கல்லா கட்டிய மறுபிறவி படங்கள்!



உலகமெங்கும் மறுபிறவிப் படங்களுக்கு எப்போதுமே தனி மவுசு. காதல் நிறைவேறாமல் போனவர்கள், கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்காகவும், பழிவாங்குவதற்காகவும் மறு பிறவி எடுப்பவர்கள்தான் இந்த வகை படங்களில் பெரும்பாலும் மைய கதாபாத்திரங்களாக இருப்பார்கள். மறு பிறவியை மையமாக வைத்த படங்கள் வசூலிலும் சக்கைப்போடு போடும்.
அப்படி வசூலைக் குவித்த 10 படங்களின் பட்டியல் இதோ...

ஏக் பஹேலி லீலா (Ek Paheli Leela)

பதினைந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி, சுமார் 28 கோடி ரூபாய் வசூலை அள்ளிய இந்திப்படம் இது. 300 வருடங்களுக்கு முன்பு இளம் பெண் லீலா காதல் வயப்படுகிறாள். காதலர்கள் கொல்லப்படுவதால் அவர்களின் காதல் முழுமையடையாமல் இருக்கிறது. தங்களின் காதலை முழுமையாக்க 300 வருடங்களுக்குப் பிறகு லீலாவும், அவளது காதலனும் மறுபிறவி எடுக்கின்றனர்.

நிகழ்காலத்திலாவது அவர்களின் காதல் கைகூடி, முழுமையடைந்ததா என்பதே மீதிக்கதை. லீலாவாகவும், மறுபிறவி கதாபாத்திரத்திலும் கலக்கியிருந்தார் சன்னி லியோன். இப்படத்தின் டிரெய்லர் வெளியான காலத்தில், யூடியூப்பில் அதிகமான பார்வைகளை அள்ளிய பாலிவுட் படத்தின் டிரெய்லர் என்ற பெருமையைப் பெற்றது. 2015ம் வருடம் வெளியான இப்படத்தின் இயக்குநர் பாபி கான்.

கல்கி 2898 ஏடி  (Kalki 2898 AD)

சில மாதங்களுக்கு முன்பு கமல்ஹாசன், அமிதாப்பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் என பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் களமிறங்கிய தெலுங்குப்படம் இது. இந்தப் படத்திலும் மறுபிறவி என்பது முக்கியமாக இருக்கிறது. பவுண்டி ஹண்டர் பைரவா ரோலில் ஜாலியாக இருக்கும் பிரபாஸ், கர்ணனின் மறுபிறவி என்று தெரியும்போது திரையரங்கமே அதிர்ந்தது. விஷுவல் விருந்தளித்த இந்தப் படம், ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.1,100 கோடியைக் குவித்தது. இதன் இயக்குநர் நாக் அஸ்வின்.

அருந்ததி (Arundhati)

துணிச்சலான ராணி ஒரு மந்திரவாதியுடன் மோதி, அவனை வீழ்த்துகிறாள். அந்த ராணியின் சந்ததியினரை வேட்டையாடுவதற்காக மூன்று தலைமுறைகள் கழித்து வருகிறான் அந்த மந்திரவாதி.

பேத்தியின் ரூபத்தில் மறுபிறவி எடுத்திருக்கும் அந்த ராணி, மந்திரவாதியை எப்படி வீழ்த்துகிறாள் என்பதே திரைக்கதை. பேத்தியாகவும், பாட்டியாகவும் நடிப்பில் கலக்கியிருப்பார் அனுஷ்கா.

ரூ.13.5 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.70 கோடியை அள்ளியது இந்த தெலுங்குப்படம். இதன் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

மதுமதி (Madhumati)

பிமல் ராயின் இயக்கத்தில் 1958ல் வெளியானது  இந்த இந்திப்படம். அப்போதே ரூ.81 லட்சம் செலவில் உருவாகி, நான்கு கோடி ரூபாயை அள்ளியது இந்தப் படம். மட்டுமல்ல, மறுபிறவியை மையமாக வைத்த ஆரம்ப கால படங்களில் முக்கியமானது இந்தப் படம். இரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதால் ஒரு மேன்சனில் தங்குகிறான் நாயகன். ஆனால், அந்த மேன்சன் முன்பே அவனுக்குப் பழக்கமானதாக இருக்கிறது. அவனுடைய முன் ஜென்ம ஞாபகங்கள் வர, சூடுபிடிக்கிறது திரைக்கதை. திலீப் குமாரும், வைஜெயந்தி மாலாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ஈகா (Eega)

பெரிய ஹிட் அடித்த தெலுங்குப்படம் இது. ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.125 கோடி அள்ளியிருக்கிறது இந்தப் படம். பிந்துவைக் காதலிக்கிறான் நானி. இன்னொரு பக்கம் பிந்துவின் மீது ஆசையுடன் இருக்கிறான் சுதீப். பொறாமையில் நானியை கொலை செய்துவிடுகிறான் சுதீப். ஈ ஆக மறுபிறவி எடுக்கும் நானி, எப்படி சுதீப்பை பழி தீர்த்துக்கொள்கிறான் என்பதே திரைக்கதை. இப்படத்தை இயக்கியவர் எஸ்.எஸ். ராஜமௌலி.

