சிறுகதை - பாரம்



‘‘என்ன ராஜா நீ வரலையா?’’

‘‘இல்லண்ணே... நான் வேற ஒரு சவாரியில இருக்கேன். முத்து நல்ல பையன்தான். அவன் உங்க கூட இருந்து நல்லபடியா சாமான்கள ஏத்தி எறக்கிருவான். நீங்க பயப்படாமப் போங்கண்ணே...’’
‘‘என்னப்பா... நீ வந்தா எனக்குக் கொஞ்சம் தோதா இருக்கும்னு பார்த்தேன். சரி, நீ இவ்ளோ தூரம் சொல்ற. நான் அவரை வச்சே பாத்துக்கிறேன்...’’ என்று போனை வைத்த சிவநேசனிடம் காபியை நீட்டியடியே கேட்டாள் வள்ளி.

‘‘என்னங்க... ராஜா வரலையாமா?’’

‘‘ஆமா. அவருக்கு வேற சவாரி வந்து காலையில தான் கிளம்பினாராம். இன்னொரு வண்டிய நமக்கு அனுப்புறாராம். முத்துன்னு ஏதோ  பேரு சொன்னாரு...’’
‘‘சரி யாரா இருந்தா என்ன? நம்ம கடை சாமான்களை எல்லாம் பக்கத்து ஊருக்கு கொண்டு போகப்போறோம். அந்த புது கடையில இறக்கிட்டு வர்றதுதானே? இதுக்கு எதுக்கு ராஜாதான் வரணும்னு நினைக்கிறீங்க?’’

‘‘ராஜான்னா பழக்கமான ஆளு. எனக்கு கொஞ்சம் தைரியமா இருக்கும். புது ஆளு எப்படியோ தெரியலையே? நாளைக்கு வேணா ராஜாவை வைத்து ஏத்திக்கலாமா?’’
‘‘அட... என்னங்க நீங்க? வண்டிய வரச் சொல்லி சட்டுபுட்டுனு ஆகுற வேலையை பாப்பீங்களா...?’’ என்று சற்று காட்டமாகவே சொல்லிவிட்டுக் காபி டம்ளரை வாங்கிக் கொண்டு கிளம்பினாள் வள்ளி.எல்லா சாமான்களும் அந்த குட்டி யானையில் ஏற்றியாகிவிட்டன.

ஒரே ஒரு டேபிள் மட்டும் வைக்க இடம் போதவில்லை. யோசித்துக் கொண்டிருந்த சிவநேசனிடம், ‘‘அண்ணே... இந்த டேபிள வண்டி கேபின் மேல தூக்கிக் கட்டிடலாம். ஒண்ணும் ஆகாது. கொண்டு போயிடலாம்...’’ என்று முகத்தில் வழிந்த வியர்வையைத் தன் கைலியால் துடைத்துக் கொண்டே சொன்னான் முத்து.முத்து சொல்வதும் சரி என்றே பட்டது.

‘‘சரி முத்து. நீ மேல ஏறிக்கோ. நான் கீழே இருந்து தூக்கித்தர்றேன்...’’ என்று சிவநேசனும் வேட்டியை மடக்கிக் கட்டிக் கொண்டார்.கேபின் மேலேறி மண்டியிட்டு உட்கார்ந்து கீழே மிகவும் சிரமப்பட்டு சிவநேசன் தூக்கிக் கொடுக்கின்ற டேபிளை லாவகமாகப் பிடித்துத் தூக்கி கேபினில் வைத்துக் கயிறு போட்டு இறுக்கமாய்க் கட்டிக் கொண்டான் முத்து.
கீழே இறங்கி வந்தவன், ‘‘என்னண்ணே... போலாமா?’’ என்றான்.

‘‘காலையில் இருந்து ஒரே ஆளா எல்லா சாமான்களையும் ஏத்தி இருக்க. இரு ஒரு காபி குடிச்சிட்டு போலாம்...’’ என்றவர் வள்ளியிடம், ‘‘சூடா ரெண்டு காபி போட்டுக் கொண்டாம்மா...’’ என்றார்.காபி குடித்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தான் முத்து. வள்ளியிடம் சொல்லிக்கொண்டு பக்கத்து சீட்டில் ஏறி அமர்ந்தார் சிவநேசன்.‘‘வரேங்க்கா...’’ என்று வள்ளியிடம் தலையாட்டிய முத்துவைப்பார்த்து, ‘‘கொஞ்சம் இருந்து எறக்கி வச்சிட்டு வாப்பா...’’ என்றாள் வள்ளி.‘‘அதெல்லாம் நான் பாத்துக்கிறேன்கா...’’ என்று சிரித்தபடி வண்டியைக் கிளப்பினான்.

