Must Watch



ஏலியன்: ரோமுலஸ்

‘ஹாட் ஸ்டாரி’ல் பார்வைகளை அள்ளி வரும் ஆங்கிலப்படம் ‘ஏலியன்: ரோமுலஸ்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. நாற்பது வருடங்களுக்கு முன்பு ‘ஏலியன்’ என்ற ஆங்கிலப்படம் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பேரதிர்வைக் கிளப்பியது. இந்த வரிசையில் வருகின்ற ஒன்பதாவது படம் இது.வேலேண்ட் யுடானி எனும் நிறுவனம் மற்ற கிரகங்களிலிருக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டி பிசினஸ் செய்து வருகிறது. பல கிரகங்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது இந்நிறுவனம்.  

இதில் ஒரு கிரகத்தில் சுரங்கத்தொழிலாளியாக வேலை செய்கிறாள் ரெயின். அவள் ஒரு அனாதை. அவளுக்குத் துணையாக ஆண்டி என்கிற ரோபோ மட்டும் இருக்கிறது.
ஓர் அடிமை போல இருப்பது அவளுக்குச் சுத்தமாகப் பிடிப்பதில்லை. அதனால் வேறு ஒரு கிரகத்துக்குத் தப்பித்துச் செல்ல முயற்சி செய்கிறாள். 

இந்த முயற்சியின் போது ஏராளமான ஆபத்துகளை ரெயின் சந்திக்கிறாள். அவள் எப்படி ஆபத்துகளை வென்று, அடிமை வாழ்க்கையிலிருந்து வெளியேறுகிறாள் என்பதை திரில்லிங்காகச் சொல்லியிருக்கிறது திரைக்கதை. ஏலியன் பற்றிய படங்களை விரும்புகிறவர்களுக்கு இப்படம் நல்ல விருந்து. இதன் இயக்குநர் ஃபிடே அல்விராஸ்.

தெக்கு வடக்கு

‘அமேசான் ப்ரைமி’ல் வெளியாகியிருக்கும் மலையாளப் படம், ‘தெக்கு வடக்கு’. கேரளாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் படத்தின் கதை நிகழ்கிறது. எஞ்சினியராக வேலை செய்து ஓய்வு பெற்றவர், மாதவன். வயதானாலும் ரொம்பவே துடிப்பான ஆள். சுலபமாக அவரைத் தூண்டி விடலாம்.

இன்னொரு பக்கம் அரிசி ஆலையை நடத்தி வருகிறார் சங்குன்னி. இவரும் எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடிய ஒரு ஆள்தான். மாதவனுக்கும், சங்குன்னிக்கும் இடையில் அடிக்கடி ஏதாவது ஒரு சண்டை வந்துகொண்டே இருக்கிறது. அவர்களது பிரச்னைதான் ஊர் மக்கள் மத்தியில் முக்கிய பேசு பொருளாகவும், பொழுது போக்காகவும் இருக்கிறது. 

இருவரும் எப்போதுமே தெக்கும், வடக்கும் போலவே இருக்கின்றனர். ஓயாத இவர்களது சண்டை முடிவுக்கு வந்ததா என்பதே கிளைமேக்ஸ்.நில உரிமை காரணமாக நடக்கும் சண்டைகளை பகடி செய்திருக்கிறது இந்தப் படம். சூரஜ்ஜும், விநாயகனும் முக்கிய கதாபாத்திரங்களில் பட்டையைக் கிளப்பியிருக்கின்றனர். இப்படத்தின் இயக்குநர் பிரேம் சங்கர்.

ஸ்பெல்பவுண்ட்

‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் அனிமேஷன் படம் ‘ஸ்பெல்பவுண்ட்’. தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது.   லும்பிரியா எனும் மேஜிக்கல் ராஜ்ஜியத்தின் இளவரசியாக இருக்கிறாள், எலியன். அவளது அப்பா சோலோன் ராஜாவாகவும், அம்மா எல்ஸ்மியர் ராணியாகவும் இருக்கின்றனர். எலியனின் பெற்றோர் பெயருக்குத்தான் ராஜா, ராணியாக இருக்கின்றனர். ஆம்; மிகவும் சக்தி வாய்ந்த மந்திரத்தால் எலியனின் அப்பாவும், அம்மாவும் ராட்சத அரக்கர்களாக மாறிவிட்டனர்.

அதனால் அடுத்த ராணியாக எலியன்தான் பொறுப்பேற்க வேண்டிய நிலை. ஆனால், எலியனோ பதின்பருவத்தில்தான் இருக்கிறாள். அவளுக்கு எப்படியாவது பெற்றோரை பழைய படி மனிதர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் முதன்மையான நோக்கம். இதற்காக பல முயற்சிகளை  செய்கிறாள். ஆனால், எந்த முயற்சியும் வெற்றியடைவதில்லை.

எலியன் தனது பெற்றோர்களைப் பழையபடி மனிதர்களாக மாற்றினாளா? அரக்கர்களான எலியனின் பெற்றோர்களால் பொது மக்களுக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்ததா என்பதை நகைச்சுவையுடன் சொல்லியிருக்கிறது திரைக்கதை. ஜாலியாக குடும்பத்துடன் கண்டு களிக்க ஒரு படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்கி ஜென்சன்.

பஹீரா

இந்த வருடம் அதிக வசூல் செய்த கன்னடப் படம், ‘பஹீரா’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் காணக்கிடைக்கிறது.சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்ற முயற்சியில் இருக்கிறார் வேதாந்த். ஆனால், அவருடைய அம்மா புற்றுநோயினால் இறப்பதற்கு முன்பு, “சாதாரண மனிதர்கள்தான் சூப்பர் ஹீரோக்கள். குறிப்பாக போலீஸ்தான் சூப்பர் ஹீரோ...’’ என்று சொல்லிவிட்டு இறந்துவிடுகிறார்.

அதனால் போலீஸ் அதிகாரியாக முடிவு செய்கிறார் வேதாந்த். பயிற்சி எல்லாம் முடித்து மங்களூரில் போலீஸ் அதிகாரியாக பதவி ஏற்கிறார். அங்கே ஒரு பெண் மருத்துவருடன் அவருக்கு காதல் மலர்கிறது. ஊரில் அட்டூழியம் செய்பவர்களை எல்லாம் பிடித்து, சிறையில் அடைக்கிறார் வேதாந்த். 

ஆனால், பெரிய இடத்து செல்வாக்கால் அந்த குற்றவாளிகள் வெளியே வந்துவிடுகின்றனர். போலீஸாக இருந்து எதுவும் செய்ய முடியாது என்று உணர்கிறார் வேதாந்த். உடனே சூப்பர் ஹீரோ ஆடையை அணிந்துகொண்டு, ‘பஹீரா’ என்று பெயரில் குற்றவாளிகளை வேதாந்த் வேட்டையாட, சூடுபிடிக்கிறது திரைக்கதை. ‘கே.ஜி.எஃப்’ புகழ் பிரசாந்த் நீல் கதை எழுத, படத்தை இயக்கியிருக்கிறார் டாக்டர் சூரி.

தொகுப்பு: த.சக்திவேல்