சிறுகதை - மாரியப்பன் பொண்டாட்டி



‘‘அம்மா உனக்கு என்ன கிறுக்கு புடிச்சுபோச்சா?  

என்ன பொண்ணு பார்த்து வச்சிருக்கிற நீயி?  அதைப் போய் கட்டிக்கோணுமாக்கும் நானு?  உன்ற  மனசாட்சியை தொட்டு சொல்லு நீயி...” தன் தாய் தேனம்மா, தனக்கென்று பார்த்து வைத்திருந்த பெண்ணைப் போய் காடம்பாறையில் பார்த்துவிட்டுத்  திரும்பியிருந்த மாரியப்பன் காட்டுக்  கத்தலாய் கத்தினான்.  “ஐயா, மாரி, என்ற சாமி... அந்தம்மணி பாக்குறதுக்கு கொஞ்சம் அப்படி இப்படி சுமாராத்தாங்கண்ணு இருக்குது.

நானும் ஒத்துக்கிறேன். ஆனா, குணத்துல  சொக்கத்தங்கம். வீட்டுல அத்தாசோடு வேலையும் ஒண்டியாளா செய்யுதாம். பாவம், தாயில்லாத புள்ள கண்ணு. மிருகங்க பாஷையுங்கூடத் தெரியுமாங்கண்ணு. அவங்க அப்பாரு காடம்பாறை காட்டுள்ளாற கவுருமெண்டு பவரு அவுஸுல கொளத்தி வேலை செய்யுறாரு...” என்று சொல்லி சற்று நிறுத்திவிட்டு மகனின் முகபாவத்தை கவனித்தாள்.

போன வருடம்தான் காடம்பாறையில் தமிழ்நாட்டின் முதல் ‘பம்ப்ட் ஸ்டோரேஜ் ஹைட்ரோ எலக்ட்ரிக் ஸ்டேஷன்’ அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியிருந்தன.  
பத்து வருடங்களுக்குள் கட்டி முடித்து 1986ம் வருடத்திற்குள் அந்த பவர் ஸ்டேஷன் தனது மின்னுற்பத்தியைத் தொடங்குமென்று திட்டமிடப்பட்டிருந்ததை மாரியப்பனும் அறிந்திருந்தான். அவன் யோசித்ததை சாதகமாக எண்ணித் தொடர்ந்தாள் தேனம்மா.

“மிருகங்க மத்தியிலும் அட்டைப்பூச்சிக் கடியிலும், வாயை வவுத்த கட்டி, பாடா பட்டு, இருக்குற ஒத்தப் பொட்டப் பிள்ளைய நல்ல இடத்துல கட்டித் தாரோனுமுன்னு துடிக்கிறாரு அந்த மனுசன். அஞ்சு பவுனு போட்டு பத்தாயிரம் ரொக்கமும் தாரேன்னு சொன்னாரு. அதாங்கண்ணு உன்றகிட்ட கேட்காமயும் கூடி அவிககிட்ட சரின்னு சொல்லிப் போட்டேன். நாஞ்செஞ்சது  தப்புதான்ங்கண்ணு. மன்னிச்சிரு...” கடைசி வரிகளை உதிர்க்கையில் அவளது குரல் குற்ற உணர்ச்சியில் கம்மிப் போனது.

பணத்தாசையால் அப்படி சொல்பவளல்ல தேனம்மா. தன் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிறவளிடம் இருந்து குண்டுமணித் தங்கமோ ரொக்கமோ வாங்க மாட்டேன் என்று இருந்தவள் அவள்.  ஆனால், இரண்டு மாதங்களாக இதய நோயினால் அவதிப்பட்டு வந்தாள். விரைவாக அறுவை சிகிச்சை  செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க முடியும் என்றும் அதற்குப் பதினைந்தாயிரம்  செலவாகும் என்றும் பொள்ளாச்சி தனியார் மருத்துவமனையில் சொல்லியிருந்தார்கள்.  

தானும் போய்விட்டால், பிள்ளை அனாதையாகி விடுவானே என்ற எண்ணத்தில் மட்டுமே அவள் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டாள். தொகை கிடைக்கிறதே என்பதற்காகத்தான் இந்த கல்யாணத்தையும் பேசி இருந்தாள்.பேரழகன் இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு லட்சணமாக ஐந்தரையடி உயரத்தில் களையான முகத்தோடு மாநிறத்தில் இருப்பான் மாரியப்பன். பிள்ளைக்குச் சற்றும் பொருத்தமில்லாமல் அழகற்ற ஒரு பெண்ணை பார்த்து வைத்திருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி அவளைத் தின்றது.

