இதுவரை உலகமே காணாத மாபெரும் அல்ட்ரா மாடர்ன் சொர்க்கம்...



சாலை இல்லை...

எனவே வாகனங்களே இல்லை... 

இஸ்ரேல், குவைத்தை விட பெரிய நகரம்...

 இதுவரை உலகமே காணாத மாபெரும் அல்ட்ரா மாடர்ன் சொர்க்கம்...

அதிகரிக்கும் செலவால் முடங்குகிறதா எதிர்கால நகரம்...?

நியோம்... கடந்த ஏழு ஆண்டுகளாக சவுதி அரேபியா நாடு மிகப் பிரம்மாண்டமாக கட்டெழுப்பி வரும் ஓர் எதிர்கால நகரத் திட்டத்தின் பெயர் இது.இதில் பிரம்மாண்டம் என்பது வெறும் சம்பிரதாய வார்த்தைகள் அல்ல. ஏனெனில், அத்தனை ஆச்சரியங்கள் நிறைந்த விஷயங்கள் அதனுள் பொதிந்துள்ளன. இதனால், உலக நாடுகள் அனைத்தும் இந்தத் திட்டத்தை வியந்து பார்த்து வருகின்றன.  

ஆனால், தற்போது இந்தத் திட்டத்தின் செலவு அதிகரிப்பால் பணிகளில் தாமதம் ஏற்பட, பெரும் தலைவலியைச் சந்தித்து வருகிறது சவுதி அரேபியா. அத்துடன் சுற்றுச்சூழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் இருப்பதால் பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. 
அதென்ன நியோம் (Neom)?கடந்த 2017ம் ஆண்டு சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான், நியோம் என்ற இந்த எதிர்கால நகரத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். ‘Neom’ என்பதிலுள்ள முதல் மூன்று எழுத்துகள் (Neo), ‘புதிய’ எனும் அர்த்தத்தையும், m என்ற கடைசி எழுத்து இளவரசர் முகமதுவையும் குறிக்கிறது.

உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளம் கொண்ட நாடு சவுதி அரேபியா. எண்ணெய் ஏற்றுமதியில் முதலிடம் வகிப்பதும் அதுவே. இந்நிலையில், சவுதி அரேபியாவின் பொருளாதாரம் எண்ணெய் வளத்தை மட்டும் சார்ந்திருப்பதைக் குறைக்க நினைத்தார் இளவரசர் முகமது பின் சல்மான். 
அதனால் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவதற்கும், பொது சேவைத் துறைகளை மேம்படுத்துவதற்கும், அதன்வழியாக சவுதிக்கு வருமானத்தைப் பெருக்கவும் இந்த எதிர்கால நகரத் திட்டத்தை அவரின் கனவுத் திட்டமாக முன்மொழிந்தார். அப்படியாக சவுதி அரேபியாவின் ‘விஷன் 2030’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ‘நியோம்’திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி பரவலாக உள்ள பாலைவனப் பகுதிகள் சோலைவனமாக மாற்றப்படுகிறது. பாலைவனப் பகுதிகளில் 500 பில்லியன் டாலர் பொருட்செலவில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் 42 லட்சம் கோடி ரூபாய் ஆகும். அப்படியென்றால் எப்படியான திட்டமாக நியோம் உருவாகி வருகிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

இதற்காக சவுதியின் வடக்குமுனையில் அகாபா வளைகுடாவும், செங்கடலும் சந்திக்கும் பகுதியில உள்ள நிலப்பரப்பை தேர்ந்தெடுத்துள்ளனர். இதன் பரப்பளவு 26 ஆயிரத்து 500 சதுர கிமீ.
இது இஸ்ரேல், குவைத் நாடுகளைவிட பெரிய பரப்பளவு ஆகும். அதுமட்டுமல்ல. அல்பேனியா நாட்டின் அளவைக் கொண்டது என்கின்றன தகவல்கள்.

திட்டங்கள்

இந்த மெகா திட்டம் மேக்னா, ஆக்ஸகான், சிந்தாலா, த லைன், ட்ரோஜனா என ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து பகுதிகளுமே பலரின் புருவத்தை உயர்த்தச் செய்துள்ளன. இதில் ‘த லைன்’தான் ஹைலைட். ஏனெனில், நேர்கோட்டில் அமையவுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் இது. 

