கிராஃபிக்ஸ் நாவலாகும் வாடிவாசல்!



தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு பற்றி எழுதப்பட்ட புத்தகங்களில் மிக முக்கியமானது ‘வாடிவாசல்’ நாவல். சி.சு. செல்லப்பா எழுதிய இந்த நாவல் 1950களில் தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டை சித்தரிக்கிறது. நடிகர் சூர்யாவை முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து, இந்த நாவலை சினிமாவாக இயக்க இருப்பதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

இதனிடையே ‘வாடிவாசல்’ நாவல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கிராஃபிக் நாவலாக வெளியாகிறது.‘‘ஆங்கில எழுத்தாளர் எர்னஸ்ட் ஹெமிங்வேயைப் போலவே செல்லப்பாவும் காளைச் சண்டையில் ஆர்வம் கொண்டிருந்தார். விளையாட்டைக் காண மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்திருக்கிறார். ‘வாடிவாசல்’ நாவலை ஏற்கனவே என்.கல்யாணராமன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். தற்போது கிராஃபிக் நாவலுக்கு எழுத்தாளர் பெருமாள் முருகன் வசனம் எழுதியுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த காமிக்ஸ் படைப்பாளரும் கலைஞருமான அப்புப்பேன், கிராஃபிக் நாவலுக்கான படங்களை 120 பக்கங்களில் வரைந்துள்ளார்.டபுள் கிரவுன் சைஸில் இந்த கிராஃபிக் நாவல் வெளியாகும்...’’ என்கிறார் ‘காலச்சுவடு’ பதிப்பகத்தைச் சேர்ந்த கண்ணன்.

காம்ஸ் பாப்பா