ஷியாம் சிங்க ராய் (Shyam Singha Roy)

திரைப்பட இயக்குநர் வாசுவின் மீது கதைத் திருட்டு சுமத்தப்படுகிறது. ஐம்பது வருடங்களுக்கு முன் ஷியாம் சிங்க ராய் எழுதிய நாவலை வாசு திருடிவிட்டார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டு. ஷியாம் சிங்க ராயின் மறுபிறவிதான் வாடி என்று தெரிய வருகிறது. ஆனால், அதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்க முடியாது. ஷியாமின் மறுபிறவிதான் வாசு என்பது எப்படி நிரூபிக்கப்பட்டு, அவன் எப்படி குற்றச்சாட்டில் இருந்து வெளியேறுகிறான் என்பதே படத்தின் கதை.  ஷியாமாகவும், வாசுவாகவும் நடித்திருந்தார் நானி. படத்தின் இயக்குநர் ராகுல் சங்கிருத்யன்.

மகதீரா (Magadheera)

இந்திய சினிமாவில் பேரதிர்வை உண்டாக்கிய தெலுங்குப் படம் இது. மறுபிறவியை மையமாக வைத்து, சுவாரஸ்யமான, வசூலை அள்ளும் ஒரு படத்தைக் கொடுக்க முடியும் என்று நிரூபித்திருந்தார் இதன் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி. ஆம்; 2009ம் வருடமே ரூ.150 கோடியை அள்ளியது இந்தப் படம். இதன் பட்ஜெட் ரூ.35 கோடிதான். ராஜாங்கத்தையும், இளவரசியையும் காப்பாற்றுவதற்காக தனது உயிரையும் தருகிறான் மாவீரன் பைரவா.

400 வருடங்களுக்குப் பிறகு மறுபிறவி எடுக்கும் அவன், எப்படி மறுபிறவி எடுத்திருக்கும் இளவரசியைக் கண்டுபிடித்து, அவளுடன் இணைகிறான் என்பதை சுவாரஸ்யமாகச் சொல்லியிருப்பார்கள். இப்படத்தை ரசிகர்கள் இன்றும்கூட ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

கரண் அர்ஜுன் (Karan Arjun)

சல்மான் கானும், ஷாருக் கானும் இணைந்து நடித்த இந்திப்படம் இது. 1995ல் வெளியாகி, ரூ.43 கோடியை அள்ளியது இந்தப்படம். இதன் பட்ஜெட் வெறும் ரூ.6 கோடிதான். இப்போது இந்தப் படம் மறு வெளியீடாகி, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. கரணும், அர்ஜுனும் சகோதரர்கள். வில்லனால் கொல்லப்படுகின்றனர். மகன்கள் இருவரும் திரும்பி வர வேண்டும் என கடவுளை வேண்டுகிறார் அவர்களின் அம்மா.

இருபது வருடங்களுக்குப் பிறகு கரணும், அர்ஜுனும் வெவ்வேறு இடங்களில் பிறந்து, வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் எப்படி ஒன்றாக இணைந்து, தங்களைக் கொலை செய்தவர்களை எப்படி பழிவாங்குகின்றனர் என்பதே கிளைமேக்ஸ். இப்படத்தை ராகேஷ் ரோஷன் இயக்கியிருந்தார்.

ஓம் சாந்தி ஓம் (Om Shanti Om)

வெறும் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகி, ரூ.152 கோடியை அள்ளிய இந்திப்படம் இது. எழுபதுகளில் முன்னணி நடிகர் ஆக வேண்டும் என்ற வேட்கையுடன் இருக்கிறார் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டான ஓம். அவருக்கு புகழ்பெற்ற ஒரு நடிகையின் மீது தீவிர காதல். ஓம் கொலை செய்யப்படுகிறார். மறுபிறவி எடுக்கும் ஓம், போன ஜென்மத்தில், தான் யார் என்று கண்டுபிடித்து, தனக்கான நீதியைத் தேடிக்கொள்வதுதான் திரைக்கதை. இப்படத்தின் இயக்குநர் ஃபரா கான்.

ஏ டாக்’ஸ் ஜேர்னி  (A Dog’s Journey)

நாய்களின் மறுபிறவியை மையமாக வைத்தும் நிறைய படங்கள் வந்துள்ளன. அவற்றில் முக்கியமானது இந்தப்படம். பட்ஜெட்டைவிட, நான்கு மடங்கு அதிகமாக வசூலைக் குவித்த படமும் கூட.  ஈதனின் செல்ல நாய் பெய்லி. தனது பேத்தியைப் பார்த்துக்கச் சொல்லி பெய்லியிடம் வேண்டுகிறார் ஈதன். பெய்லி எப்படி மறுபிறவி எடுத்து ஈதனின் பேத்தியைப் பாதுகாக்கிறது என்பதே இப்படத்தின் கதை. இதன் இயக்குநர் கெயில் மான்குசோ.

த.சக்திவேல்