12 மணி நேர வேலை... வாரத்திற்கு 70 மணி நேரம்... பொருளாதாரம் உயராது... செலவே அதிகரிக்கும்!



கடந்த 2023ம் ஆண்டு, இன்ஃபோசிஸ் நிறுவனர்களில் ஒருவரான நாராயணமூர்த்தி, ‘நமது இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் வேலைசெய்வதை விரும்ப வேண்டும்’ என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையானது. 
இந்நிலையில் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி சேனல் நடத்திய ஒரு நிகழ்விலும் இந்த வேண்டுகோளை அவர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

‘‘இந்த நாட்டில் நாம் கடினமாக உழைக்க வேண்டும். வாழ்க்கை - வேலை சமநிலையில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் 70 மணி நேரம் வேலை என்ற எனது பார்வையை நான் கடைசிவரை மாற்றப் போவதில்லை’’ எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு உடனடியாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிலடி தந்தனர்.‘மன்னிக்கவும், எங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது. வீட்டிலும் பணிபுரிய வேண்டும்; அலுவலகத்திலும் வேலை செய்ய வேண்டும். 

நீங்கள் அப்படியல்ல. வீட்டிலும் அலுவலகத்திலும் உங்களுக்காக, உங்கள் தேவைக்காக பலரும் உழைக்கிறார்கள். சமையல், டீ, இஸ்திரி போடுவது என சகலத்துக்கும் ஆட்களை வைத்திருக்கிறீர்கள்.நாங்கள் அப்படியல்ல. வீட்டில் பால் வாங்குவது முதல் அலுவலகத்தில் எழுந்து சென்று டீ குடிப்பது வரை எங்களுக்கானதை நாங்கள்தான் செய்ய வேண்டும்.

கணவன், மனைவி இருவரும் பணிபுரிபவர் என்றால் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். டிராஃபிக்கில் ஊர்ந்து ஊர்ந்து வேலைக்கு வர வேண்டும்.
பணிக்கு செல்லும் பெண்கள் அதிகாலையில் எழுந்து சமைப்பது முதல் சகல பணிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒரேயொரு வேண்டுகோள். ஒரு லேத் பட்டறையில், கம்பெனியில் நீங்கள் தினமும் 12 மணிநேரம் உழைத்துக் காட்டுங்களேன்...’என்கிறார் ஒருவர்.இன்னொருவரோ, ‘நாம் வாரத்தில் 7 நாட்கள் வேலை செய்தால் முதலாளி மகிழ்ச்சியாக இருப்பார். சம்பளம்தானே தருகிறீர்கள். ஊழியர்களுக்கு லாபத்தில் பங்கா கொடுக்கிறீர்கள்? தங்கள் சுயநலத்திற்காக சமுதாயத்தை வேலைக்கு அடிமையாக்கும் இதுபோன்ற ஆட்களிடம் ஜாக்கிரதை...’ எனத் தெரிவித்துள்ளார். இப்படி நிறைய கமென்ட்கள் உள்ளன.

இதுகுறித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜனிடம் பேசினோம். ‘‘இது அப்பட்டமான லாப நோக்கம் உள்ள ஒரு வாதம்...’’ எனக் கடுமையாகக் கண்டித்தவர், தொடர்ந்தார்.   
‘‘வேலை நேரம் என்ற வரையறை ஒரு காலத்தில் கிடையாது.

பெரிய தொழிற்சாலைகள், தொழிலாளிகள் என்ற முறை இருந்தபோது வேலை நேரத்திற்கு ஒரு வரையறையே இல்லை.சூரிய உதயத்திலிருந்து மறைவு வரை, அதாவது கண்கள் நன்றாகத் தெரிகிற வரை வேலை செய்வார்கள். சென்னை பின்னி மில்லில்கூட அப்படிதான் வேலை செய்தனர். 15 மணி நேரம் வேலை வாங்கின காலம் அது.  

