அதிகரிக்கும் GYM மரணங்கள்... என்ன காரணம்..?



‘ஜிம்’முக்கு செல்பவர்கள் ஆரோக்கியமானவர்கள்... உடல் வலு கொண்டவர்கள்... நோய் எதிர்ப்பு சக்தி படைத்தவர்கள்... என்றெல்லாம் அனைவரும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், ஜிம் மரணங்கள் தொடர்ந்து நிகந்தவண்ணம் இருக்கின்றன. 
சென்ற வாரம் கூட சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிம் உரிமையாளர் - அதுவும் 36 வயதே ஆன மஹாதிர் முகமது ஜிம்மிலேயே மாரடைப்பால் இறந்திருக்கிறார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னடத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்த புனித் ராஜ்குமார் முதல் சாதாரண, சாமான்ய மனிதர்கள் வரை ஜிம்மில் பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து வருகிறார்கள். 
இந்த எண்ணிக்கை அதிகரித்தபடி இருப்பதுதான் பெரும் ஷாக்.இந்நிலையில் ஜிம் வொர்க் அவுட் குறித்த பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதற்கெல்லாம் இதய மருத்துவர்கள் என்ன விடை அளிக்கிறார்கள்? தொகுத்துப் பார்ப்போம்.ஒவ்வொரு மனிதனின் உடலிலும் மொத்தம் மூன்று இதயங்கள் உள்ளன என்கிறார்கள் இதய நோய் மருத்துவர்கள்.

நெஞ்சுப்பகுதியில் ஒன்று, வலது மற்றும் இடது கெண்டைக்கால் பகுதி தசைகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இதயங்களாக உள்ளன. இந்த கெண்டைக்கால் இதயத்தை பெரிஃபரல் ஹார்ட் (Peripheral Heart) என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். 

நாம் நிற்கும்போதும், நடக்கும்போதும் இந்த தசைகள்தான் இதயத்திற்கு ரத்தத்தை சீராக அனுப்புகின்றன. இதனை ஆக்டிவாக வைத்திருக்கத்தான் நடைப்பயிற்சி, நீச்சல், மிதிவண்டி ஓட்டுதல் என ஏதோவொரு பயிற்சியை மருத்துவர்கள் செய்யச் சொல்கிறார்கள்.

உடற்பயிற்சி செய்யும்போது எண்டார்ஃபின் என்ற‌ மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கும். இந்த ஹார்மோன் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். ஆனால், தற்போது ஜிம்களில் குறிப்பிட்ட நேரத்திற்குள் உடற்பயிற்சியை செய்து முடிக்க வேண்டும் என்ற‌ அவசரத்தில் உடற்பயிற்சி செய்வதால் எண்டார்ஃபின் சுரப்பதற்கு பதில் அட்ரினலின் சுரந்து பதற்றமும் மன அழுத்தமும் ஏற்பட்டு விடுகின்றன.

விளைவு, வெறும் இரு மில்லிமீட்டர் குறுக்களவு கொண்ட இதய ரத்தக்குழாய்களில் ஏதோ ஓர் இடத்தில் சிறிய கீறல் ஏற்பட்டு இரத்த உறைவு ஏற்படுகிறது.

அந்தக் கீறல் இதயத்தின் முக்கியமான முதன்மை ரத்தக்குழாயில் ஏற்பட்டால் ரத்த உறைவு ஏற்பட்டு, அடுத்த மூன்று நான்கு நிமிடங்களில் ஒருவர் இறந்துகூட போகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உண்மையில் இன்று உடல் எடையைக் குறைக்கத்தான் பலரும் ஜிம்முக்குச் செல்கிறார்கள். ஆனால், எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும், 10 சதவீதத்திற்கு மேல் பருமன் குறையாது என்பதே உண்மை.

இதற்கு மாறாக உணவு முறையை ஒழுங்குபடுத்துவது தான் உடல் எடையைக் குறைப்பதற்கான ஒரே - அதுவும் பாதுகாப்பான வழி.இப்படி உடற்பயிற்சி செய்யும்போது சிலர் இறக்கிறார்கள் என்றால் வேறு சிலர் ஜிம்மில் பயிற்சி முடிந்த பின் நீராவிக்குளியல் எடுக்கும்போது - குளியலறையில் மரணம் அடைகிறார்கள்.இதற்கு முக்கிய காரணம், கார்டியாக் அரெஸ்ட். 

இதற்கே வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். இதயத்தின் தசைகள் துடிப்பதற்கு அவற்றில் நுண்ணிய அளவு மின்சாரக்கடத்தல் தொடர்ந்து நடந்துகொண்டிருக்க வேண்டும். இந்த மின்னோட்டம் முறையாக நிகழ வேண்டுமென்றால், நமது உடலின் செல்களுக்கு உள்ளேயும் வெளியேயும் சரியான அளவில் பொட்டாசியம், மெக்னீசியம், சோடியம், கால்சியம் ஆகிய தாது உப்புகள் இருக்க வேண்டும். குறிப்பாக, பொட்டாசியம்.

இப்படியிருக்க ஜிம்மில் மூன்று மணிநேரங்களுக்கு மேல் கடினமாக உடற்பயிற்சி செய்த ஒருவர், கூடவே நீராவிக்குளியலும் எடுத்திருக்கிறார் என்றால், உடலில் இருந்து நீர்ச்சத்து நிறைய வெளியேறி இருக்கும். அளவுக்கதிகமாக நீர்ச்சத்து குறையும்போது நம் உடலில் அமிலத்தன்மை ஏற்படும். 

அதை ஈடு செய்ய நம் உடலில் செல்களுக்கு உள்ளே இருக்கிற பொட்டாசியம் தாது, வெளியே வந்து ரத்தத்தில் கலந்து விடும். விளைவு, இதயத்தின் மின்சாரக் கடத்தலில் சிக்கல் ஏற்பட்டு கார்டியாக் அரெஸ்ட் ஏற்படும் என்று அடித்துச் சொல்லும் மருத்துவர்கள், அளவுக்கதிகமாக பயிற்சியில் ஈடுபட்டாலும், கடினமான உடற்பயிற்சிகளைப் பதற்றமில்லாமலும் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள்.

ஜான்சி