தேனம்மா இளம் விதவையாக அந்தப் பூனாச்சி மலைக்காட்டில் சுள்ளி பொறுக்கியும், விறகு வெட்டியும், தேனீக்கள் வளர்த்தும் படாத பாடுபட்டு மாரியப்பனை வளர்த்திருந்தாள்.  

பத்தாம் வகுப்பு வரை படித்திருந்த அவன் போன வருடம்தான் வால்பாறை பகுதி காட்டிலாக்காவில் ரேஞ்சர் ரஞ்சித்தின் உதவியாளனாக ‘ஃபாரஸ்ட் வாட்சர்’ வேலையில் சேர்ந்திருந்தான்.

ரஞ்சித் மிகவும் நேர்மையான அதிகாரி. மாரியப்பன் தன் குணத்தாலும் வேலையில் காட்டிய அக்கறையாலும் அவரது நம்பிக்கைக்கு பாத்திரமானான்.

இந்தவருடம் அவனை கான்ட்ராக்டிலிருந்து நேரடி இலாக்காவில் பணியமர்த்தப் பரிந்துரைப்பதாக ரஞ்சித் சொல்லியிருந்ததால்தான் அவன் கல்யாணத்திற்கே ஒப்புக்கொண்டான்.

மனதில் அழகான பெண்கள் உலா வந்து கொண்டிருக்கையில் தாய் இப்படியொரு சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தாள்.தன் மன ஆசைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டுத் தாயின் உயிர்காக்க அந்தப் பெண்ணுக்குப் பரிசம் போட்டு, அதில் வந்த பத்தாயிரம் ரூபாய், ரேஞ்சர் ரஞ்சித் தந்த உதவித்தொகை மற்றும் அலுவலகத்திலிருந்து எடுத்த ஒரு சொற்ப கடன் தொகை ஆகியவற்றை வைத்து அம்மாவின் இருதய அறுவை சிகிச்சையை நடத்தி விட்டான். அவளுக்கும் உடம்பு ஓரளவு தேறிய மூன்றாம் மாதம் அவனுக்கும் காடம்பாறைப் பெண்ணுக்கும் எளிமையாகத் திருமணம் நடந்தேறியது.

முதலிரவுக்கென்று அந்தச் சிறிய வீட்டின் ஒற்றை அறையில் புது ஜமக்காளம், தலையணைகள், பூக்கள் மற்றும் பத்திகள் கொண்டு தன்னால் இயன்றவரையில் அலங்கரித்திருந்தாள் தேனம்மா.
கேலி செய்த நண்பர்களைப் போலியாகப் புன்னகைத்து வழியனுப்பினான் மாரி. அப்போது அவர்களில் ஒருவன் வீட்டுக்குள் நின்றிருந்த மணமகளைப் பார்த்துவிட்டு மாரியிடம் “தங்கச்சிப் பேரென்னடா?” என்று கேட்டபோதுதான் தனக்கே அது தெரியாது என்று உரைத்தது அவனுக்கு.அந்தப் பெண் சட்டென்று நிலைமையை உணர்ந்தவளாக ‘‘அண்ணா, என் பேரு எதாவேணா இருந்துட்டுப் போகட்டுங்க. இப்ப நானு உங்களைப் பொறுத்த மட்டுக்கும் மாரியப்பன் பொண்டாட்டி தானங்கோ...’’ என்று புன்னகையோடு சொன்னாள்.

அந்த நண்பன் ‘‘சரியாச்சொன்ன அம்மணி. நீ நல்ல விவரமாத்தானிருக்கிற. எங்க மாரி குடுத்து வச்சவன்தான்...’’ என்றதும் மற்றவர்களும் அவனுடன் சேர்ந்து சிரித்தபடி சென்றனர். ஆனால், அவளை எரித்து விடுவது போலப் பார்த்து அடிக்குரலில் ‘‘இனியொருக்க அந்த மாதிரி சொன்னயின்னா பல்லைத் தட்டிடுவேன்...’’ என்று உறுமிவிட்டுச் சென்றான் மாரி. 

