முதல் நாள் முதல் காட்சி விமர்சனங்களுக்கு தடை... சாத்தியமா?!



‘‘இந்த 2024ம் வருடத்தில் ‘இந்தியன் 2’, ‘வேட்டையன்’ மற்றும் ‘கங்குவா’ திரைப்படங்களுக்கு Public Review மற்றும் Talk மூலம் பெருமளவில் பாதிப்பை YouTube Channelகள் ஏற்படுத்தியுள்ளன. அவைகளை இனிமேல் ஊக்குவிக்காமல், திரைத்துறையை சார்ந்த அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த முறையை தடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதன் முதல் முயற்சியாக, அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் ரசிகர்களின் பேட்டியை தங்கள் வளாகங்கள் மற்றும் வளாகத்தின் அருகில் எந்த YouTube Channelகளும் ரசிகர்களை பேட்டி எடுக்க தடை செய்து, இந்த FDFS Public Review மற்றும் Talk நடைமுறையை ஒட்டுமொத்தமாக அகற்ற ஒத்துழைப்பு தர வேண்டுகிறோம்...’’

தமிழ் சினிமா நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது இதுதான். வளர்ந்துவிட்ட டிஜிட்டல் யுகம், நல்ல டெக்னாலஜியில் மொபைல் வைத்திருக்கும் அத்தனை பேரும் இன்று மீடியாவாசிகள்தான் என்கிற ரீதியில் சூழல் உருவாகிவிட்ட நிலையில் இது சாத்தியமா? திரையரங்குகளில் இப்படியான கட்டுப்பாடுகளை விதிக்க முடியுமா?

தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலும் விநியோகஸ்தர்கள் தரப்பிலும் குறிப்பாக நேரடியாக பாதிக்கப்படும் தயாரிப்பாளர்கள் மற்றும் யூடியூப் சேனல்கள் தரப்பிலும் இது குறித்து என்ன சொல்கிறார்கள் என்று கேட்டோம். திருச்சி ஸ்ரீதர் (தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் 

கூட்டமைப்பின் இணை செயலாளர் மற்றும் திரையரங்க உரிமையாளர்):

நிச்சயம் சாத்தியமில்லை. அதிகபட்சம் திரையரங்க வளாகத்தில் எடுக்கக் கூடாது என்று சொல்லலாம். அப்போதும் கட்டாயமாக்க முடியாது. சாலையில், தியேட்டருக்கு வெளியில் நின்று பேட்டி எடுக்கும் போது எங்களால் எந்தக் கேள்வியும் கேட்கவும் தடுக்கவும் முடியாது.  

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஹீரோக்களிடம் நாங்கள் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். நல்ல படம் கொடுங்கள். ‘அமரன்’ படமும் ‘லப்பர் பந்து’ படமும் இதே விமர்சன மக்களால்தானே கொண்டாடப்பட்டன?

நல்ல படம் கொடுத்தால் நிச்சயம் மக்கள், மீடியா அத்தனையும் கொண்டாடும். நான் ஒரு திரையரங்க உரிமையாளராக சொல்கிறேன். ‘கங்குவா’ சுமாரான படம்தான். ஆனால், விமர்சனமாக இவ்வளவு தனிமனித தாக்குதல் தேவையில்லை. கெட்ட வார்த்தைகள் அவசியம் இல்லை.

மேலும் ‘கங்குவா’ படத்தை படக்குழுதானே இதுவரை தமிழ் சினிமா கண்டிராத படைப்பு என்கிற ரீதியில் விளம்பரம் செய்தனர்?

ஏற்கனவே தீபாவளி செலவு, அப்போதைய படங்கள் என குடும்பமாக அனைத்து செலவுகளும் செய்த மக்கள் ஓய்ந்து மீண்டும் ஒரு செலவு செய்து சினிமாவிற்கு வருகிறார்கள் என்றால் அது நீங்கள் செய்த விளம்பரங்களை நம்பித்தானே? பொய்யான விளம்பரம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை சந்திக்கையில் மக்களின் விமர்சனங்களில் அது கோபமாகத்தான் வெளிப்படும்.

