப்படி எதுவுமில்லை. ஒவ்வொரு படத்துக்கும் இலக்கணம் மாறும். எமோஷனல் படத்துக்கு ஃபாஸ்ட் கட் பண்ணா ஒர்க்கவுட்டாகாது. த்ரில்லர் படத்துக்கு ஸ்லோ கட் பண்ணா ஒர்க் கவுட்டாகாது. படத்துக்கு ஏத்தமாதிரி அந்த மூட்ல எடிட் பண்றதுதான் இலக்கணம்னு சொல்லலாம்.

லேடி எடிட்டருக்கு சினிமாவுல எப்படி வரவேற்பு இருக்கு?

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை நாலைந்து பேர்தான் பெண்கள் எடிட்டிங் துறையில் இருக்கிறோம். சினிமாவுக்கு நான் வந்தபோது லேடி எடிட்டர் என்பதை யாரும் நம்பவில்லை. பெரிய அட்ராக்‌ஷனும் இல்லை. இப்போது அந்தப் பார்வை சிறிதளவு மாறி இருக்கு. சில பேர் லேடி இயக்குநரா என்று வெல்கம் பண்ணவங்க இருக்காங்க. சிலர் லேடி எடிட்டரானு இழுத்துப் பேசியவங்களும் இருக்காங்க. அப்பவே தெரியும் அவங்க கூப்பிட மாட்டாங்கன்னு.

உங்களுக்கு யாருடைய எடிட்டிங் ஸ்டைல் பிடிக்கும்?

ஸ்ரீகர் பிரசாத் சார் எடிட்டிங் பிடிக்கும். ‘பொன்னியின் செல்வன்’ல சார் பிரமாதமா பண்ணியிருந்தார். தனிப்பட்ட விதத்தில் எனக்கு சார் ஒர்க் பண்ணிய ‘துப்பாக்கி’ பிடிக்கும். இடைவேளை காட்சியில் 12 பேரை சுடும் காட்சி வேற லெவல்.

எஸ்.ராஜா