“நானென்னங்க மாமா தவறா சொல்லிப் போட்டேன்?” புரியாமல் கேட்டவளை மதிக்காமல் தாண்டிச் சென்றான் அவன். அன்றிரவு தொடங்கி அடுத்து வந்த பத்து நாட்களிலும் அவளுடன் பாராமுகமாகவேயிருந்தான்.

அன்று விடியற்காலையிலேயே உறவு முறையில் ஒரு பெரிய காரியம் ஆகிவிட்டதால் அக்காமலைக்குப் போயிருந்தாள் தேனம்மா. வாசலில் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொண்டு ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தான் மாரி. அப்போது, ரேஞ்சரின் ஜீப் சரக்கென வந்து அருகில் நின்றது.  ஏதோ அவசரம் என்பது புரிந்தது அவனுக்கு. ஜீப்பிலிருந்து இறங்கிய ரஞ்சித், ‘‘மாரி உடனே கிளம்பு. நான் வீட்டுக்குப் போனப்ப யாரோ ஒரு பழங்குடி ஆளு காத்திருந்தான். 

உருளிக்கல் பக்கம் காட்டுக்குள்ள ஆள் நடமாட்டமும் மரம் அறுக்கிற சத்தமும் கேட்டுச்சாம். வா, நாம உடனே அங்க போகணும். நான் ஏற்கனவே சூப்பரின்டெண்டுக்கு கேபிள் அனுப்பிட்டு வந்துட்டேன். அவங்களும் முழு ஸ்க்வாடோட அங்க வந்துடுவாங்க. வா... வா... சீக்கிரம். பலநாளா இந்த வாய்ப்புக்குத்தான காத்திருந்தோம்...’’ என்று அவசரமாகப் பேசினார்.

முதலில் சுறுசுறுப்பாக கேட்ட மாரி இறுதியில் பரபரப்பின்றி நின்றதை கவனித்து ‘‘ஏய், மாரி என்ன யோசனை. கமான் மேன். சொல்லு என்ன ப்ராப்ளம்?’’ என்றார் ரஞ்சித்.

‘‘சார்... அதுவந்து எங்கம்மா ஊருக்குப் போயிருக்காங்க. அதுவேற வீட்ல இருக்குது. ராத்திரில அதை இந்தக் காட்டுக்குள்ள தனியா எப்படின்னு...’’ என்று இழுத்தான் மாரி.
‘‘ஓ, பரவால்ல மாரி, உன் சம்சாரத்தையும் கூட்டிக்கோ. அது வண்டியிலேயே தூரத்துல இருக்கட்டும். நாம மட்டும் போய் நோட்டம் பார்த்துக்கலாம்...’’ என்றார்.
உடனே அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டனர்.

முதல் முதலில் கணவனோடு ஜீப்பில் வெளியே போகிற சந்தோஷம் அவளுக்கு.உருளிக்கல் மலை கிராமம் வரை மலைச்சாலை அமைந்திருந்தது. ஆனால், அங்கிருந்து அடர்ந்த வனத்துக்குள் சென்ற மண்பாதை குண்டும் குழியுமாக மோசமாக இருந்தது. ரஞ்சித்துக்குப் பக்கத்து இருக்கையில் அவரது முக்கியமான கோப்புகள் வைக்கப்பட்டிருந்ததால், மாரியும் அவளும் பின் இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்தனர். 

வண்டி குலுங்கிய போதெல்லாம் அவர்கள் இருவரின் தோள்களும் இடித்துக் கொண்டன. அப்போதெல்லாம் அவளது முகம் வெட்கத்தால் சிவந்தது. அதைப் பார்க்க மாரிக்கு எரிச்சலாக இருந்தது.தூரத்தில் மரம் வெட்டும் சத்தம் கேட்டதும் வண்டியை அப்படியே நிறுத்தி அணைத்தார் ரஞ்சித்.

உதட்டின் மேல் விரலை வைத்து சத்தமிடாமல் இருக்கும் படி சமிக்ஞை செய்தபடி  மாரியைத் தன்னோடு அழைத்துக் கொண்டு சத்தம் வந்த பகுதிக்குச் சென்றார். அவர்களிருவரும் சென்று இருபது நிமிடங்கள் வரை வண்டிக்குள் அமைதியாக அமர்ந்திருந்தவள் ஏதோ நடக்கக்கூடாதது நடந்து விட்டது என்ற உள்ளுணர்வு உந்த அவர்கள் சென்ற இடம் நோக்கிச் சென்றாள்.  அந்த இடத்தில் நான்கைந்து தீப்பந்தங்கள் கொளுத்தி வைக்கப்பட்டிருந்தன. இரண்டு பெரிய சந்தன மரங்களின் தண்டுப் பகுதிகளில் ரஞ்சித்தும், மாரியும் கட்டப்பட்டிருந்தனர்.      