 திரையரங்கம் மற்றும் மல்டி பிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்:  என்னதான் திரையரங்கம் பொது இடம் என்றாலும் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என சில கட்டுப்பாடுகள் உள்ளன. அறிவிப்புகளும் இருக்கின்றன.

உதாரணமாக திரையரங்கில் மது, புகைக்கு அனுமதி கிடையாது. இந்த விதிகளை மீறும் போது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எப்படி இந்த யூடியூபர்களைவளாகத்துக்குள் அனுமதிக்காத நிலையை திரையரங்க உரிமையாளர்கள் கடைப்பிடிக்க முடியும். நான் விமர்சனத்திற்கு எதிரி கிடையாது. ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருக்கும்; ஒவ்வொரு விதமான படங்கள் ஒவ்வொருவருக்கு பிடிக்கும். எனக்கு பிடித்த படம் இன்னொருவருக்கு பிடிக்க வேண்டும் என்று கட்டாயமில்லை.

அதே சமயம் சமீபகாலமாக வெறும் எதிர்மறை விமர்சனங்கள் மட்டுமே விமர்சனம் என்ற பெயரில் வருகின்றன. சில வீடியோக்களில் தகாத வார்த்தைகள், தனிமனித தாக்குதல்கள் எல்லாம் பதிவாகின்றன.இந்த சினிமாவை நம்பித்தான் சேனல்களும் இருக்காங்க.

நாங்களும் இருக்கோம். ஏற்கனவே தமிழில்  தயாரிப்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வரும் நிலையில் இப்படியான சூழல் சினிமாவை அழிச்சிடும். அதிகாலையிலேயே படம் பார்த்துவிட்டு ‘காதில் ரத்தம் வருகிறது, தலை வலிக்கிறது...’ என்றெல்லாம் மிக மோசமாகப் பேசுகிறார்கள்.

இந்த ஆண்டில் மட்டுமே பெரிய படங்களின் வசூல் குறைந்ததுக்கு இந்த யூடியூப் விமர்சகர்கள்தான் காரணம். திரையரங்குகளுக்கு உள்ளேயே சென்று இவர்களே ஆட்களை செட் செய்து நிறை குறைகளை சேர்த்து சொல்லாமல் ஒட்டுமொத்த படத்தையும் கீழ்த்தரமாக விமர்சனம் செய்து சினிமாத் தொழிலையே நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வாரத்துக்கு விமர்சனமே போடக்கூடாது என்கிற கோர்ட் ஆர்டர் கூட இப்போது வாங்கலாம் என்பதே அடுத்து இருக்கும் ஒரே வழி.

தியாகராஜன் (‘Thi cinema’ யூடியூப் சேனல் உரிமையாளர்): எங்கள் சேனலின் பிரதானம் சினிமாதான். அதில் முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் விமர்சனம்தான் மிக முக்கியம். ஆனால், எங்கள் சேனலில் கேமராமேன் கொண்டு வரும் வீடியோக்களை அப்படியே உபயோகிப்பதில்லை. தகுந்த எடிட்டிங் செய்துதான் பகிர்கிறோம். மேலும் தயாரிப்பாளர், பிஆர்ஓ மூலமாக அங்கீகாரத்துடன் சினிமா நிகழ்வுகள், திரையிடல்களுக்கு வரும் ஆரோக்கியமான விமர்சனங்களை மட்டுமே அப்லோட் செய்வோம்.

