இந்திய வங்கிகளில் மூன்று மட்டுமே பாதுகாப்பானவை!
இப்படி சொல்வது தனியார் அமைப்பு நடத்திய ஆய்வு அல்ல. இந்திய ரிசர்வ் வங்கி! ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில்தான் இந்தியாவில் வங்கித் துறை அறிமுகமானது. இந்திய முதலாளிகள், பெரும் நிலப்பிரபுக்கள் போன்றவர்களின் பணத்தை ஒன்று திரட்டி வைப்பதற்கான நிறுவனமாகவும் பாதுகாப்பான கொடுக்கல், வாங்கல் செய்வதற்கான வட்டி லேவாதேவி தொழிலை வங்கி மூலதனம் என்ற பெயரில் பாதுகாக்கவுமே அன்று வங்கிகள் நடத்தப்பட்டு வந்தன. இவை எல்லாமே தனியார் வங்கிகள்தான்.
இந்த தனியார் வங்கிகள் திவாலாகத் துவங்கியபோது நாட்டின் தனியார் வங்கிகளை ஒன்றிணைத்து பொதுத்துறை வங்கிகளாக்கி நாட்டுடைமை ஆக்கியது இந்திராகாந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி. ஆனால், அதே காங்கிரஸ் கட்சி 1990களில் பொதுத்துறை வங்கிகளை மெல்ல மெல்ல தனியார்மயமாக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.இதனைத் தொடர்ந்து 2014ம் ஆண்டு பாஜக தலைமையிலான மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் வங்கித் துறை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தடுமாறத் தொடங்கியதாகச் சொல்கிறார்கள். இதனை சரிசெய்யும் நடவடிக்கையாக பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் ஒன்றிணைக்கப்பட்டு அதன் மூலதனம் ஒன்று குவிக்கப்பட்டன. இப்படி ஒன்றுகுவிக்கப்பட்ட மூலதனம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டன. பெற்றுக் கொண்ட நிறுவனங்கள் உரிய வட்டி, அசலை செலுத்தாமல் வங்கிகளை அலைக்கழித்தன. பாஜக அரசும் ‘தங்களுக்கு வேண்டப்பட்ட’ கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடனை, வாராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்யத் தொடங்கின.
இந்தப் பின்னணியில் தலைப்பிலுள்ள விஷயத்தை பார்ப்பதற்கு முன் இந்திய வங்கிகளின் வளர்ச்சி வரலாற்றை சுருக்கமாக அறிந்து கொள்வது நல்லது. அப்பொழுதுதான் முழுமையாகப் புரியும்.
இந்திய வங்கிகளின் வளர்ச்சி இந்தியாவில் 1930, 1940 மற்றும் 1950களில் நாட்டில் அனைத்து வங்கிகளும் தனியார் வங்கிகளாகவே இருந்தன. அவற்றில் சில அந்நிய வங்கிகளாகவும் இருந்தன. இந்நிலையில் பல தனியார் வங்கிகள் தோல்வியடைந்து, மூடப்பட்டன.
இந்த வங்கிகளில் தங்களது சேமிப்புகளை வைத்திருந்த அப்பாவி மக்கள் தங்களது பணத்தினை இழந்தனர். 1913 தொடங்கி 1960 வரை 1639 வங்கிகள் இவ்வாறு தோல்வியடைந்து மூடப்பட்டுள்ளன. 1939 மற்றும் 1940ம் ஆண்டுகளில் அதிகபட்சமாக முறையே 117 மற்றும் 107 வங்கிகள் திவாலாகியுள்ளன.1961 முதல் 1968 வரை, தோல்வியடைந்த 263 வங்கிகள் வேறு ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டன. இக்காலத்தில் வேறு எந்த ஒரு வங்கியும் மூடப்படவில்லை.
இதில் அதிகபட்சமாக 1964ல் 82 வங்கிகள் வேறு ஏதாவது ஒரு வங்கியுடன் இணைக்கப்பட்டன. இப்படியாக 1969 தொடங்கி 2020 வரை 25 தனியார் வங்கிகள் பல்வேறு பொதுத்துறை வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.இந்த வகையில் 1947 முதல் 1969 வரை 500க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாயின.
இக்காலத்தில் வங்கிகள் தனியார் நிறுவன முதலாளிகள் வசமிருந்தன. இப்படியாக வங்கிகள் திவாலாகி மக்களின் நம்பிக்கையை இழந்த காலத்தில்தான் ஜூலை 19, 1969ல் 14 பெரிய தனியார் வங்கிகளை அப்போதைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தேசியமயமாக்கினார். விவசாயம், தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பை மையப்படுத்தும் வகையில் இந்த வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதாக முன் வைக்கப்பட்டது. எனினும் இது வங்கிகளின் வரலாற்றில் திருப்புமுனை என்றே சொல்லலாம்.சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா வங்கி, யுனைடெட் கமர்சியல் வங்கி, சிண்டிகேட் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, யுனெட்டட் பேங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி, டினா வங்கி, அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா போன்றவையே இந்த 14 வங்கிகள்.
