ஆஸ்கர் வாங்குவது எப்படி?



அமெரிக்காவைச் சேர்ந்த ‘அகடமி ஆஃப் மோஷன் பிக்சர் அண்ட் சயின்சஸ்’ எனும் அமைப்பினால் வழங்கப்படும் ஒரு விருதுதான் ஆஸ்கர். அதாவது இந்தியாவில் வழங்கப்படும் தேசிய விருது போன்றது இது. ஆனால், ஒவ்வொரு வருடமும் ஆஸ்கர் விருது வழங்கும்போது அமெரிக்காவில் பிரச்னை வெடிக்கிறதோ இல்லையோ, இந்தியாவில் நிச்சயமாக பிரச்னைகள் வெடிக்கும்.
ஏன் இந்தப் படத்துக்கு ஆஸ்கர் கொடுத்தார்கள்... ஏன் இந்தப் படத்துக்குக் கொடுக்கவில்லை... இந்தப் பாட்டு ஆஸ்கருக்குத் தகுதியே இல்லை... போன்ற விவாதங்கள் டீக்கடை பெஞ்சிலிருந்து, சமூக வலைத்தளங்கள் வரை எல்லா இடங்களிலும் அரங்கேறும்.

இந்த ஆண்டு ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு...’ பாடலும், ‘த எலிபண்ட் விஸ்பரர்ஸ்’ ஆவணக் குறும்படமும் ஆஸ்கரைத் தட்டியபோது இதுதான் நிகழ்ந்தது. இந்நிலையில் ஆஸ்கர் விருதுக்கான பின்னணிகளைப் பார்ப்பது அவசியமாகிறது.

வரலாறு

‘அகடமி ஆஃப் மோஷன் பிக்சர் அண்ட் சயின்சஸ்’ அல்லது ‘த அகடமி’ என்ற அமைப்பு உருவாகக் காரணமாக இருந்தவர் லூயிஸ் மேயர். புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான ‘எம்ஜிஎம்’மின் நிறுவனர் இவர். சமீபத்தில் ‘எம்ஜிஎம்’மை ‘அமேசான்’ நிறுவனம் கைப்பற்றியது தனிக்கதை.

‘‘சினிமா தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைத் தொழிற்சங்கங்களின் தலையீடு இல்லாமல் தீர்த்து வைக்க ஓர் அமைப்பு வேண்டும். அத்துடன் சினிமாத்துறையின் மீது இருக்கும் எண்ணங்களை மேம்படுத்த வேண்டும்...’’ என்ற நோக்கத்தில் 1927ம் வருடம் ஹாலிவுட்டின் பெரும்புள்ளிகளைச் சந்தித்தார் மேயர்.

ஒரு ஹோட்டலில் பெருவிருந்துடன் அமைப்பு உருவாக்கம் குறித்த கலந்துரையாடல் நடந்தது. இதை மேயர்தான் ஒருங்கிணைத்தார். இதில் ஹாலிவுட்டைச் சேர்ந்த 36 முக்கிய நபர்கள் கலந்துகொண்டனர். அப்போது ஆஸ்கர் விருது குறித்து அவர்கள் எதுவும் பேசவில்லை. காரணம், சினிமா தொழிலாளர்கள் குறித்து மட்டுமே உரையாடல் நிகழ்ந்தது. இந்தச் சந்திப்பு வெற்றிகரமாக முடிந்தது.

சில நாட்கள் கழித்து, அதாவது 1927ம் வருடம், மே 11ம் தேதி ‘அகடமி ஆஃப் மோஷன்  பிக்சர் அண்ட் சயின்சஸ்’ எனும் அமைப்பு உருவானது. சினிமாத்துறையைச் சேர்ந்த நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமே இந்த அமைப்பில் உறுப்பினர்களாகச் சேர முடியும் என்பது விதிமுறை.
அமைப்பு உருவாகி ஒரு வருடம் கழித்துதான் அகடமி விருது எனும் ஆஸ்கர் குறித்தான விவாதங்கள் நடந்தன.  

அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் சிறந்த படம், சிறந்த நடிகர் உட்பட 12 விதமான துறைகளுக்கு விருதுகள் வழங்கலாம் என்று ஒப்புதல் அளித்தனர். பிப்ரவரி, 1928ல் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்தவர்களுக்கு தந்தி மூலம் தகவல் அனுப்பப்பட்டது. ஆகஸ்ட், 1928ல் வெற்றியாளர்களைத் தேர்வு செய்யச்சொல்லி ‘அகடமி சென்ட்ரல் போர்டு ஆஃப் ஜட்ஜஸ்’க்கு உத்தரவிட்டார் மேயர்.