ஆனால், சமீபகாலமாக சில யூடியூப் சேனல்கள் இதை மட்டுமே ஒளிபரப்பி சம்பாதிக்கிறார்கள். இதைத் தடுக்க பிஆர்ஓ சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சேனல்களுக்கு மட்டுமே திரையரங்க வளாகங்களில் அனுமதி என ஒரு வரையறை கொடுக்கலாம். அதே சமயம் இது சென்னைக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற ஊர்களில் சாத்தியமல்ல. எனவே சக யூடியூப் உரிமையாளராக மற்றவர்களுக்கு ஒன்றுதான் சொல்ல விரும்புகிறேன்.‘இந்த சினிமாதான் நமக்கு வருமானம் கொடுக்குமிடம். அதை அவமானப்படுத்தி அதில் வரும் வருமானம் வேண்டாம்...

மற்றுமொரு தகவல்... பொதுமக்கள் எப்போதும் படம் குறித்து கீழ்த்தரமாக விமர்சிக்க மாட்டார்கள். ஏனெனில் அதற்கும் சம்பந்தப்பட்ட ஹீரோவின் ரசிகர்கள் கோபம் காட்டுவார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். அதை மீறி கீழ்த்தரமான விமர்சனம் வருகிறது எனில் எங்கேயோ தவறு நடக்கிறது என்பதுதானே உண்மை?! ’

நாகராஜ் (முதல் நாள் முதல் காட்சி யூடியூப் பதிவர்):

வாரத்துக்கு குறைந்தது நான்கு படங்களாவது வருகின்றன. ஒவ்வொரு திரையரங்கம் முன்பும் நின்று பார்வையாளர்களின் விமர்சனங்களை பதிவு செய்வது என் பிரதான வேலை. ஒவ்வொரு பார்வையாளனும் அவன் மனதில் பட்டதை அப்படியே சொல்வான்.  ஆனாலும் சில கட்டுப்பாடுகளுடன்தான் எங்கள் சேனல் வீடியோக்களை பதிவிடுகிறது. யாராகினும் தகாத வார்த்தை கூறினால் அது தவறே. அதே போல் நல்ல படங்கள் கொடுத்தால் அதை மக்கள் கொண்டாடத்தான் செய்வார்கள்.

‘அமரன்’, ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, ‘லப்பர் பந்து’ படங்களை எல்லாம் மக்கள் இப்போதும் கொண்டாடிக்கொண்டு தானே இருக்கிறார்கள்!எனவே நல்ல படங்கள் நிச்சயம் நல்ல விமர்சனங்களைப் பெறும். 18 வயது நிரம்பிய யாரும் சேனல் துவங்கலாம். என்கையில் அவரவராக நியாயம் எது என உணர்ந்து திருந்தினால்தான் கீழ்த்தரமான விமர்சனங்கள் குறையும்.

சூர்யநாராயணன் (‘புர்கா’, ‘லைன்மேன்’ படங்களின் தயாரிப்பாளர், முன்னாள் தனியார் டிவி நிருபர், ஓடிடி நிர்வாக மேலாளர்):

 முதல் நாள் முதல் காட்சியில் எனக்குப் பிடித்த நடிகரை நான் பார்க்கப் போகிறேன் என்பது ரசிகர்களுக்கு மிகப் பெரிய சந்தோஷமான விஷயம்தான்.இதில் ஏமாற்றம் வரும் போது மக்கள் உணர்ச்சி வசப்படுகிறார்கள். அதே சமயம் நல்ல கதைகளும் கொண்டாடப்பட்டிருக்கு. உதாரணத்துக்கு மலையாளத்தில் பெரிய பெரிய நடிகர்களே கதைக்குதான் முக்கியத்துவம் கொடுப்பர். இங்கே இன்னமும் நல்ல கதைகள் பெரும்பாலும் சின்ன பட்ஜெட்டில்தான் தயாராகுது.

பெரிய நடிகர்கள் + நல்ல கதை... இந்த மேஜிக் நடந்தால் விமர்சனங்களும் ஆரோக்கியமா வரும். ஆனால், மூன்று நாட்களுக்கு விமர்சனம் தள்ளிவைப்பு என்னும் சூழலை கடைப்பிடித்தால் சமீப காலமாக நிகழும் FDFS நெகடிவ் விமர்சனங்கள் குறையும்.

