537. 4 மில்லியன் ஓடிடி பயனாளர்கள்...



ஆனால், 100 மில்லியன் மக்கள் மட்டுமே பணம் கட்டுகிறார்கள்!

ஒரு காலத்தில் ஒரு சிறிய பெட்டி அறிமுகமாகி கொஞ்சம் கொஞ்சமாக குடும்பங்களை ஆக்கிரமித்தது. அப்போது நம் யாருக்கும் தெரியாது அந்தப் பெட்டி இல்லாத வீடுகளே எதிர்காலத்தில் இருக்காது என. அப்படித்தான் இப்போது அடுத்த வரவாக ஓடிடி தளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்களை ஆக்கிரமித்து வருகின்றன. 

இன்னும் சொல்லவேண்டுமானால் ஒருசில வீடுகளில் கேபிள் கனெக்‌ஷன் இல்லாமல் ஓடிடி தளங்களைக் கொண்டு படங்கள், நிகழ்ச்சிகள், சீரியல்கள் என அத்தனையும் பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு இன்று ஓடிடி தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அப்படி இந்த ஓடிடி தளத்தைப் பயன்படுத்தும் இந்திய மக்கள் குறித்த முழுமையான ஆய்வறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது ஆர்மேக்ஸ் மீடியா ஆய்வுக் குழு .

‘ஓடிடி ஆடியன்ஸ் ரிப்போர்ட் 2024’ ஆய்வறிக்கையின் கணக்கீட்டின்படி 2023ம் ஆண்டு ஓடிடியில் படங்கள் பார்க்கும் மக்களின் எண்ணிக்கை 13.8% அதிகரித்திருக்கிறது. முன்பில்லாத வகையிலான அதிக பயன்பாட்டாளர்கள் இந்த இரு வருடங்களில் அதிகரித்திருக்கிறார்கள். தற்சமயம் இந்திய ஓடிடி யுனிவர்சை 547.3 மில்லியன் பயன்பாட்டாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதாவது 54.73 கோடி. எனினும் 54.74 கோடி மக்கள் வீடியோக்களை பார்த்தாலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிவைச்
சந்தித்திருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

வருடம் தோறும் குறைந்தது 15% ஓடிடி பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இன்னொரு புறம் ஓடிடி சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை குறைந்தது 2% சரிவை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இது எப்படி சாத்தியம் என்பதற்கு பதில் சொல்கிறார் ஸ்ட்ரீமிங் மற்றும் டிவி பிராண்ட்ஸ் ஆய்வுக் குழுவின் தலைவரான கீரத் கிரீவல். ‘‘கொரோனா காலத்தில் ஓடிடி தளங்களில் படம் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி இன்று வருடம் தோறும் சுமார் 10% முதல் 13% வரை அதிகரித்துவருகிறது.

அதாவது ஓடிடி யூனிவர்சைப் பொருத்தவரை யூடியூப் மற்றும் டிவி சேனல்கள் சார்ந்த ஓடிடி செயலிகளும்தான் அடக்கம். ஆயினும் புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் இருக்கும் மக்கள் பெரும்பாலும் இலவசமாகக் கிடைக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் வீடியோக்களைப் பார்த்துப் பழகிவிட்டனர். இதனை AVOD (Advertising-Based Video on Demand) அதாவது விளம்பரங்கள், இடையூறுகள் இருப்பினும் வீடியோவைக் காணத் தயார் என்பார்கள்.

இதற்கு விதை போட்டவை சேனல்கள்தான். சேனல்களுடன் ஒப்பிடுகையில் ஓடிடி தளங்களில் விளம்பரங்களின் எண்ணிக்கை குறைவுதான். டிவி சேனல்களிலேயே சீரியல்களைப் பார்த்து வந்த மக்கள் தற்போது சேனல் சார்ந்த ஓடிடி தளங்களில் தங்களுக்குப் பிடித்தமான டிவி நிகழ்ச்சிகளையும் மற்றும் சீரியல்களையும் தங்களுக்கு விருப்பமான நேரங்களில் பார்க்கத் துவங்கி விட்டனர்.

இதன் பொருட்டு ஓடிடி பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் நேரத்தின் அளவு அதிகரித்து இருக்கிறது. ஆனால், சப்ஸ்க்ரைபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது.

குறிப்பாக ஒரு ஓடிடி தளத்தை இருவர் துவங்கி நால்வர் வரையிலும் பகிர்ந்து பார்க்கும் வழக்கம் அதிகரித்திருக்கிறது. ஒரு செயலியில் குறைந்தபட்சம் 4 எலக்ட்ரானிக் கருவிகள் தற்போது இணைக்கப்படுகின்றன. 

எனில் ஒரு கருவிக்கு ஒரு குடும்பம் எனக் கொண்டாலும் ஒரே சப்ஸ்கிரிப்ஷனில் நான்கு குடும்பங்கள் வீதம் குறைந்தபட்சம் 15 நபர்கள் அந்தத் தளத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதில் அதிகமாக வீட்டில் இருக்கும் பெண்களும் வயதானவர்களும் மற்றும் குழந்தைகளும் சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகள் மற்றும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை பெரும்பாலும் கேபிள் டிவியைக் கடந்து ஓடிடியில் கண்டு மகிழ்கிறார்கள்.

இந்த ஸ்ட்ரீமிங் தளங்களில் அதிக பார்வையாளர்களை யூ டியூப் தளம் கொண்டிருக்கிறது. தொடர்ந்து டிவி சேனல்கள் அடிப்படையிலான ஓடிடி தளங்கள் அதிக பார்வையாளர்களைக் கொண்டிருக்கின்றன. ஏனைய அமேசான் மற்றும் Netflix போன்ற படங்கள் மற்றும் சீரிஸ்களை மட்டுமே ஒளிபரப்பும் ஓடிடி செயலிகளின் சப்ஸ்க்ரைபர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது அல்லது கூட்டு சப்ஸ்கிரைபர்கள் அடிப்படையில் இயங்குகிறது.