‘‘ஏன்ணே... வீட்டுக்கு பக்கத்துல இருக்குற கடையை காலி பண்ணிட்டு அவ்வளவு தூரம் போய் கடை வைக்கிறீங்க?’’

‘‘இங்க பெருசா வியாபாரம் இல்ல முத்து. அங்க நல்லா ஆகும்னு சொன்னாங்க. நானும் விசாரிச்சு பார்த்தேன். நல்லபடியாதான் சொல்றாங்க. அதான் வாரம் பத்து நாள் அலைந்து ஒரு கடையை வாடகைக்கு எடுத்துட்டேன்...’’‘‘அங்க நல்லா நடக்கும்னுதான் எனக்கும் தோணுது...’’
‘‘எப்படி சொல்ற?’’

‘‘அங்க பக்கத்துல ஆறு ஓடுது. விவசாயம் பிரமாதமா நடக்குது. பண்ணக்காரங்க எல்லாம் செழிப்பா இருக்காங்க. அந்த ஊர்ல எந்தக் கடை
வச்சாலும் ஓடும்ணே...’’‘‘பரவாயில்லையே... நல்லா பேசுறியே!’’ இருவரும் சிரித்துக் கொண்டனர்.‘‘ஆமாம்... நீ எத்தனை வருஷமா டிரைவர் வேலை பாக்குற?’’

‘‘இப்பத் தாங்க இந்த டிரைவர் வேலை எல்லாம். இதுக்கு முன்னாடி மூட்ட தூக்கிட்டு இருந்தேன். கொஞ்ச நாளுக்கு முன்னாடி முதுகு வலி வந்து ரொம்ப சிரமப்பட்டுட்டேன். முதுகுல எலும்பு தேய்மானம் இருக்கு. இனிமே மூட்டை தூக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு...’’‘‘அடடா... அப்புறம்?’’‘‘அப்புறம் என்ன? வேற என்ன வேலை தெரியும் எனக்கு? வீட்ல ரெண்டு நாளு சும்மாவே உட்கார்ந்து இருந்தேன். என் பொண்டாட்டிதான் டிரைவிங் கத்துகிட்டு டிரைவராவாச்சும் வேலைக்கு போய்யான்னு சொன்னா. லைசென்ஸ் எடுக்க காசுக்கு எங்க போறதுன்னு யோசிச்சுக்கிட்டே ரெண்டு நாள் ஓடிடுச்சு...’’‘‘அப்புறம் எப்படி லைசென்ஸ் எடுத்த?’’

‘‘என் பொண்டாட்டிதான் அது வேலை செய்யுற வீட்ல கடனா கொஞ்சம் பணம் வாங்கிட்டு வந்து கொடுத்தா. அதை வச்சு லைசன்ஸ் எடுத்துட்டேன்...’’
‘‘பரவாயில்லப்பா. உன் பொண்டாட்டி உனக்கு உறுதுணையாக இருக்கிறா. ஆமா... உனக்கு குழந்தைங்க எத்தனை பேரு?’’‘‘அது இருக்கு மூணு...’’‘‘மூணா?’’‘‘ஆமா. மூணும் பொட்டப் புள்ளைங்க...’’‘‘சரியாப்போச்சு. எப்படித்தான் சமாளிக்கிற?’’

‘‘எப்படியோ ரெண்டு பேருமே உழைச்சு மூணு வேளை கஞ்சி குடிச்சு காலத்தை ஓட்டிக்கிட்டு இருக்கோம்...’’‘‘கேட்கவே கஷ்டமா இருக்குதுப்பா. இதுல எவ்ளோ வருமானம் வருது?’’‘‘ஒரு நடைக்கு 400 ரூபா தர்றாரு ராஜாண்ணே. ஒரு நாளைக்கு ரெண்டு நட கூட கிடைக்குது. ஒரு நாளைக்கு சும்மா இருக்குற மாதிரியும் இருக்கு. மூட்ட தூக்கி உடம்பு போச்சு. இப்ப இந்த வேலை பரவால்ல. நல்லாத்தான் இருக்கேன்...’’ முகத்தில் மகிழ்ச்சி பொங்க பேசிய முத்துவை ஆச்சரியமாகப் பார்த்தார்
சிவநேசன்.

