கொடம்புளி, நெல்லிக்காபற்பொடி,அடுப்பில்லா ஆதி சமையல்...
‘‘அதும்பேரு கொடம்புளிங்க. மரத்துல ஆரஞ்சுப் பழம் எப்படியிருக்கும்..? அப்படித்தான் இதுவும் இருக்கும். உரிச்சுக் காய வச்சா பழுப்பு நிறத்துல மாறிடும். அதையே அடுப்புல புகைபோட்டு அதுமேல கயித்துல கட்டித் தொங்கவிட்டுடணும். இரண்டு நாள்ல காய்ஞ்சு இப்படி கருப்பு கலர்ல மாறிடும். நம்ம குழம்பு, ரசத்துக்கு இதை ஒரு துளி கிள்ளிப் போட்டுட்டா போதும்.
 அதோட புளிப்பு சுவை நம்ம ஊர் கொடுக்காப் புளியத் தூக்கிச் சாப்பிட்டுடும். அதிலும் மீன்குழம்பு தூக்கலா இருக்கும். கேரளாக்காரங்க எல்லாம் புளிப்புக்கு பதில் இதைத்தான் யூஸ் பண்றாங்க. கொலஸ்ட்ரால், பிபி, சுகர் உள்ளவங்க நம்ம புளி சேர்த்துக்கக் கூடாதுன்னு டாக்டர்கள் சொல்லுவாங்க. ஆனா, இந்தப்புளியஎல்லோரும் சமையல்ல பயன்படுத்தி சாப்பிடலாம்!’’
 பேசியவர் பெயர் ஜெயலட்சுமி. கேரள தமிழக எல்லையான கோவை, வேலந்தாவளம் பகுதியிலிருந்து வந்து கடை விரித்திருந்தார். அடுப்புக்கரி குவித்து வைத்தது போல கரேலென்று இருந்த ஒன்றைத்தான் கொடம்புளி என்று வருபவர்களுக்கு விவரித்துக் கொண்டிருந்தார். கூடவே இவர் மாங்காய், எலுமிச்சை, பூண்டு, நெல்லி, நாரத்தங்காய் என சகல ஊறுகாய் தொக்குகளும் வைத்திருந்தார். பழநி பஞ்சாமிர்தத்தை தூக்கிச் சாப்பிடும் பஞ்சாமிர்தமும் அங்கே இருந்தது. எல்லாமே ஹோம்மேடு. அவர் மகள் கூடமாட உதவிக்கு இருந்தார்.
 அவரை அடுத்து கடைவிரித்திருந்தவர் இளங்கோவன். தஞ்சாவூர், அம்மாபேட்டை, புளியக்குடியிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார். இவர் தன் முன்பு தேன் நெல்லி, நாட்டுத் தக்காளியில் ஊறப் போட்ட நெல்லிக்காய், நெல்லிகாரப்பொடி, நெல்லி மிளகு உப்புப் பொடி, நெல்லி பற்பொடி, நெல்லி வற்றல், வெறும் நெல்லிப் பொடி என நெல்லியிலே மதிப்புக் கூட்டப்பட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பொருட்களை வைத்திருந்தார். அதனுடன் சிறுதானிய சத்துமாவுகள் வேறு.
‘‘இதை விற்று நான் ஒண்ணும் பொருளாதார வளர்ச்சியடையலை. ஆனா, இதை வாங்கிச் சாப்பிட்ட பலபேர் வந்து, ‘உங்ககிட்ட வாங்கின தேன் நெல்லிக்காய் சாப்பிட்டேன். என் ஹீமோகுளோபின் அளவு அதிகரிச்சிருக்கு. சிறுதானிய சத்துமாவு சாப்பிட்டேன். பசி வந்தா வர்ற வெடவெடப்பு இப்ப இல்லவே இல்லை.