அதையொட்டிதான் வேலை நேரக் குறைப்பிற்காகத் தொழிலாளிகள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தினர். முதலாளிகளின் லாபத்தை எதிர்த்த முதல் போராட்டம் அது. ஏனெனில், முதலாளிகளின் லாபம் என்பது தொழிலாளிகளிடம் எவ்வளவு கூடுதல் நேரம் வேலை வாங்குகிறோம் என்பதில்தான் உள்ளது.

அப்படியான நேரத்தில் முதலாளிகளின் லாபத்தில் கைவைக்கிற முதல் பெரும் போராட்டம் பல நாடுகளில் நடந்தது. அதுவே மே தினப் போராட்டம். இன்றும் மே 1ம் தேதி தொழிலாளர் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம். இதன்விளைவாக புதிய சட்டங்கள் வந்தன.

முதலில் வந்த சட்டம் 10 மணி நேரம் வேலை என்பதாக இருந்தது. படிப்படியாக மாறி கடைசியில் உலகம் முழுவதும் எட்டு மணி நேர வேலை என்றானது. எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர உறக்கம், எட்டு மணி நேர பொழுதுபோக்கு. ஆனால், தற்போது இந்த எட்டு மணி நேரமும் சாத்தியமில்லை. இதைக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. எவ்வளவு நேரம் ஒரே வேலையைச் செய்யமுடியும்? இதனால் Fatigue Syndrome என்கிற சோர்வு நோய் ஏற்படுகிறது. ஜப்பான் மாதிரியான நாடுகளில் உடல் சோர்வு என்பது நோயாகப் பார்க்கப்படுகிறது.

இது தொற்றுநோய் அல்ல. வேலை செய்வதால் வருகிற அசதி நோய். இதனால் மனைவியைப் பார்த்தால் பிடிக்காது. குழந்தைகளைப் பார்த்தால் பிடிக்காது. யாரிடமும் பேசப் பிடிக்காது. இயந்திரம் மாதிரி ஆகிவிடுவார்கள். இந்த Fatigue நோய் தற்போது ஐடி துறையில் வேலை பார்ப்பவர்களுக்கும் வந்துவிட்டது. கூடுதல் வேலை நேரம் காரணமாக வரக்கூடிய பிரச்னை இது.

அதேமாதிரி நீங்கள் கூடுதலாக வேலை பார்த்தால் உடலில் என்னென்ன மாதிரியான பாதிப்புகள் வரும் என்பதற்கு ஐநா சபையின் ஆய்வு, சர்வதேச தொழிலாளர் சங்கத்தின் ஆய்வு, பெரிய கல்வி நிறுவனங்கள் செய்தவை எனப் பல்வேறு ஆய்வுகள் உள்ளன.

அதேபோல இரவு வேலை. இது செயற்கையானது. மனிதன் இரவில் தூங்க வேண்டும். தூங்காமல் இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? ஆண்களுக்கு என்ன பாதிப்பு? பெண்களுக்கு என்ன பாதிப்பு... எல்லாவற்றிற்கும் அறிவியல்பூர்வமான ஆதாரம் உள்ளது. 

அதனால், எட்டு மணி நேர வேலை என்பதை குறைக்க முயற்சிக்க வேண்டுமே தவிர, அதிகரிக்க முயற்சிக்கக் கூடாது. மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக நாராயணமூர்த்தி எந்த நாட்டை காட்டுகிறாரோ, இவர் மருமகன் எந்த நாட்டில் பிரதமராக இருந்தாரோ அந்த லண்டனிலேயே வாரத்திற்கு 40 மணி நேரம்தான் வேலை நேரமாக உள்ளது.

ஃபிரான்ஸில் 35 மணி நேரம்தான் வேலை நேரம். இந்த 35 மணி நேரத்தை நாற்பதாக்க அரசு முயற்சி எடுக்கிறது. இந்த 40 மணி நேரம் என்பதை கணக்கிட்டால் வாரத்திற்கு 8 மணி நேரம்கூட வராது. இதை எதிர்த்துதான் அங்கே கடுமையான போராட்டம் வெடித்தது. 