இதைத் தொடர்ந்து 1980ல் 200 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு உடைய ஆறு வங்கிகள் நாட்டுடைமையாக்கப்பட்டன. அவை: ஆந்திரா வங்கி, பஞ்சாப் அண்ட் சிந்து பேங்க், நியூ பேங்க் ஆஃப் இந்தியா, விஜயா பேங்க், கார்ப்பரேஷன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் காமர்ஸ் போன்றவை.
அதன் பிறகு பாஜக தலைமையிலான மோடியின் ஆட்சியின் கீழ் 2020ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார மேம்பாட்டுக்காக என்ற பெயரில் நாட்டில் உள்ள 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு நான்கு வங்கிகளாக செயல்படத் தொடங்கின. இதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் ஆகியவை இணைந்துள்ளன.
கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கியும், இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கியும் இணைக்கப்பட்டுள்ளன. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைந்துள்ளன.
இந்த வங்கிகள் எவ்வாறு வாடிக்கையாளர்களை நடத்துகின்றன, அதன் காப்புத் தொகை எவ்வளவு போன்றவற்றை இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்து அவற்றில் எந்த வங்கிகள் பாதுகாப்பானது என்ற D-SIBS பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான D-SIBS பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த மதிப்பீட்டின்படி, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த எச்டிஎஃப்சி மற்றும் ஐசிஐசிஐ ஆகிய வங்கிகள் 2024ம் ஆண்டில் பாதுகாப்பான வங்கிகளாக தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கியால் உள்நாட்டு அமைப்பு ரீதியாக முக்கியமான வங்கிகளாக (D-SIBs) குறிப்பிடப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டு அமைப்புக்கு முக்கியமானதாக அறிவிக்கப்பட்ட வங்கிகள் காமன் ஈக்விட்டி டயர் 1 (CET1) மூலதனம் எனப்படும் கூடுதல் நிதியையும் பராமரிக்க வேண்டும். இதில், இழப்பு அல்லது ஆபத்தைத் தவிர்க்க இந்த மூலதனம் அவசியம். இந்த கூடுதல் மூலதனத்தின் அளவு ரிசர்வ் வங்கியின் பட்டியலில் உள்ள வங்கிக்கு ஏற்ப மாறுபடும்.
இந்தியாவைப் பொறுத்தவரை அரசாங்கத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் 96,508, நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1534, வெளிநாட்டு வங்கிகள் 46, மண்டல ரீதியாக மட்டும் செயல்படும் கிராமப்புற வங்கிகள் 43, தனியார் வங்கிகள் 21 மற்றும் பொதுத்துறை வங்கிகள் 12 என்ற அளவில் செயல்படுகின்றன.
இவற்றின் மொத்த சேமிப்பு மற்றும் சொத்து மதிப்பு 24,487,798,600 ரூபாய்கள் என்பதுதான் தற்போதைய நிலவரம்.வங்கிகளின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவது என்ற பெயரில் வங்கிகளில் வைக்கப்படும் காப்புத் தொகையை வைத்து அவை நம்பகமானது என்று முன்வைக்கப்படுகிறது.
ஏற்கனவே பங்குச் சந்தை ஊழலில் இந்திய ரிசர்வ் வங்கி உட்பட அனைத்து வங்கிகளிலும் மக்களின் சேமிப்புத் தொகையான காப்புத் தொகையை ஹர்ஷத் மேத்தா போன்றவர்கள் வாங்கி பயன்படுத்தி சூறையாடினார்கள் என்பதும், இதற்கு அனைத்து பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்தார்கள் என்பதும்தான் வரலாற்று ரீதியான அனுபவம்.
வங்கிகளை ஒன்றிணைப்பது என்ற பெயரில் வங்கி மூலதனத்தை ஒன்று குவிப்பதன் மூலம் ‘ஒருசில’ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக பாஜக தலைமையிலான மோடி அரசு செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகளும் அரசியல் பார்வையாளர்களும் குற்றம்சாட்டி வரும் நேரத்தில் -ரிசர்வ் வங்கியின் இந்த அறிக்கை பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
மூன்று வங்கிகள்தான் பாதுகாப்பானவை என்றால் மற்ற வங்கிகளில் கணக்கு வைத்து சேமித்து வரும் இந்திய மக்களின் பணம் - உழைப்பு - சம்பளத்துக்கு பாதுகாப்பு இல்லையா என்ற வினாவுக்கு ஒன்றிய அரசு மட்டுமே விடையளிக்க முடியும்.பதில் சொல்லும் என நம்புவோம்.
ஜான்சி
|