நிகில் முருகன் (சினிமா செய்தித் தொடர்பாளர்) :
நல்ல சினிமா எப்போதும் நல்ல விமர்சனங்களைக் கேட்காமலே பெறும். ஒரு படத்தின் வெற்றியில் மக்களை திரையரங்கம் நோக்கி இழுக்கும் சக்திகளில் விமர்சனங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒரு காலத்தில் பத்திரிகைகளில் மார்க், ரேட்டிங்... பிறகு டிவி சேனல்கள், அப்புறம் இணையம்... இப்போது வீடியோ மீடியம். இப்படி காலத்துக்கு ஏற்ப விமர்சனங்கள் நவீன வடிவம் எடுக்கின்றன.

அப்படியிருக்க விமர்சனம் கூடாது அல்லது தடை என்பதை எல்லாம் எந்த விதத்திலும் விதிக்க முடியாது. செய்தித் தொடர்பாளர்களான எங்களால் அங்கீகரிக்கப்பட்ட மீடியாக்கள் எது என களை எடுத்துக் கொடுக்க மட்டுமே முடியும். அதையும் மீறி தனிநபர் சேனல்கள், மீடியா அல்லாத சேனல்கள் தன்னிச்சையாகச் செயல்படும்போது யாருமே தடை விதிக்க முடியாது.

ஒருசிலர் சில முக்கிய இணையதள, யூடியூப் விமர்சகர்களை கூப்பிட்டு பணம் கொடுத்து நல்ல விமர்சனம் கொடுக்கும்படி டீல் பேசுகிறார்கள். மற்ற மொழிகளில் இவ்வளவு பைரசி பிரச்னை இல்லை. மேலும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ போன்ற தளங்கள் கிடையாது. ஏன் தமிழ் மொழியில் மட்டும் எனில் இங்கே அதைக் களையும் ஒற்றுமை இல்லை என்பதே
காரணம்.

நல்ல சினிமா எடுக்கத் தெரிந்த அல்லது அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் விமர்சனத்தை குறை சொல்ல மாட்டார்கள். உதாரணத்திற்கு, இதுவரையிலும் விமர்சனங்கள் குறித்து தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி, கமலஹாசன் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்ததே கிடையாது. நல்ல படங்கள் நல்ல விமர்சனம் பெறும் என்பது அவர்களைப் போன்ற அத்தனை கலைஞர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் புரியும். அப்படி நல்ல படங்கள் கொடுத்தால் நிச்சயம் விமர்சனங்களும் நல்ல விமர்சனங்களாக வரும்.

எதிர்மறை விமர்சனமோ, நேர்மறை விமர்சனமோ தனிமனித தாக்குதல், ஆபாச பேச்சுக்களை யூடியூப் விமர்சனமாக தவிர்க்கவே வேண்டும். இப்படிச் செய்வது தவறுதான். அதே போல் கதாநாயகர்கள் நல்ல கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிக்க முயற்சி செய்தால் சினிமா துறை ஆரோக்கியமாக இயங்கும். குறிப்பாக அதை நம்பி வாழும் பல்லாயிரம் மக்கள் வாழ்க்கைக்கும் உதவும்.

இந்த விஷயத்தில் சினிமா யூடியூப் சேனல்கள், தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், நடிகர்கள் என அத்தனை பேருமே ஒருசேர யோசித்தால் அனைவருக்குமே பயனளிக்கும் விஷயங்களைக் கடைப்பிடிக்கலாம்.எல்லோருக்கும் வருமானம் தருவது சினிமாதான் என்கையில் அதன் ஆரோக்கியத்திற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தற்சமயம் முக்கியம்.

ஷாலினி நியூட்டன்