முதலீடு ரூ.2100 கோடி... லாபம் ரூ.5 ஆயிரம் கோடி!
சூதாட்டம்போல் இருக்கிறதா?
கிட்டத்தட்ட அதுவேதான்.‘பாகுபலி’ பிரபாஸை மையமாக வைத்துதான் இந்த உள்ளே வெளியே ஆட்டம் அகில இந்திய அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘கல்கி’ படம் எதிர்பார்த்த அளவுக்கும் மேல் கல்லா கட்டியிருப்பதால் கைகளை பரபரவென தேய்த்தபடி அடுத்தடுத்து களத்தில் குதிக்க அவரது படங்கள் அணிவகுத்து நிற்கின்றன.
அதில் முதலாவது ‘சலார் 2’. ‘கேஜிஎஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ஹை- வோல்டேஜ் ஆக்ஷன் படமான இதை ‘ஹோம்பாலே ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் பிரபல தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் தயாரிக்கிறார்.
இந்தப் படத்தில் பிரபாஸுடன் பிருத்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இரண்டாவது ‘ஸ்பிரிட்’. இந்தி சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக உருவாகிறது. இந்தப் படத்தில் முதன்முறையாக ‘அனிமல்’, ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் சந்தீப் ரெட்டி வங்காவுடன் கைகோர்க்கிறார்.
மூன்றாவது ‘ஃபாஜி’. இயக்குநர் ஹனு ராகவ புடி இயக்கத்தில் உருவாகும் இப்படம் 1940களில் நடக்கும் கதையாம். இந்தத் திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்ய, விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மேற்கொள்கிறார். நான்காவது ‘ராஜா சாப்’.
இயக்குநர் மாருதி இயக்கத்தில் காதலும் காமெடியும் கலந்த திகில் படம் இது. இந்த திரைப்படத்தை ‘பீப்பிள் மீடியா ஃபேக்டரி’ நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பிரபாஸுடன் நிதி அகர்வால் மற்றும் மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஐந்தாவதாக ‘கல்கி 2’. பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப்பச்சன் ஆகியோருடன் வில்லனாக கமல்ஹாசன் நடிக்கிறார். இந்த ஐந்து படத்துக்குமான பட்ஜெட்தான் ரூ.2100 கோடி. இதை அப்படியே ரூ.5 ஆயிரம் கோடி ப்ளஸ்ஸாக வசூலித்து விடலாம் என இந்திய திரையுலகம் திட்டமிட்டிருக் கிறது!
காம்ஸ் பாப்பா
|