அதேபோல அமெரிக்கா, நார்வே, ஸ்வீடன், டென்மார்க், ஜெர்மன் உட்பட எல்லா நாடுகளிலும் 35 டூ 40 மணி நேரம்தான் வேலை. அங்கே 48 மணி நேரம்கூட வேலை நேரமாக இல்லை. இந்த நிலையில்தான் 72 மணி நேரம் இருந்தால்தான் நாடு முன்னேறும் என நாராயணமூர்த்தி சொல்கிறார்.

எந்த நாடு முன்னேறிய நாடு என அவர் சொல்கிறாரோ அந்த எல்லா மேற்கத்திய நாடுகளிலும் வேலை நேரம் என்பது 35 டூ 40 மணி நேரம்தான். அது எப்படி முன்னேறுகிறது, அந்த நாடுகள் மட்டும் எப்படி வளர்ச்சியை எட்டுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும்.

 அதைவிடுத்து இங்கே 72 மணி நேரம் இருந்தால்தான் நாடு முன்னேறும் எனப் பேசினால் என்ன அர்த்தம்? ஆக, இது மிகமிக மோசமான கார்ப்பரேட் வாதம். இந்த வேலை நேரத்தை அதிகரிக்க அது கடுமையான விளைவுகளை உடலில் ஏற்படுத்திவிடும்.

சொல்லப்போனால் ஆயுட்காலமே குறையும். சாதாரணமாக ஒருவர் 70 வயதில் இறப்பார் என்றால் அவரின் ஆயுட்காலம் 60 ஆகிவிடும். இன்று இந்தியாவில் இவ்வளவு வளர்ச்சி மாற்றங்கள் வந்தாலும்கூட நம் சராசரி ஆயுட்காலம் 67 வயதுதான்.இதுதவிர, தொழில் வழி நோய் என்று இருக்கிறது. தொழில் மூலம் வரக்கூடிய நோய்கள். இவை எல்லாவற்றுக்கும் ஆய்வுகள் இருக்கின்றன.

இப்படிப்பட்ட சூழலில் இந்தமாதிரி ஒரு நபர் பேசுவது தவறானது. எதை நாம் ஒரு குறிப்பிட்ட லிமிட் தாண்டி செய்யக்கூடாதோ அதை செய்யக்கூடாது. ஏனெனில், அதற்கு உடல் ஒப்புக்கொள்ளாது...’’ என்றார் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன்.

இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா, ‘‘இப்போதுள்ள எட்டு மணி நேர வேலையிலேயே பலருக்கும் பல்வேறு உடல் உபாதைகளும், மனஅழுத்தப் பிரச்னைகளும் வருகின்றன. இதில் 12 மணி நேர வேலை என்றால் அவ்வளவுதான். இன்னும் கூடுதல் அழுத்தங்களுடனும், நோய்களுடனும்தான் மனிதர்கள் வாழ்வார்கள்.

இப்போது எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் பெயருக்குதான் எட்டு மணி நேர வேலையென இருக்கிறது. ஆனால், எல்லோருமே 10 முதல் 12 மணி நேரம் வேலையைச் செய்கின்றனர். இது அறிவிக்கப்படாத வேலை நேரமாகவே ஆகிவிட்டது.   

இனி, அவர் சொன்னபடி 12 மணி நேரம் என வேலை செய்தால் அது 16 மணி நேரத்திற்கு கொண்டு போய்விடும் வாய்ப்புள்ளது. இப்போதே குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவழிக்க முடியாமல் பலரும் தடுமாறுகின்றனர். இதில் கணவன், மனைவி இருவரும் வேலை செய்கிறவர்களாக இருந்தால் குடும்பத்தையும், குழந்தைகளையும் யார் கவனிப்பது என்ற பிரச்னை எழும்.

உடல்ரீதியாக ஒரு மனிதனால் சுமார் 5 மணி நேரம்தான் உற்பத்தித் திறனுடன் கூடிய சிறப்பான பணியைச் செய்ய முடியும். அதுவும் அவன் நன்றாகத் தூங்கி எழுந்தபிறகு வேலையைத் தொடங்கினால்தான் இந்த உற்பத்தித்திறன் சார்ந்த வேலையும் சரியாக நடக்கும்.

