Must Watch



டைம் கட்

‘நெட்பிளிக்ஸி’ல் நேரடியாக வெளியாகியிருக்கும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் திரைப்படம், ‘டைம் கட்’. இந்த ஆங்கிலப்படம், தமிழ் டப்பிங்கிலும் காணக்கிடைக்கிறது. பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறாள் சம்மர். 2003ம் வருடம் பள்ளியில் நடந்த ஒரு கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொள்கிறாள். கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் சம்மரின் நெருங்கிய நண்பர்கள் சீரியல் கில்லரால் கொல்லப்பட்டனர். அந்தக் கொலைகாரன் பிடியில் சம்மரும் மாட்டிக்கொண்டு உயிரை விடுகிறாள்.

வருடங்கள் ஓடுகின்றன. யாராலும் சீரியல் கில்லரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இருபது வருடங்களுக்குப் பிறகு சம்மரின் தங்கை லூசிக்கு டைம் மெஷின் கிடைக்கிறது. சம்மர் கொலை செய்யப்பட்ட முந்தைய நாட்களுக்கு டைம் டிராவல் செல்கிறாள் லூசி.

சீரியல் கில்லரிடமிருந்து தனது அக்காவைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் லூசியின் திட்டம். டைம் டிராவல் மூலம் லூசி அக்காவைக் காப்பாற்றினாளா என்பதைத்
தெரிந்துகொள்ள படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.வழக்கமான சீரியல் கில்லர் கதைக்கு சயின்ஸ் ஃபிக்‌ஷன் புது வடிவத்தைக் கொடுக்கிறது. இப்படத்தின் இயக்குநர் ஹன்னா மேக்பர்ஸன்.

கொண்டல்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டுகளை அள்ளிய மலையாளப்படம், ‘கொண்டல்’. இப்போது ‘நெட்பிளிக்ஸி’ல் தமிழ் டப்பிங்கிலும் பார்க்க கிடைக்
கிறது. திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த இளைஞன், இம்மானுவேல். குடித்துக்கொண்டு, ஜாலியான, பொறுப்பற்ற ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறான். இருந்தாலும் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையுடன் இருக்கிறான். 

ஆனால், ஊருக்குள் அவனுக்கு பல பிரச்னைகள் ஏற்படுகிறது. அந்தப் பிரச்னைகள் காவல்துறை வரைக்கும் சென்றுவிடுவதால், ஊரைவிட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

தன்னுடைய பாதுகாப்பு மற்றும் வேலைக்காக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு துறைமுகத்துக்குச் செல்கிறான். அங்கேதான் இம்மானுவேலின் அண்ணன் டானி வேலை செய்து வந்தான்.
டானி இறந்து நாட்களாகிவிட்டன. இம்மானுவேல் புதிதாக வேலைக்கு வந்த இடத்திலும் பிரச்னைகள் வெடிக்க, சூடுபிடிக்கிறது திரைக்கதை.

கடற்கரையை ஒட்டிய கிராமத்தையும், அங்கே வாழ்கின்ற மனிதர்களின் வாழ்க்கையையும் நெருக்கமாகப் படமாக்கியிருக்கின்றனர். ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்கிறது. இம்மானுவேலாக அந்தோணி வர்கீஸ் அசத்தியிருக்கிறார். படத்தின் இயக்குநர் அஜித் மாம்பள்ளி.

காகஸ் 2

சில வருடங்களுக்கு முன்பு  ஓடிடி தளத்தில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டுகளை அள்ளியது, ‘காகஸ்’ எனும் இந்திப்படம். இதன் இரண்டாம் பாகமான ‘காகஸ் 2’ திரையரங்குகளில் வெளியானது. ஆனால், பெரிதாக வசூலை அள்ளவில்லை. படம் பார்த்தவர்கள் எல்லோரும் படத்தைப் பாராட்டிலும், வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவியது இந்தப் படம். ஆனால், சமீபத்தில் ‘ஹாட் ஸ்டாரி’ல் வெளியாகி அப்ளாஸை அள்ளி வருகிறது இந்த இந்திப்படம்.

புகழ்பெற்ற ஓர் அரசியல்வாதியின் கட்சியினர் அரசியல் பேரணி ஒன்றை நடத்துகின்றனர். இந்தப் பேரணி பொது மக்களின் அன்றாட வாழ்க்கையில் பல இடையூறுகளை உண்டாக்குகிறது.
குறிப்பாக இந்த பேரணி காரணமாக சூசிலின் மகள் இறந்துவிடுகிறாள். தனது மகளின் மரணத்துக்கு உண்டான நீதியை வேண்டி சூசில் களத்தில் இறங்குகிறார்.

மக்களுக்கு இடையூறு செய்யும் அரசியல் பேரணிகளைத் தடை செய்யும்படி வழக்குத் தொடுக்கிறார். சூசிலுக்கு உறுதுணையாக ஒரு வழக்கறிஞரும் களத்தில் இறங்குகிறார்.
அதிகாரத்தை எதிர்க்கும் சாதாரண மனிதனான சூசிலுக்கு நீதி கிடைத்ததா என்பதே மீதிக்கதை. இப்படத்தின் இயக்குநர் வி.கே.பிரகாஷ்.

ஸ்விகாட்டோ

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இந்திப்படம், ‘ஸ்விகாட்டோ’. இப்போது ‘அமேசான் ப்ரைமி’ல் காணக்கிடைக்கிறது.ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் படத்தின் கதை நிகழ்கிறது. ஒரு நிறுவனத்தில் மேனேஜராக வேலை செய்து வந்த மனாஸ், கொரோனா காலத்தில் வேலையை இழக்கிறான். அவனுக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும், நோயுற்ற அம்மாவும் இருக்கின்றனர்.

எந்த வேலையும் கிடைக்காமல் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்ய ஆரம்பிக்கிறான் மனாஸ். உணவு டெலிவரி ஆப், ரேட்டிங், இன்சென்டிவ் என அவனது வாழ்க்கை ஒரு சுழலுக்குள் சிக்கிக் கொள்கிறது. வீட்டுக்குப் போய் குடும்பத்துடன் நேரம் செலவழிக்கக்கூட எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. இவ்வளவு வேலை செய்தாலும் வருமானம் போதவில்லை. வருமானத்துக்காக கிடைத்த வேலைகள் எல்லாவற்றையும் செய்கிறாள் மனாஸின் மனைவி.

இவ்வளவு சிரமங்களுக்கு இடையில் அந்த தம்பதியினர் எப்படி வாழ்க்கையை  ஓட்டுகின்றனர் என்பதை அழகாகவும், அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறது திரைக்கதை. இந்தியாவில் சுமார் 70 லட்சம் பேர் உணவு டெலிவரி செய்யும் வேலைகளில் ஈடுபடுவதாக புள்ளி விவரம் சொல்கிறது. அவர்களின் வாழ்க்கையில் சிறு பகுதியை இப்படம் பதிவு செய்கிறது. இதன் இயக்குநர் நந்திதா தாஸ்.

தொகுப்பு:த.சக்திவேல்