ஒருபக்கத் தலைவலிக்காக பல லட்சங்கள் செலவு பண்ணியிருக்கேன். குணமாகலை. ஆனா, உங்க நெல்லி வற்றல் ரெண்டு மாசம் சாப்பிட்டேன். இப்ப தலைவலியே வர்றதில்லை!’ எனச் சொல்லும்போது மனசுக்கு இதமா இருக்கு. இப்படி என் நெல்லிப் பொருட்களை சாப்பிட்டு நோய் குணமானவங்க ஆயிரக்கணக்கில்!’’ என பூரிப்போடு சொல்கிறார். இவர்களுக்கு நடுவே அடுப்பில்லா சமையல் என்று சொல்லி, சிறுதானிய உணவுகளைத் தந்து கொண்டிருந்தார் ஒரு அம்மணி. பெயர் நிர்மலாஸ்ரீ. அடுப்பில்லாமலே சாம்பார், ரசம், பொரியல் ஒருபக்கம். ரோஸ் மில்க், பன்னீர் மில்க், பட்டர்மில்க், தேங்காய் கருப்பட்டி உருண்டை, எள் உருண்டை என்று இன்னொரு பக்கம். ஆளாளுக்கு வந்து வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
‘‘இதுக்குப் பேரே ஆதிச்சமையல்.
சூரிய சக்தியில் அடுப்பே இல்லாமல் ஆயிரம் வகை சமையல்களை செய்வேன். வேக வைக்காத இந்த உணவின் மூலம் காய்கறி, கிழங்குகள், பழவகை, தானியங்களில் உள்ள உயிர்ச்சத்து அப்படியே கிடைக்கிறது! கோவை ஆர்.எஸ்.புரத்தில் இதற்காக ஷாப்திறந்திருக்கிறோம். ஒவ்வொரு நாளும் பத்து முதல் இருபது அயிட்டங்கள் செய்கிறோம். நேரில் வந்து பாருங்க!’’ என்றார் நிர்மலாஸ்ரீ. சித்ரா என்பவர் தோட்டங்காட்டுக்காரர். தொழிலதிபரும் கூட. எக்கோ ஃப்ரண்ட்லி காயர் புராடக்ட்ஸ் என்ற பெயரில் தென்னைநார்க்கழிவுகள் மூலம் ஏகப்பட்ட பொருட்களை செய்து வைத்திருந்தார். அதைச் செய்வதெப்படி என்று பயிற்சியும் கொடுப்பதாகச் சொன்னார். இதேபோல் கடலை உருண்டை, எள்ளு உருண்டை, மணத்தக்காளிக் கீரை, பதநீர் எனப்படும் நீரா பானத்தில் செய்த பல்வேறு பொருட்கள், மண்பானை, மூங்கில் பொருட்கள் பனைப் பொருட்கள்... இப்படி குறைந்தபட்சம் நாற்பதுக்கும் மேற்பட்ட கடைகள் விரிக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு கடையில் பேசினாலும் ஒவ்வொரு விதமான கதைகள்.
வாரச்சந்தைகள் தெரியும், உழவர் சந்தைகள் அறிவோம். கூட்டுறவு சந்தைகள் கூட பார்த்திருக்கிறோம். இரசாயனமில்லா விளைபொருட்கள், உற்பத்திப் பொருட்கள், உணவுப் பதார்த்தங்கள் மட்டுமே விற்கப்படும் ஒரு சந்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோமா?
அதற்காகவே இந்த சந்தை கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் மாதந்தோறும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை கூடுகிறது. அங்கே ‘நம்ம ஊரு சந்தை’ என்ற பெயரில் தமது பொருட்களை கடைவிரித்து வியாபாரம் செய்கிறார்கள் இயற்கை நல விரும்பிகள்.
