60 வயது வைரல் அழகி!



அசாமில் சமீபத்தில் நடந்த ஒரு திருமணத்தின் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. அனைவரும் யார் இந்தப் பெண்... இவ்வளவு அழகாக இருக்கிறாரே... எனத் தேடினர். அவர் மணப்பெண்ணோ அல்லது மணப்பெண்ணின் தோழியோ இல்லை. மணமகனின் தாய்!ஆம். கிட்டத்தட்ட 60 வயதை நெருங்குகிறார் அருணிமா தத்தா. 
இந்த அருணிமா தத்தா, தனது 25 வயது மகனுக்கு சமீபத்தில் திருமணம் செய்த புகைப்படங்கள்தான் தற்போது வைரலாகி வருகின்றன. பார்ப்பதற்கு கல்லூரி மாணவி அல்லது மணப்பெண்ணின் தோழி போல திருமணம் முழுக்க இவரது புகைப்படங்கள் வைரலாகிக் கொண்டிருக்கின்றன. சாதாரணமாக சுற்றிக் கொண்டிருந்த இந்த புகைப்படங்கள் அவரின் வயது இதுதான் என தெரிந்ததும் ஹாட் வைரலாகி விட்டன.

யார் இந்த அருணிமா தத்தா?

‘அனைவரையும் நேசி... அனைவருக்கும் சேவை செய்...’ என்பதே தனது தாரக மந்திரம் என்கிறார் அருணிமா தத்தா.‘‘ஆம். இதைத்தான் எனது வாழ்க்கையின் அடிப்படையாகக் கொண்டு வாழ்கிறேன். சிறு வயது முதல் யோகா, உடற்பயிற்சி... இத்துடன் குடும்பத்தின் பாரம்பரிய பழக்கமான ஆரோக்கிய உணவு முறைகளை மட்டும்தான் உட்கொள்ள வேண்டும் என்கிற கட்டுப்பாடு... இவை அனைத்தும் இணைந்து என்னையும் என் குடும்பத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்கிறது...’’ என தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது சிரித்தபடி சொன்ன அருணிமா, 2015ம் ஆண்டு தனது யோகா மையத்தை துவக்கி இருக்கிறார்.

‘‘ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு முடித்து வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் செயல் இயக்குனராக பணியாற்றத் துவங்கினேன். 2015ம் ஆண்டு ரிஷிகேஷில் உள்ள சமாதி யோகா ஆசிரமத்தில் (Guardianship and Aegis of Samadhi Yoga Ashram and World Peace Yoga School) முறைப்படி யோகா கற்று அங்கீகரிக்கப்பட்ட யோகா ஆசிரியராகவும் சான்றிதழ் பெற்றேன்.

பிறகு என் சொந்த ஊரான அசாம் குவாஹாத்தியிலேயே ‘த யோகம் ஸ்டூடியோ’ என்னும் யோகா மையத்தை உருவாக்கினேன். இங்கு யோகா கலையில் முழுமையான பயிற்சிகள் பெறுவதற்கும் ஆசிரியர் சான்றிதழ் பெறுவதற்கும் முடியும். 
அதாவது அனைத்து பயிற்சிகளும் கொடுக்கும் ஒரே இருப்பிடமாக உருவாக்கி இருக்கிறேன்...’’ என்னும் அருணிமா, முன்னாள் ‘திருமதி இந்தியா உலகம்’ என்னும் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘‘சிறுவயதிலிருந்தே உணவிலும் வாழ்க்கை முறையிலும் அதீத கட்டுப்பாடுகளுடன்தான் வளர்ந்தேன். அப்படித்தான் என் அன்னையும் தந்தையும் என்னை வளர்த்தார்கள்.
இதோ இப்போது என் மகனுக்கு திருமணம் நடந்து விட்டது. இப்போது வரையிலும் பலரும் என்னை கல்லூரி மாணவியாகவோ அல்லது சமீபத்தில் திருமணமான மணப்பெண்ணாகவோதான் பார்க்கிறார்கள்.

என் பெற்றோர்கள் எனக்குக் கொடுத்த ஆரோக்கியமான உடலை என்னால் முடிந்தளவு சிறப்பாக பராமரித்து வருகிறேன். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். ஆரோக்கியம் இருந்தால்தான் ஆயுசுக்கும் ஆனந்தமாக வாழ முடியும். ஆரோக்கியமான ஆனந்தமான வாழ்க்கையை என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறேன். இதற்காகவே யோகா பயிற்சி மையத்தை நடத்துவதுடன் மாதந்தோறும் பெண்களுக்கு இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறேன்.

சீன பழமொழிகள் சிறப்பான வாழ்க்கைக்கு எப்படிப்பட்ட தத்துவங்களை கொடுக்கின்றன என்பதற்கான பயிற்சியையும் சமீபத்தில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் முடித்திருக்கிறேன். கூடவே யோகா மற்றும் லைஃப் கோச் படிப்பிற்கான பல சான்றிதழ்களையும் பயிற்சிகளையும் பெற்றிருக்கிறேன்...’’ என்கிறார் இந்த 60 வயது அசாம் அழகி.

ஷாலினி நியூட்டன்