தூரத்தில் போலீஸ் நிற்பது தெரிந்தது. நெருங்க, நெருங்க முத்துவின் முகத்தில் பயம் தெரிய ஆரம்பித்தது. போலீஸ் இவர்கள் வண்டியை நிறுத்தச் சொன்னதும் வண்டியை நிறுத்தியவன் கீழே இறங்கி போலீஸ் அருகில் நின்று வணக்கம் வைத்தான்.சிவநேசனும் இறங்கி அருகில் சென்றார்.‘‘என்னடா லோடு?’’ என்று அதிகாரி அதிகாரமாய்க் கேட்டார்.‘‘கடை மாத்துறோம் சார்...’’ என்றான்.

‘‘எங்க சாமான்கதான் சார். பக்கத்து டவுனுக்குக் கொண்டு போறோம்...’’ என்றார் சிவநேசன்.‘‘பைபாஸ சுத்திட்டு போகாம இந்தப் பக்கமாப் போறீங்க? லோடு வண்டி இந்தப் பக்கம் போகக் கூடாதுன்னு தெரியாதா?’’ என்று சத்தமாகப் பேசினார் போலீஸ் அதிகாரி.பவ்யமாகக் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தான் முத்து.‘‘என்னடா வண்டியை விட உசரமா ஒரு டேபிளை கேபின் மேல கட்டி வச்சி இருக்குற?’’‘‘அது ஒண்ணு மட்டும் வைக்க இடம் இல்லைங்க... அதான்...’’ என்று சிவநேசன் சொல்ல, ‘‘நீங்க சும்மா இருங்க சார். நீ சொல்லுடா. நீ டிரைவர்தானே? உனக்குத் தெரியாதா? ஆர்சி புக், இன்சூரன்ஸ், லைசன்ஸ் எல்லாம் கொண்டா...’’ என்றார்.

ஓடிப்போய் அனைத்தையும் எடுத்து வந்து நீட்டினான். ஆர்சி புக்கைப் பார்த்தார். இன்சூரன்ஸ் பார்த்தார். கடைசியில் லைசென்ஸ் பார்த்தவர் முகம் சிவந்தது.
‘‘இது என்னடா... பேட்ஜ்  எடுக்கலையா நீ? இதை வச்சுக்கிட்டா இந்த வண்டிய ஓட்டிக்கிட்டு வர்ற?’’‘‘சார்... எடுத்துடுறேன் சார்...’’ கெஞ்சினான்.

‘‘சார் ஏதோ தெரியாம பண்ணிட்டாப்ள. மன்னிச்சு விட்டுடுங்க சார்...’’ என்றார் சிவநேசன்.‘‘சார்... என்ன பேசுறீங்க நீங்க? பேட்ஜ் போடாம இவன் எப்படி இந்த வண்டிய எடுக்கலாம்? பேசாம அபராதம் கட்டிட்டு கிளம்புங்க...’’ என்று கோபமாய் கத்திவிட்டு வேறு ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரிக்க ஆரம்பித்தார்.‘‘சார்... எவ்வளவு சார்...’’ என்று சிவநேசன் கேட்டுக் கொண்டிருந்தபோதே, இன்னொரு கான்ஸ்டபிள் சிவநேசனை தனியாக அழைத்துச் சென்றார்.‘‘சார்... அபராதம் அது இதுன்னு போனா அமௌண்ட் எங்கேயோ போகும். நீங்க ஒரு ஆயிரம் ரூபா கொடுத்துட்டு வண்டிய பைபாஸ் பக்கமா எடுத்துட்டு போயிடுங்க சார்...’’ என்றார் அந்த கான்ஸ்டபிள்.