இப்பொழுதெல்லாம் கோவைக்காரர்கள் மற்ற சந்தைக்குப் போகிறார்களோ இல்லையோ, மாதத்தில் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த சந்தைக்கு பையை, பாத்திரத்தை தூக்கிக்கொண்டு (பாத்திரம் எண்ணெய், நெய், ஊறுகாய் போன்ற பொருட்கள் வாங்க. ஏனென்றால் இங்கே பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் அனுமதி கிடையாது) புறப்பட்டு விடுகிறார்கள். அப்படி கடந்த இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலையில் கூடின சந்தையில் நிறைந்திருந்த பொருட்கள் மதிய வாக்கில் 80 சதவீதம் காலியாகி விட்டன. இங்கே பர்ச்சேஸ் செய்ய வந்திருந்த உமர் என்பவரிடம் பேசினோம். ‘‘இந்த சந்தையைப் பற்றி அடிக்கடி பேப்பர்ல செய்தி வரும். அதைப் பார்த்துட்டுதான் வர ஆரம்பிச்சேன். எனக்கு இயல்பாகவே ஆர்கானிக் உணவுகள், கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் மேல எல்லாம் இன்ட்ரஸ்ட். என்ன புதுசா வந்திருக்குன்னு பார்த்துட்டு அதை வாங்கிட்டுப் போவேன்.
இப்ப இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைய மறந்தாலும் இந்த சந்தையை மறக்க முடியறதில்லை. அதனால் வந்துடறேன். வீட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களில் பத்து சதவீதம் இங்கேதான் வாங்கறேன்!’’ என்றார். இந்த சந்தையை ஆரம்பித்து ஒருங்கிணைப்பவர்கள் இயல்வாகை என்கிற சூழலியல் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அதன் பொறுப்பாளர் அழகேஸ்வரி. இவரும் குடும்பத்துடன் வந்து இங்கே சிறுதானியக்கடை விரித்திருந்தார். கணவர் கடையில் பிசியாக இருக்க, இவரே நம்மிடம் பேசினார்.
‘‘நம்மாழ்வாரைச் சந்தித்த பின் அவரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டோம். அதில் முக்கியமா உணவுப் பொருட்கள், அதில் உள்ள அரசியல், அதை கத்துகிட்டு நாங்க சந்திக்கிற மனிதர்கள்கிட்ட, பள்ளி, கல்லூரி மாணவர்கள்கிட்ட, குழந்தைகள்கிட்டன்னு கொண்டு போக ஆரம்பித்தோம். அதில் வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், காய்கறித் தோட்டம் எல்லாம் போட்டுக் கொடுத்தோம். நம் நாட்டு விதைகளை பயன்படுத்த வேண்டிய அவசியம்; நஞ்சில்லா உணவுப் பொருட்களை நாமே உற்பத்தி பண்ணி தற்சார்பா மாறிக்க வேண்டிய சூழ்நிலை பற்றியெல்லாம் வீடு வீடா போய் சொன்னோம்.
இது அப்படியே பக்கத்துப் பக்கத்து வீடுகளில், பக்கத்து ஊர்களில், மாவட்டங்களில், பிறகு தமிழ்நாடு முழுக்கன்னு பரவ ஆரம்பித்தது. நாங்க திருப்பூர் ஊத்துக்குளியில் இருக்கிறோம். இப்ப எங்களிடம் கத்துக்கிட்டு இயற்கை வேளாண்மையில் ஈடுபடறவங்க தமிழ்நாடு முழுக்க இருக்காங்க. இவர்கள் விளைவித்த மதிப்புக்கூட்டிய பொருட்களை சந்தைப்படுத்த ஒரு அடையாளம் தேவைப்பட்டது.
ஏற்கனவே இயல்வாகை என்றொரு அமைப்பை நிறுவியிருந்தோம். அதன் மூலமே இதையும் செயல்படுத்த ஆரம்பித்தோம். இந்த அமைப்பு எண்டோ சல்பானுக்கு தடைகோரி முதன்முதலாக ஒரு மக்கள் இயக்கத்தை நடத்தியது. அதற்குப் பிறகு நம்மாழ்வார் அய்யா எழுதின புத்தகங்களை சின்னச் சின்னதா பதிப்பிக்கவும் ஆரம்பித்தோம்.