முறையான தூக்கமும், ஓய்வும் இல்லாத நிலையில் வேலை செய்வது நீண்ட நேரம் என்றாலும் அதில் இருந்து சரியான திறன் வெளிப்படாமல் போகும் வாய்ப்பு உண்டு.
முதலில் மூளை சோர்வாகும். 

அடுத்து ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதால் இடுப்பெலும்பு, கழுத்து எலும்பு தேய்மானங்கள், உடல் பருமன், உள்ளிட்ட பல உடல் சார்ந்த பிரச்னைகள் தோன்றும். ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வது புகைப்பழக்கத்திற்கு சமமானது என ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது, எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல், உடல் செயல்பாடு இல்லாமல் உட்கார்ந்து இருந்தால் இதயம் சார்ந்த பிரச்னைகள் வர வாய்ப்பு அதிகம்.

ரத்த நாளத்தில் அடைப்பு ஏற்படலாம்.ஐடியில் இருப்பவர்களுக்கு மனஅழுத்தம் மற்றும் உடல்உபாதைகள் வரக் காரணம் இரவு, பகல் என நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதுதான். கம்ப்யூட்டரில் வேலை செய்கிறவர்கள் ஒருநாளைக்கு 8 மணி நேரமாவது கட்டாயம் தூங்க வேண்டும். அப்போதுதான் கண்கள், மூளை எல்லாம் நன்றாக இருக்கும்.

இல்லையெனில் ஃபேட்டிக் சிண்ட்ரோம் (Fatigue Syndrome) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதனால் தசைகள் சோர்வாகிவிடும். மனஅழுத்தம் ஏற்படும். தொடர்ந்து அழுத்தத்தில் வேலை செய்கிறவர்கள் ஊட்டச்சத்தான உணவு எடுக்கமாட்டார்கள். இதனால், ஊட்டச்சத்துக் குறைபாடு வரும்.

தசைகள் தளர்வாகி நினைவுகள் மங்கிப்போகும். காலையில் என்ன சாப்பிட்டோம் என்பதுகூடத் தெரியாது. கவனக் குறைபாடு நிறைய வரும். தவிர, இன்று குழந்தையின்மை பெரிய பிரச்னையாகி வருகிறது.

இதற்கு நீண்ட நேரப் பணியும் ஒரு காரணம். வெப்பமான சூழலில் நீண்ட நேரம் வேலை செய்வதும், மனைவியுடன் நேரம் ஒதுக்காமல் வேலை வேலையென இருப்பதும் குழந்தையின்மைக்கு வித்திடுகிறது. இதனுடன் 30 வயதிலேயே சுகர், பிரஷர், ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட பிரச்னைகளும் வருகின்றன. எல்லாவற்றிற்கும் அதிக வேலைப் பளுதான் காரணமென ஆய்வுகள் சொல்கின்றன.  

என்னைக் கேட்டால் எட்டு மணி நேரம் என்பதை ஆறு மணி நேரமாகக் குறைக்கலாம். ஏனெனில், உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்றால் ஆறு மணி நேரம் போதுமானது.
சில வளர்ந்த நாடுகளில் வேலை நேரத்தைக் குறைக்கிறார்கள். நான்கு நாட்கள் விடுமுறை அளித்து மூன்று நாட்களே வேலை செய்கிறார்கள்.

 வளர்ந்து வரும் நாடான நாம் அந்தளவுக்கு போகத் தேவையில்லை என்றாலும்கூட ஒருபோதும் வேலை நேரத்தை அதிகரிக்கக் கூடாது. வேலை நேரத்தை அதிகரிப்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்காது. மாறாக, பல்வேறு நோய்களை வரவழைத்து செலவுகளைத்தான் அதிகரிக்கும்...’’ என்றார் மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா.

பேராச்சி கண்ணன்