‘‘கொஞ்சம் இருங்க சார்...’’ என்று தன் மொபைலை எடுத்து ராஜாவுக்கு டயல் செய்தார்.‘‘சொல்லுங்கண்ணே... கடைக்குப் போய் சேர்ந்துட்டீங்களா?’’‘‘இல்லப்பா, இங்க போலீஸ் புடிச்சுட்டாங்க...’’‘‘ஏன் என்னாச்சு?’’‘‘அது வந்து... முத்து கிட்ட பேட்ஜ் லைசென்ஸ் இல்ல. போலீஸ் இப்போ ஆயிரம் ரூபாய் கேட்கிறாங்க...’’‘‘தெரிஞ்ச பயலாச்சேனு அந்த பையன் கிட்ட லைசென்ஸ் கூட வாங்கிப் பாக்காம சேர்த்துக்கிட்டது தப்பாப் போச்சு. நீங்க பணத்தைக் கொடுத்துட்டு போங்கண்ணே... நான் பேசிக்கிறேன்...’’ என்று போனை வைத்தார் ராஜா.

பணத்தைக் கொடுத்துவிட்டு நகர்ந்தனர். நல்லபடியாக பொருட்களை இறக்கிக் கொடுத்துவிட்டு திரும்பவும் சிவநேசனை அழைத்துக் கொண்டு ஊர் வந்து
சேர்ந்தான் முத்து.‘‘சவாரிக்கான பணத்தை ராஜாண்ணா வாங்கிக்கிறதா சொன்னாரு. அவருகிட்டயே கொடுத்துடுங்கண்ணே...’’ என்று சொல்லிவிட்டு முத்து கிளம்பிவிட்டான்.
மறுநாள் ராஜா வந்து சிவநேசனிடம் அபராதமாய் கட்டிய ஆயிரம் ரூபாயைக் கழித்து பணத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பினார்.

ஒரு வாரம் கழித்துப் புதுக்கடைக்கு சாமான்கள் வாங்க மார்க்கெட் பக்கம் போன சிவநேசன் அங்கே முத்து மூட்டை தூக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துப் பதறிவிட்டார்.
‘‘என்னப்பா முத்து... நீ திரும்பவும் இங்க வந்து மூட்ட தூக்குற? உன் முதுகுல பிரச்சனை இருக்குன்னு டாக்டர் உன்னை மூட்ட தூக்கக்கூடாதுன்னு சொன்னதா சொன்னியே? அந்த டிரைவர் வேலை என்ன ஆச்சு?’’‘‘என்னண்ணா நல்லா இருக்கீங்களா? வள்ளி அக்கா எப்படி இருக்காங்க?’’ என்றவன் அவனே தொடர்ந்தான்.

‘‘அன்னைக்கு ராஜாண்ணே ரொம்ப கோபமாப் பேசி என்னை வேலைக்கு வர வேணாம்னு சொல்லிட்டாரு. எனக்கு கொடுக்க வேண்டிய கூலியைக் கூட கொடுக்கல. நான் பேட்ஜ் லைசன்ஸ் எடுக்காததுனாலதான் ஆயிரம் ரூபா அபராதம் கட்டுணோம்னு என் மேல கோபப்பட்டுட்டாரு. நான் பேட்ஜ் எடுக்க பணம் வேணுமே... அதான் திரும்பவும் மூட்டையே தூக்கலாமுன்னு வந்துட்டேன்...’’திகீர் என்றது சிவநேசனுக்கு.‘அடப்பாவமே... நாம அன்னைக்கு எல்லாத்தையும் ராஜா கிட்ட சொல்லாம ஓவர் லோடு ஏத்துனதுனாலதான் அபராதம் கட்டச் சொன்னாங்கன்னு மட்டும் சொல்லி இருக்கலாமே... கடவுளே. நம்மளால ஒருத்தனோட வேலை போயிடுச்சே...’ என்று கவலையில் ஆழ்ந்தார்.

‘‘என்னண்ணே யோசனையா இருக்கீங்க?’’

‘‘ஒண்ணும் இல்லப்பா. என்ன மன்னிச்சிடு. இந்தா இந்த ஆயிரம் ரூபாய நீ வச்சுக்க. போய் லைசன்ஸ் எடுத்து நீ அந்த வேலைக்கே போயிடு...’’‘‘பரவால்லண்ணே. தப்பு என் மேலதானே? நான் பாத்துக்குறேன். நீங்க கவலைப்படாமப் போங்க...’’ என்று துண்டை எடுத்துத் தலைப்பாகையாகக் கட்டிக்கொண்டு லோடு இறக்கும் வண்டியை நோக்கிப் போனான்.முத்து சுமக்கும் மூட்டையின் பாரம் சிவநேசனின் இதயத்தில் அழுத்தியது.

செந்தில்குமார் அமிர்தலிங்கம்