அதோட இந்த ஆர்கானிக் பொருட்களை சந்தைப்படுத்தவும் இதையே பயன்படுத்துவது என முடிவு செய்தோம். நண்பர்கள் எல்லாம் சேர்ந்து யோசித்து நான்கு வருஷம் முன்னால திருப்பூர்ல இந்த சந்தையை ஆரம்பித்தோம்.
அதுக்கு அங்கே மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் இடம் தந்து உதவியது. அப்புறம் கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் விஜய்கார்த்திகேயன் உதவி பெற்று இங்கே தொடங்கினோம். நல்ல முன்னேற்றம்.
இடையில் கொரோனா காலத்தில் நின்று போனது. இப்ப திரும்ப இரண்டு மாசமாக நடத்தறோம். கொரானாவுக்குப் பிறகு நிறைய ஆர்கானிக் சென்டர்கள் வந்துவிட்டன. ஆனாலும் எங்களுக்கு போன் மேல போன். ‘உங்க சந்தையில போல ஆர்கானிக் கடைகளில் பொருட்கள் தரமானது இல்லை. நீங்க எப்போ சந்தை திறப்பீங்க’ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. அதுதான் திரும்ப மாநகராட்சி ஆணையர், கல்வி அலுவலர் உதவியோட இங்கே தொடங்கினோம்!’’ என்றவர், தொடர்ந்து, ‘‘இப்ப இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் சந்தை நடக்கிறது. அடுத்தது நான்காவது ஞாயிற்றுக்கிழமையும் நடத்த உள்ளோம்.
இங்கே சந்தை போட எல்லோரையும் அனுமதிப்பதில்லை. இங்கே கடை போட விருப்பப்பட்டால் அவங்க லெட்டர் கொடுக்கணும். அவங்க தோட்டத்துக்கே போய் பார்த்துட்டுதான் இங்கே அனுமதி கொடுக்கறோம். இங்கே வாடகை எதுவுமில்லை. செலவுகள் மட்டும்தான். அதை சந்தை வியாபாரிகள் பகிர்ந்துக்கிறோம். அதிகபட்சமே ஒரு கடைக்கு ஐநூறு ரூபாய்தான் செலவு. வாடகை வாங்கிட்டு ஸ்டாலுக்கு அனுமதி தர்றதுங்கிற பேச்சுக்கே இடமில்லை. இங்கே வர்ற உற்பத்தியாளர்கள் தம் பொருளை தரமா பார்த்துக்கணும். அதை மீறி வேற பொருள் கொண்டு வந்து வச்சா, அவங்களை உடனே வெளியேற்றிடறோம்.
அப்படி பலபேர் வெளியே போயிருக்காங்க. சண்டைக்கும் வந்திருக்காங்க. அவங்களை எல்லாம் பொருட்படுத்தறதே இல்லை. எங்களுக்கு இந்த ஃபீடு பேக் கிடைக்கிறதுக்கு காரணமே ஆர்கானிக் மீறி எந்த காம்ப்ரமைஸும் பண்ணிக்காம இருக்கறதுதான்!’’ என்று தெரிவித்தார்.மாதம் ஒரு முறை என்றாலும் சந்தை நாளன்று குறைந்தபட்சம் நாற்பது வியாபாரிகள் குழுமி விடுகிறார்களாம். அவர்கள் ஏற்கனவே சோதித்த பொருட்கள் தவிர வேறு கொண்டு வந்தால் உள்ளே அனுமதியே இல்லையாம். அப்படி வெளியேற்றப்பட்ட ஆட்கள் சண்டைக்கும் வந்துள்ளார்களாம்!
கா.சு.வேலாயுதன்
|