Must Watch
 பதான் இந்த வருடத்தில் மெகா ஹிட் அடித்த இந்திப்படம், ‘பதான்’. ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. இந்திய அரசு ஜம்மு காஷ்மீர் மீதான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுகிறது. இதனால் கடும் கோபத்துக்கு உள்ளாகிறார் பாகிஸ்தானைச் சேர்ந்த இராணுவ அதிகாரி. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரால் அதிகபட்சம் மூன்று வருடங்கள் மட்டுமே உயிரோடு இருக்க முடியும். அதற்குள் இந்தியாவுக்கு தக்க பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
இதற்காக தீவிரவாத அமைப்பை நடத்தும் ஜிம்முடன் கூட்டு சேர்கிறார் அந்த இராணுவ அதிகாரி. இன்னொரு பக்கம் முன்னாள் இந்திய உளவாளி பதான், நாட்டுக்காக உயிரையே கொடுக்க நினைக்கும் சக உளவாளிகளை வைத்து ஒரு குழுவை உருவாக்குகிறார். பாகிஸ்தானின் சதித் திட்டத்தை பதானின் குழு எப்படி முறியடிக்கிறது என்பதே கதை. லாஜிக்கை மறந்து ஆக்ஷன் படம் பார்க்க விரும்புபவர்களுக்கு செம விருந்து வைத்திருக்கிறது ‘பதான்’. 1048 கோடியை அள்ளி அதிக வசூலை ஈட்டிய இந்திப்படங்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. பதானாக ஷாருக்கானும், ருபாயாக தீபிகா படுகோனும் கலக்கியிருக்கிறார்கள். படத்தின் இயக்குநர் சித்தார்த் ஆனந்த்.
 த மெஜிசியன்’ஸ் எலிபன்ட்
‘நெட்பிளிக்ஸி’ல் டாப் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்திருக்கும் அனிமேஷன் படம் ‘த மெஜிசியன்’ஸ் எலிபன்ட்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. போரினால் அனாதையாக்கப்பட்ட சிறுவன் பீட்டர். அவனை மகன் போல வளர்த்து வருகிறார் வயதான போர் வீரர் ஒருவர். இந்நிலையில் மீன் வாங்க சந்தைக்குப் போகிறான் பீட்டர். அங்கே குறி சொல்லும் பெண்ணைச் சந்திக்கிறான்.
மீன் வாங்க வைத்திருந்த காசை குறி சொல்லும் பெண்ணிடம் கொடுத்து, தன் குடும்பத்துக்கு என்ன நேர்ந்தது என்று கேட்கிறான் பீட்டர். இறந்து போய்விட்டாள் என்று நினைத்துக்கொண்டிருந்த அவனுடைய தங்கை உயிருடன் இருப்பதாக குறி சொல்கிறாள் அந்தப் பெண். பீட்டரின் தங்கை இருக்கும் இடத்துக்கு ஒரு யானைதான் வழிகாட்டும் என்கிறாள். உற்சாகமடையும் பீட்டர் யானையைத் தேடுகிறான். ஒரு மெஜிசியன் தன் மேஜிக் மூலம் ஒரு யானையைக் கொண்டு வருகிறான்.
அந்த யானையின் துணையுடன் தன் தங்கையை எப்படி பீட்டர் கண்டுபிடிக்கிறான் என்பதே திரைக்கதை. குழந்தைகளுடன் சேர்ந்து பார்க்க ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெண்டி ரோஜர்ஸ்.
சோர் நிகல் கே பாகா
கடந்த வாரம் ‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் இந்திப்படம், ‘சோர் நிகல் கே பாகா’. தமிழ் டப்பிங்கில் பார்க்க கிடைக்கிறது. விமானப் பணிப்பெண் நேகா. தான், பணிபுரியும் விமானத்தில் அங்கித்தை சந்திக்கிறாள். இருவருக்கும் இடையில் காதல் மலர்கிறது. திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகின்றனர். இந்நிலையில் அங்கித்துக்கு கோடிக்கணக்கில் கடன் இருப்பது நேகாவுக்குத் தெரிய வருகிறது. கோபமடையும் நேகா அவனை வெறுத்து ஒதுக்குவதில்லை.
கடன் கொடுத்தவர்கள் அங்கித்தை மிரட்டுகின்றனர். நேகா பணிப்பெண்ணாக இருக்கும் விமானத்தில் விலையுயர்ந்த வைரத்தை ஒருவர் எடுத்துச் செல்கிறார். அந்த வைரத்தைக் கொள்ளையடிக்க திட்டமிடுகிறான் அங்கித். அவனுக்கு உதவி செய்கிறாள் நேகா. விமானம் வானில் பறக்கிறது.
வைரத்தை எடுத்துச் செல்பவரைக் கண்டறிந்து அவர் மீது சாப்பாட்டைக் கொட்டிவிடுகிறாள் நேகா. ஆடையைச் சுத்தம் செய்ய அவர் கழிவறைக்குச் செல்கிறார். அந்த நேரம் பார்த்து வைரத்தைத் திருட அங்கித் முயற்சிக்கிறான். அப்போது ஒரு கும்பல் விமானத்தைக் கடத்திவிட, சூடுபிடிக்கிறது திரைக்கதை. எதிர்பாராத திருப்பங்கள் கதையை சுவாரஸ்யமாக்கி படத்துடன் நம்மை ஒன்ற வைக்கின்றன. படத்தின் இயக்குநர் அஜய் சிங்.
பலகம்
தெலுங்குப் படத்துக்கு உரிய எந்தவிதமான மசாலாவும் இல்லாமல் வெளிவந்திருக்கும் படம், ‘பலகம்’. ‘அமேசான் ப்ரைமி’ல் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. அழகான ஒரு கிராமம். அந்த கிராமத்திலேயே மகிழ்ச்சியான, ஜாலியான ஒரு மனிதர் குமரய்யா. அவருடைய வாரிசுகளுக்கிடையில் அவ்வளவாக ஒற்றுமை இல்லை. குமரய்யாவின் பேரன் சைலு. பல பிசினஸ்கள் செய்தும் கடனாளியாக இருக்கிறான். கடன் கொடுத்தவர்கள் அவனை மிரட்டுகின்றனர். அவனுக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது. பெண் வீட்டாரிடமிருந்து வரதட்சணை வாங்கி கடனை அடைத்துவிட்டு நிம்மதியாக இருக்கலாம் என்று திட்டமிடுகிறான் சைலு.
இந்நிலையில் அவனது தாத்தா திடீரென இறந்துவிடுகிறார். சைலுவின் திருமணம் தள்ளிப்போகிறது. குமரய்யாவின் மரணத்துக்குப் பிறகு ஊரில் நடக்கும் சம்பவங்களும், அவரது வாரிசு மற்றும் உறவினர்களுக்கு இடையில் நிகழும் நிகழ்வுகளும்தான் திரைக்கதை. அசலான கிராமத்து வாழ்க்கையினூடாக மனித உறவுகளுக்கிடையிலான ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என்று அழுத்தமாகச் சித்தரித்திருக்கிறது இந்தப் படம். கதாபாத்திரங்களின் தேர்வும், நடிப்பும் கச்சிதம். குடும்பத்துடன் பார்க்கவேண்டிய இப்படத்தின் இயக்குநர் வேணு யேல்தண்டி.
தொகுப்பு: த.சக்திவேல்
|