அதாவது 170 கிமீ தொலைவும் (சென்னையிலிருந்து விழுப்புரம் வரை), 200 மீட்டர் அகலமும், கடல் மட்டத்திலிருந்து 500 மீட்டர் உயரத்திலும் ஒரே நேர்கோட்டில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி இந்த நகரம் அமைக்கப்படுகிறது. இதனுள் வானளாவிய கண்ணாடி கட்டடங்கள் வரிசையாக உருவாக்கப்படும்.

இங்கே சாலைகள் கிடையாது. கார்கள் கிடையாது. அதனால், காரிலிருந்து எந்தப் புகை உமிழ்வும் இருக்காது. நகரம் முழுவதும் 100 சதவீத புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இயங்கும். அதாவது காற்றாலை, சோலார் மூலம் மின்சாரம் உருவாக்கப்படும். குடிநீர் கடல் நீரிலிருந்து பெறப்படும். 

கல்வி நிறுவனங்கள், கடைகள், பொழுதுபோக்கு இடங்கள், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் என எல்லாமே இதனுள் இருக்கும். இந்த நகரம் 90 லட்சம் மக்களைக் குடியமர்த்தும் வகையில் உருவாக்கப்படுகிறது. மக்கள் கால்நடையாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்; இயற்கையை அனுபவிக்கலாம்.

அதாவது குடியிருப்புவாசிகள் ஐந்து நிமிட நடைப்பயணத்தில் அனைத்து வசதிகளையும் பெறமுடியும். அதேபோல அந்த எல்லையிலிருந்து இந்த எல்லைக்கு, அதாவது 170 கிமீ தூரத்திற்கு அதிவேக ரயில் போக்குவரத்து வசதி மட்டும் இருக்கும். 

இந்த ரயில் இந்த எல்லைகளை 20 நிமிடங்களில் அடைந்துவிடும். அந்தளவுக்கு வேகம் கொண்டது.மொத்தத்தில் எதிர்கால ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும்விதமாக இந்நகரம் அமைக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறது நியோம் இணையதளம்.

இதேபோல் ஆக்ஸகான் என்பது நியோமின் தொழில் நகரத்தைக் குறிக்கிறது. இது எண்கோண வடிவத்தில் செங்கடலில் மிதக்கும் தொழில் வளாகமாக அமைக்கப்பட்டு வருகிறது.
அதுமட்டுமல்ல. செங்கடலில் ஓர் அதிநவீன துறைமுக நகரமாகவும் அமைக்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய மிதக்கும் தொழில் அமைப்பு எனப் பெருமையுடன் சொல்கின்றனர் நியோம் நிபுணர்கள்.

அடுத்ததாக ட்ரோஜனா எனும் பகுதி அகாபா வளைகுடா மலைப்பகுதியில் ஸ்கை ரிசார்ட்டாக உருவாக்கப்பட்டு வருகிறது. இது அரேபிய தீபகற்பத்தில் முதல் பெரிய வெளிப்புற பனிச்சறுக்கு இடமாக இருக்கும் என்கின்றனர் நியோம் ஆர்க்கிடெக்டுகள்.

36 கிமீ தூர பனிச்சறுக்கு வளைவுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதி அறைகள், 3 ஆயிரம் சீட்கள் உள்ள திறந்தவெளி அரங்கு, 7 ஆயிரம் நிரந்தர குடியிருப்பாளர்கள் என பிரம்மாண்டமாக ட்ரோஜனா உருவாக்கப்படுகிறது. 2030ம் ஆண்டில் 7 லட்சம் சுற்றுலாவினர் வந்துபோகும் இடமாக இது இருக்கும் என்கின்றனர்.

சிந்தாலா பகுதி செங்கடலுக்குள் ஒரு தீவு ரிசார்ட்டாக திட்டமிடப்பட்டுள்ளது. 8 லட்சத்து 40 ஆயிரம் சதுர மீட்டர் கொண்ட தீவில் 86 பெர்த் மெரினா மற்றும் ஏராளமான ஹோட்டல்கள் இருக்குமாம். 

இதுதவிர கோல்ப் மைதானம், பாய்மர விளையாட்டுக்கான அமைப்பு உள்ளிட்டவையும் உருவாக்கப்படுகிறது. நிறைவாக மேக்னா என்பது- கடற்கரையில் 120 கிமீ தொலைவில் ஆடம்பர சுற்றுலாவிற்கென 12 இடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதில் தீம் பார்க்குகள், வாட்டர் பார்க்குகள், உலகின் பெரிய ரோலர் கோஸ்டர் எல்லாம் இருக்கும்.

