நண்பனுமானவன்...
ஆம். அப்படித்தான் நண்பனாக, தோழனாக அஜித்குமாருக்கு திகழ்ந்தார் பி.எஸ்.மணி. தன் அப்பா என்பதை விட பெஸ்ட் ஃப்ரெண்ட் என்றே அவரை வாழ்நாள் முழுக்க கொண்டாடினார் அஜித். அந்தளவுக்கு இவர்கள் இருவருக்கும் இடையிலான உறவு மணம் வீசியது. குறும்புப் பயலாக தவழ்ந்து கொண்டிருந்த அஜித்தின் கையைப்பிடித்து அவருக்கு நடக்க கற்றுக்கொடுத்தது முதல், தனது முதுமையில் அதே அஜித்தின் கைப்பிடித்து ஒரு முதிர்ந்த குழந்தையாக நடந்தது வரை ஒரு நண்பராகவே வாழ்ந்திருக்கிறார் பி.எஸ்.மணி.
 அதனாலேயே தன் அப்பாவின் மறைவு அஜித்தை ரொம்பவே பாதித்திருக்கிறது என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். அதாவது தனக்கு 23 அறுவை சிகிச்சைகள் நடந்தபோது கொடுத்த வலியை விட அப்பாவின் வெற்றிடம் ஏற்படுத்தப் போகும் வலி அஜித்துக்கு அதிகமாக இருக்கும் என்கிறார்கள். இன்று நாம் பார்க்கும் அஜித்திடம் இருக்கும் பல விஷயங்களுக்கு இன்ஸ்பிரேஷன், சாட்சாத் பி.எஸ்.மணிதான். அஜித்திற்கு சிறு வயதிலிருந்தே, வேகம் அதிகம். பட்டென்று கோபம் வரும். பொசுக்கென்று வார்த்தைகள் வெடிக்கும். நினைத்ததை சாதிக்க வேண்டுமென்ற ஃபோக்கஸ் உண்டு.
 இதையெல்லாம் புரிந்துகொண்டு, அஜித்தை அவர் வழியிலேயே பயணப்பட வழிவகுத்தார். அதனாலேயே இன்று பக்குவப்பட்ட மனிதராக அஜித் காட்சி தருகிறார். படிப்பில் விருப்பம் இல்லை. ஏதாவது ஒரு வேலை பார்க்கப் பிடிக்கவில்லை. இப்படியொரு எண்ணத்துடன் அஜித் தனது வாழ்க்கையில் மெக்கானிக்காகக் களமிறங்கிய போதும், நான் நடிக்கப் போகிறேன் என்று வீட்டில் தனது ஆசையை வெளிப்படுத்திய போதும், நடிப்பு வேண்டாம் மோட்டார் ரேஸ் போதும் என்று அஜித் ரிஸ்க் எடுத்த போதும்... தோள் கொடுத்தவர் அவரது அப்பாதான்.
‘மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதைச் செய்’ என்பதுதான் தன் மகனுக்கு பி.எஸ்.மணி கற்றுக் கொடுத்த பாடம். அதை கசடற கற்றதால்தான் அஜித் இன்று வெளிப்படையாகப் பேசி, செயல்படும் மனிதராக பூத்திருக்கிறார். அஜித் திரையில் ஆடுவதை விட அவர் நடப்பதே ஸ்டைலாக இருக்கும். இந்த நடை, மேனரிசம் எல்லாமே அவரது அப்பாவின் கொடைதான். இப்படி ஒரு அப்பாவாக, ஒரு நண்பராக இருந்ததால் அஜித்திற்கும் அவரது அப்பாவுக்கும் இடையில் உரசல்கள் வந்ததேயில்லை என்கிறார்கள்.
திருமணத்துக்குப் பிறகும் தன் அப்பா, அம்மாவைத் தன்னுடனேயே அஜித் வைத்துக் கொண்டார். தன் கணவரின் தோழரையும், தோழியையும் ஷாலினி ஒரு மகளாக அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். கடந்த நான்கைந்து வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு தன் அப்பா படுத்த படுக்கையானபோது அவரை கைக்குழந்தை போல் அஜித் பராமரித்தார்.
இன்று தன் வாழ்நாள் தோழனை இழந்திருக்கிறார் அஜித். எவ்வளவோ வலிகளைத் தாங்கியவர், இந்த இழப்பின் வலியிலிருந்தும் மீண்டு வருவார். என்றாலும் அப்பாவின் வெற்றிடத்தை, ஒரு தோழனாக தன் பிள்ளைகளிடம் நடந்து கொள்வதன் வழியாகவே அவரால் நிரப்ப முடியும்.நிரப்புவார். அதுதான் அஜித்!
ஜான்சி
|