இதில் கடந்தாண்டு மிகப்பெரிய சரிவைச் சந்தித்தது Netflix. எனவேதான் மாதத்திற்கு ரூ.799 என்றிருந்த கட்டணம் கடந்த வருடத்தில் ரூ.150  வரை குறைக்கப்பட்டு கொடுக்கப்பட்டு வருகின்றது. அதேசமயம் பார்க்கும் நேரம் உயர்ந்து கொண்டே செல்கிறது. 

எல்லா செயலிகளிலும் இருக்கும் இலவசமான நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும் மட்டும்தான் பார்வையாளர்கள் அதிகம் கண்டு மகிழ்கிறார்கள்...’’ என்ற கீரத், இந்தியாவில் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை கடந்த இரண்டு வருடங்களில் எந்தெந்த மாற்றங்களை அடைந்திருக்கிறது என்றும் விளக்கினார்.

‘‘இந்தியாவில் 99.6 மில்லியன் கட்டணம் கொடுத்து பார்க்கும் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். ஆனால், 2023ல் இந்த சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 2.8% அதிகரித்த நிலையில் 2024ம் ஆண்டு 2.5% என குறைந்திருக்கிறது. 

இதில் இன்னொரு காரணத்தையும் சேர்க்கலாம். கொரோனா காலத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரும் இந்தியாவிற்குத் திரும்பிய பட்சத்தில் ஓடிடி பார்ப்போரின் எண்ணிக்கை அதிகரித்து அசாதாரண சூழல் மாறிய பின் மீண்டும் வெளிநாடு வேலைக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கையும் குறைந்திருக்கலாம்.

காரணம், எந்தெந்த நாட்டில் இருந்து ஒரு கட்டண சேவையை பயன்படுத்துகிறோமோ அது அந்தந்த நாட்டிற்கான வருவாயாகத்தான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அப்படியானால் வெளிநாட்டில் ஒருவர் ஒரு ஓடிடி தளத்திற்கு சப்ஸ்கிரைப் செய்துவிட்டு அவருடைய சப்ஸ்கிரிப்ஷனை இங்கே இருக்கும் அவரது குடும்பம் பயன்படுத்தினாலும் கூட கட்டணம் இல்லாமல் இந்தியாவில் அதே செயலியைப் பயன்படுத்துவதாகத்தான் புள்ளி விபரங்கள் காட்டும்...’’ என்னும் கீரத், எந்த எலக்ட்ரானிக் கருவியை இந்திய மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதையும் இந்த ஓடிடி ஆய்வு அறிக்கை அடிப்படையில் விளக்குகிறார். 

‘‘தற்சமயம் டிவி, ஸ்மார்ட் போன், கணினி, டேப், மற்றும் லேப்டாப் உள்ளிட்ட கருவிகளில் மக்கள் ஓடிடி செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றில் 97% மக்கள் ஸ்மார்ட் போனைத்தான் வீடியோக்கள் பார்ப்பதற்கு பயன்படுத்துகிறார்கள்.

அதில் 81% மக்கள் ஸ்மார்ட் போனை மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்கள் ஸ்மார்ட் போன், கணினி மற்றும் டிவி என மாறி மாறி வீடியோக்கள் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலை தொடர்ந்தால் கேபிள் டிவியின் வளர்ச்சியும் ஒரு பக்கம் சரிவைச் சந்திக்கும்; மேலும் ஓடிடி சப்ஸ்கிரிப்ஷன் வளர்ச்சியும் குறையும் என்பது மட்டும் உறுதி. ஏனெனில் உலகம் முழுக்கவே மக்கள் இலவச சேவைகளையே சுலபமாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

உதாரணத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மட்டும்தான் ஒரு சேவையைப் பெற முடியும். ஆனால், அதே தளத்தில் இலவசமான வீடியோக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இருக்கும் பட்சத்தில் பணம் கட்டி பார்க்கும் வீடியோக்களைத் தவிர்த்து விட்டு தொடர்ந்து இலவசமாக இருக்கும் சேவைகளை மட்டும் பயன்படுத்தத் தொடங்கி விடுவார்கள். அதைக் காட்டிலும் இணைய வசதியும் மின்சார வசதியும் கூட செல்லாத பல பகுதிகள் இந்தியாவில் இன்னமும் இருக்கின்றன.

இந்தச் சூழலிலேயே 141 கோடி மக்கள் தொகையில் 54 கோடி மக்கள் ஓடிடி பார்வையாளர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த இலவச சேவைகளுக்கு இன்னமும் தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்ளாத மக்கள் மத்தியில் இந்த சேவை பரவுவதற்கு முன்பு ஸ்ட்ரீமிங் செயலிகளும் சேனல்களும் தாமாக முன்வந்து AVOD முறையை குறைத்து SVOD (Subscription Video on Demand) என்னும் சப்ஸ்கிரிப்ஷன் அடிப்படையிலான பார்வையாளர்களை அதிகரிக்க ஆவன செய்திட வேண்டும். இல்லையேல் இணையம் மட்டுமே ஒரு பக்கம் வளர்ச்சி அடையுமே தவிர அதைச் சார்ந்த தொழில்கள் அனைத்தும் சரிவைத்தான் சந்திக்கும்...’’ அழுத்தமாகச் சொல்கிறார் கீரத் கிரீவல்.

ஷாலினி நியூட்டன்