இந்த எதிர்கால நகரத் திட்டத்தை பல நாடுகளைச் சேர்ந்த சிறந்த ஆர்க்கிடெக்டுகள் முன்னெடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது செலவு அதிகரிப்பால் பணிகளை முன்னெடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.2030ல் ஒரு லட்சம் மக்களுக்கான குடியிருப்புகள் மட்டுமே சாத்தியம் என்கின்றனர் விவரம் அறிந்த நிபுணர்கள். 

கடந்த ஒரு ஆண்டில் சவுதி அரேபியா நவீன எலக்ட்ரானிக்ஸ் வாங்கவும், ஏஐ தொழில்நுட்பத்திற்கான முதலீட்டிற்கும், ஸ்மார்ட் சிட்டியில் 11 எதிர்கால நவீன ஸ்டேடியங்கள் அமைக்கவும் 8 லட்சம் கோடி ரூபாயை அறிவித்தது.

இதில் ஒரு ஸ்டேடியம் வானளாவிய கட்டடங்களின் மேலேயே அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த மொத்தத் திட்டப்பணிகளும் முடிக்க ஒரு ட்ரில்லியன் டாலருக்கும் மேல் செலவாகும்.

ஒரு ட்ரில்லியன் என்பது ஒரு லட்சம் கோடி ரூபாய். ஆக, ஒரு ட்ரில்லியன் டாலர் என்பது 83 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகம். இதனால், விழிபிதுங்கி நிற்கிறது சவுதி அரேபியா.
இதற்கிடையில் நியோம் திட்டத்தின் சிஇஓவான நத்மி அல் நஸ்ரையும் மாற்றியிருக்கிறது சவுதி அரசு. பணிகளில் எந்தவித சுணக்கமும் இல்லை என்கிறது.

இதுஒருபுறம் இருக்க, இந்தத் திட்டத்திற்காக சில கிராமங்கள் அழிக்கப்பட்டு அங்கு வசித்த ஆயிரக்கணக்கான மக்கள் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.குறிப்பாக இந்த நியோம் திட்டம் நடக்கவுள்ள பகுதிகள் ஹூவைதாட் என்ற பழங்குடியினரின் தாயகமாகும். இவர்களில் சிலர் இத்திட்டத்தை எதிர்த்துள்ளனர். அவர்கள் சவுதியின் பாதுகாவலர்களால் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனை மனித உரிமை ஆர்வலர்கள் வன்மையாகக் கண்டித்து வருகின்றனர்.

இதுமட்டுமில்லாமல் தி லைன் நகரக் கட்டிடங்கள் உருவாக்கத்தின்போது மிகப்பெரிய அளவிலான கார்பன் உமிழ்வு இருக்கும் என எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் வல்லுநர்கள்.

அதாவது 1.8 பில்லியன் டன்களுக்கு மேல் கார்பன் டை ஆக்சைடு உருவாகும் என மதிப்பிட்டுள்ளார் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் பேராசிரியர் ஒருவர். இது சூழலுக்கு மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்கிறார் அவர்.

எதிர்கால சுற்றுச்சூழலைக் காக்கும்பொருட்டு இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டம் உருவாக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், அதன் உருவாக்கத்திலேயே பெரிய அளவில் சூழல் கெட்டுவிடும் என்கிறார் அவர். அதேபோல் கண்ணாடி கட்டுமானங்கள் விலங்குகள், பறவைகளுக்கு பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தும் என்கின்றனர் இன்னும் சில சுற்றுச்சூழல் வல்லுநர்கள். 

தவிர, இது பணக்காரக்கார்களுக்கான நகரமாகவே இருக்கும் என்றும், ஒருகுறிப்பிட்ட காலத்திற்குமேல் இந்த நகரத்தை தக்கவைத்து பராமரிப்பது சிரமம் என்றும் குறிப்பிடுகின்றனர் கட்டிடக்கலை நிபுணர்கள். இந்தச் சூழலில் இந்த எதிர்கால நகரத் திட்டம் 2039ம் ஆண்டிற்குள் பெரும்பாலும் முடிக்கப்பட்டுவிடும் என நம்பிக்கையாகச் சொல்லி வருகின்றனர் நியோம் உருவாக்க அதிகாரிகள்.    

பேராச்சி கண்ணன்