அகடமியின் முக்கியப் புள்ளிகளான மேயர் உட்பட ஐந்து பேர் சிறந்த படத்தைத் தேர்வு செய்தனர். மே 16, 1929இல் முதல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா அரங்கேறியது. இந்த விழா 95 வருடங்களாகத் தொடர்கிறது.

ரகசிய வரலாறு

ஆஸ்கர் விருதுப் பின்னணி குறித்து பல புத்தகங்களும், கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. அவற்றில் பெரும்பாலானோர் முன்வைக்கும் ரகசியம் இது.ஹாலிவுட்டின் பிரபல தயாரிப்பாளரான லூயிஸ் மேயரின் ஊழல் விளையாட்டுதான் இது என்கின்றனர். அவர் பிரமாண்டமாக ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தார். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு உரிய கூலியை மேயர் வழங்கவில்லை. இவர்களுக்கு இது போதும் என்று மிகக்குறைவான கூலியைக் கொடுத்தார்.

இந்தச் சம்பவம் தொழிலாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போதே அமெரிக்காவில் தொழிற்சங்கங்கள் உருவாகியிருந்தன. மேயரின் கட்டடத்தில் வேலை செய்தவர்கள், ‘‘எங்களுக்கு உரிய கூலியைக் கொடுக்கவில்லை என்றால் எங்களுக்கான தொழிற்சங்கம் மூலம் முறையிடுவோம்...’’ என்று மேயரிடம் முறையிட்டனர். தொழிற்சங்கத்தைப் பற்றியும், அதன் வலிமையைப் பற்றியும் மேயருக்கு எதுவும் தெரியவில்லை. அதனால் ‘‘நீங்கள் கேட்கும் கூலியை எல்லாம் கொடுக்க முடியாது. நான் தருவதை வாங்கிக்கொள்ளுங்கள்...’’ என்று
திமிராக பதில் சொன்னார்.

‘‘இந்தக் கூலிக்கு எங்களால் வேலை செய்ய முடியாது...’’ என்று கட்டுமானத் தொழிலாளர்களும் கம்பீரமாக மேயருக்கு பதில் சொன்னதோடு, வேலையையும் நிறுத்திவிட்டனர். பயந்துபோன மேயர், தொழிலாளர்களுக்கு உரிய கூலியைக் கொடுத்தபிறகே, வீடு கட்டும் வேலை தொடர்ந்தது. இந்த தொழிற்சங்கம் மேயரை உறங்கவிடவில்லை. அவரது சிந்தனையை ஆட்டிப்படைத்தது. ஒருவேளை நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு சங்கத்தை ஆரம்பித்து தங்களுக்கு உரிய சம்பளத்தைக் கேட்டுவிட்டால் தனக்குப் பெரிய பிரச்னையாகிவிடுமே என்று மேயர் நினைத்தார்.

அதனால் தன்னைப் போன்ற பெரிய தயாரிப்பாளர்களை அழைத்து ரகசியமாக ஒரு கலந்துரையாடலை நடத்தினார். சினிமாத் துறையினர் தொழிற்சங்கத்தை ஆரம்பித்துவிட்டால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படப்போகும் நஷ்டத்தைக் குறித்தும், தொழிற்சங்கத்தைத் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் விவாதம் நிகழ்ந்தது. சினிமா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் ஆரம்பிப்பதற்கு முன்பாக, நாமே ஒரு அமைப்பை உருவாக்கிவிட்டால் தொழிற்சங்கங்கள் சினிமாவுக்குள் நுழைய முடியாது என்று ‘‘அகடமி ஆஃப் மோஷன் பிக்சர் அண்ட் சயின்சஸ்’ அமைப்பை உருவாக்கினார் மேயர்.

சினிமாவில் பணியாற்றுபவர்களுக்கு பணத்தைவிட புகழ்தான் முக்கியம். புகழ் கிடைத்துவிட்டால் அவர்கள் வருமானத்தைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார்கள். புதிதாக உருவாக்கப்பட்ட அமைப்பின் மூலமாக விருதை வழங்கினால் அது அமைப்புக்கும் பெருமை என்ற மேயரின் ஆலோசனையின்படி உருவாக்கப்பட்டதுதான் ‘அகடமி’ விருது.
காலப்போக்கில் இந்த அமைப்பு உருவானதற்கான காரணங்கள் காணாமல் போனதும், அகடமி விருது திரைப்படத் துறையிலேயே உயர்ந்த கௌவரமாக நிலை பெற்றதும் தனிக்கதை.

