81 வயது மாடல்!
‘நீங்கள் 80 வயதில் என்ன செய்வீர்கள்’ என்று கேட்டால், பலரும் பலவிதமான பதில்களைச் சொல்வார்கள். ‘வீட்டில் பேரன், பேத்திகளுடன் நிம்மதியாக இருப்பேன், பொழுதைப் போக்க தோட்ட வேலைகளைச் செய்வேன், கோயில்களுக்குச் செல்வேன்...’ என்று பல பதில்கள் கிடைக்கும். அவ்வளவு வயது வரைக்கும் உயிருடன் இருந்தாலே பெரும் பாக்கியம் என்று கூட சிலர் சொல்லலாம். ஆனால், சோய் சூன் ஹ்வாவின் பதிலே வேறு.
ஆம்; உலக அழகியாக மகுடம் சூட்டுவதுதான் சோயின் திட்டம். அதுவும் 81 வயதில். கடந்த உலக அழகிப்போட்டி வரைக்கும் 18 வயது முதல் 28 வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டுமே போட்டியில் கலந்துகொள்ள முடியும் என்பது விதி. சமீபத்தில் இந்த விதியை மாற்றியமைத்திருக்கிறது உலக அழகிப் போட்டியை நடத்தும் அமைப்பு. ஆம்; 18 வயது நிரம்பிய எந்தப் பெண்ணும் போட்டியில் பங்கு பெறலாம். உச்ச வயது வரம்பு இல்லை என்பதே அந்த புது விதி. இப்படியான விதியை அறிவித்த உடனே உலக அழகிப் போட்டிக்கு தயாராக ஆரம்பித்துவிட்டார் சோய்.
யார் இந்த சோய் சூன் ஹ்வா?
உலகில் முதன்முதலாக உலக அழகிப்போட்டி நடப்பதற்கு முன்பே தென் கொரியாவில் பிறந்தவர், சோய். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு மருத்துவமனையில் வேலை செய்து வந்தார்.
இளம் வயதிலிருந்தே மாடலிங் செய்ய விருப்பம். ஆனால், குடும்பப் பொருளாதாரம் காரணமாக மாடலிங் துறையில் கால் பதிக்கும் அளவுக்கு சோய்க்கு நேரமும் இல்லை; வசதியும் இல்லை. ஆனாலும் மருத்துவமனை வளாகத்தில் ஒரு மாடலைப் போல நடந்து பார்ப்பது சோயின் வழக்கம்.
காலங்கள் ஓடின. ஐம்பது வயதிலேயே வேலையை விட்டு ஓய்வு பெற்றுவிட்டார். இதற்கிடையில் திருமணம் நடந்து, குழந்தைகள் பிறந்து, குழந்தைகளும் பெரியவர்களாகி விட்டனர்.
சோய்க்கு வயதாகிவிட்டாலும், அவருக்குள் இருந்த மாடலுக்கு வயதே ஆகவில்லை. எழுபது வயதில் குடும்பத்தில் சில கடன் பிரச்னைகள் ஏற்பட்டன. அந்த வயதில் வேறு எந்த வேலைக்கும் போக முடியாது. கடனை அடைக்க மாடலிங் செய்ய ஆரம்பித்தார் சோய். அப்போது அவரது வயது 72. சோய் மாடலிங்கில் நுழையும்போது, தென் கொரியாவில் அவர் வயதில் ஒரு பெண் கூட மாடலிங்கில் ஈடுபடவில்லை.
தென் கொரியாவின் முன்னணி பத்திரிகைகளில் இருந்து, மதுபானங்கள் வரை பல நிறுவனங்களுக்கும் மாடலிங் செய்தார். புகழுடன் சேர்ந்து வருமானமும் கொட்டியது. சோயைப் பார்த்து வயதான பல தென் கொரியப் பெண்களும் மாடலிங்கில் ஈடுபட ஆரம்பித்தனர். சோயின் மாடலிங் தொழில் ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கும்போதுதான், உலக அழகிப் போட்டியை நடத்தும் அமைப்பு வயது தளர்வை அறிவித்தது.
18 வயதுக்கு மேற்பட்ட எந்த வயதினரும் உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பு, சோயிக்கு உற்சாகத்தைக் கொடுக்க, அதற்காகத் தயாரானார். தென் கொரியாவிலிருந்து ஒரு பெண்தான் உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ள முடியும். இதற்காக தகுதிச் சுற்று போல ஒரு போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் சோயும் கலந்துகொள்ள, உலக அளவில் பிரபலமானார். சோயுடன் போட்டியிட்ட மற்ற பெண்களுக்கு அவரது பேத்தியின் வயதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் அவர் தேர்வாகவில்லை. அதனால் உலக அழகிப் போட்டியில் தென் கொரியாவின் சார்பாக சோயினால் கலந்துகொள்ள முடியாது. அப்படி கலந்து கொண்டிருந்தால் உலக அழகிப்போட்டியில் பங்குபெற்ற அதிக வயதானவர் என்ற சாதனையைத் தன்வசமாக்கியிருப்பார் சோய். ஆனாலும் உலக அழகிப் போட்டியில் பங்குபெறுவதற்காகத் தேர்வான தென் கொரியாவின் இளம் பெண்ணைவிட, சோயிக்கு வாழ்த்துகளும், மாடலிங் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.
த.சக்திவேல்
|