ஆஸ்கர் விருது

அகடமி விருதுதான் பின்னாட்களில் ஆஸ்கராக மாறியது. இப்படி பெயர் மாற்றம் அடைந்ததற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன.

விருது வடிவமைப்பு

மேயரின் வேண்டுகோளுக்கு இணங்க ‘எம்ஜிஎம்’மின் கலை இயக்குனர் செட்ரிக் கிப்பன்ஸ் ஆஸ்கர் விருதை வடிவமைத்தார்.

உறுப்பினர்கள்

‘த அகடமி’யில் உறுப்பினர்களாக இருப்பவர்கள்தான் ஆஸ்கர் விருதை தேர்ந்தெடுப்பதில் முக்கியப்பங்கு வகிக்கின்றனர். 2020ம் வருடத்தின் தகவல்படி இந்த அமைப்பில் 9,921 பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இப்போது 10 ஆயிரத்தைத் தாண்டும். இந்த உறுப்பினர்களைத் தன்வசப்படுத்தி, ஊழல் செய்து சிலர் விருதை வாங்குவதாக சர்ச்சைகள் உள்ளன. யாரெல்லாம் உறுப்பினராகச் சேரமுடியும்... தகுதி என்ன... போன்ற விவரங்கள் ஆஸ்கர் விருதுக்கான பிரத்யேகமான இணையதளத்தில் உள்ளன.

தடை

ஆஸ்கர் விருதுக்குப் படத்தை அனுப்பியவர்கள் தங்கள் படங்களை விளம்பரப்படுத்தவோ அல்லது ஆஸ்கர் விருதை வாங்கவோ தனிப்பட்ட முறையில் ‘த அகடமி’யின் உறுப்பினர்களைச் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்படி மீறி சந்தித்தால் அது ஊழலாகக் கருதப்படும்.

விதிமுறைகள்

ஆஸ்கர் விருதுக்கான குறும்படம், திரைப்படம், பாடல், ஆவணப்படம்... என பல்வேறு விதமான திரைப் படைப்புகளை அனுப்புவதற்காக சில விதிமுறைகளை ‘த அகடமி’ பின்பற்றுகிறது.
இந்த விதிமுறைகள் குறித்த விவரங்கள் அதன் இணையத்தில் விவரமாக உள்ளன. இந்த விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றாமல் அனுப்பப்படும் திரைப்படங்கள் ஆஸ்கர் போட்டிக்குள்கூட நுழையாமல் வெளியேறுகின்றன. இந்த விதிமுறைகளைத் துல்லியமாகப் பின்பற்றி படைப்புகளை அனுப்புபவர்கள் ஆஸ்கரின் கவனத்தைப் பெறுவார்கள்.

உதாரணத்துக்கு, பாடல் அனுப்பும்போது அது குறிப்பிட்ட திரைப்படத்துக்காக எழுதப்பட்டு, இசையமைக்கப்பட்டதா என்று தெளிவாகச் சொல்ல வேண்டும். படத்தின் முடிவிலோ அல்லது படத்துக்குள்ளோ இடம் பெற வேண்டும். ஆடியோ தெளிவாக, புரிந்துகொள்ளும்படி இருக்க வேண்டும். பாடல் வீடியோவை அனுப்ப வேண்டிய அவசியம் கூட இல்லை. ஆடியோ அனுப்பினாலே போதுமானது. அகடமியில் உள்ள இசைப்பிரிவு கமிட்டியின் முடிவே இறுதியானது.

கட்டணம்

ஆஸ்கர் விருதுக்காக படங்களை அனுப்புபவர்கள் 20 ஆயிரம் டாலர்களைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அதாவது இந்திய மதிப்பில் 16.42 லட்ச ரூபாய். ஒவ்வொரு படைப்புக்குத் தகுந்த மாதிரி கட்டணம் மாறும். இந்தக் கட்டணம் விதிமுறைகளில் முக்கியமான ஒன்று. இதுபோக ஆஸ்கர் விருது விழாவிலும், விருந்து நிகழ்விலும் பங்கேற்க குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.  அகடமிக்குக் கிடைக்கும் வருமானத்தில் இந்தக் கட்டணம் முக்கியப்பங்கு வகிக்கிறது.

த.சக்திவேல்