கைகளில் மரம் வெட்டும் கோடரி, மரம் அறுப்பதற்கான ரம்பம் ஆகியவற்றை வைத்திருந்த நான்கு பேரும், அவர்களுக்கு தலைவர்கள் போல தோற்றமளித்த இருவரும் அங்கிருந்தனர். அவர்களில் ஒருவன் கையில் ஒரு கத்தி பளபளத்து.நிலைமையின் அபாயம் புரிய, அங்கிருந்த பெரிய மரத்தின் பின் மறைந்துகொண்டு தனது வாயைத் திறக்காமலேயே ஒருவித விநோத ஒலியை எழுப்பினாள் அவள். 

அந்தச் சத்தம் அங்கிருந்த ஆட்கள் ஒருவனுக்குப் புரிந்து விட ‘‘சாரே... இவ்விட ஆனைங்க பாஷை தெரிஞ்ச யாரோ இரிக்குன்னு. ஆயாளு அதுங்களுக்கு அபாயமுன்னு சமிக்ஞை செஞ்சு. ஆனைக்கூட்டம் இவ்விட வருனெங்கில் துவம்சமாக்கிடும் சாரே. வல்லிய டேஞ்ஜரானு. பூவாம் சாரே...’’ என்றான்.

தலைவன் போலிருந்தவன் ‘‘அட போடா. இருட்டில ஏதோ மிருகம் கத்துது. பயப்படாத. இவனுங்கள முடிக்காம போகக்கூடாது. பாடுபட்டு சேகரிச்ச மரத்துண்டுங்களையும் கொண்டு போகணும்...’’ என்றான். அப்போது மறுபடியும் அதே போல் ஒரு ஒலி வந்தது. 

முதலில் எச்சரித்த கூலியாள் கையிலிருந்த கோடரியை எறிந்துவிட்டு ‘‘ஞான் போகுன்னு...’’ என்று சொல்லி ஓட்டமெடுத்தான்.ஆனால், அவன் சென்ற பக்கத்திலிருந்து நீண்ட தந்தங்கள் பட்டாக்கத்திகளென பளபளக்க ஒரு ஆண்யானை வந்தது. ‘‘ஐயோ எண்டே ஈஸ்வரா, கொம்பன்...’’ என்று கதறிக்கொண்டு திரும்ப ஓடிவந்தான்.

அந்த ஆண் யானையைத் தொடர்ந்து மூன்று பெண் யானைகள், ஒரு குட்டி யானை கொண்ட சிறு யானைக்கூட்டம் அங்கு வந்து விட்டது. அவர்கள் மிரண்டு ஓட, யானைகள் அவர்களைத் துரத்திச் சென்றன.மரத்தில் கட்டப் பட்டிருந்த மாரியும், ரஞ்சித்தும் உயிரைக் கையில் பிடித்தபடியே, மறைவிலிருந்து அங்கு வந்தவளை வியப்போடு பார்த்தனர்.

அவர்களின் கட்டை அவள் அவிழ்க்கையில் வனத்துறை வண்டி சத்தமும் கேட்டது. ரஞ்சித், ‘‘மாரி உன் மனைவி பெரிய திறமைசாலிப்பா. நம்ம உயிரைக் காத்த தேவதை. நீ ரொம்பக் குடுத்து வச்சவன். ஸ்குவாட் வந்துடுச்சு. நான் போய் அவனுங்கள பிடிக்கப் பார்க்குறேன். நீ இவளை பத்திரமா கூட்டிட்டு வா...’’ என்று அவன் முதுகைத் தட்டிவிட்டு வண்டி நின்ற இடத்துக்குப் போனார்.

மாரி ஏதும் பேசாமல் முன்னால் இரண்டடி வைத்துத் தடுக்கி விழவிருந்தவளை இடுப்பில் கைகொடுத்துத் தூக்கினான். நாணிச் சிவந்திருந்த அவள் கன்னத்தில் முத்தமிட்டபடி காதருகில் ‘‘ஏய், உன் பேர் கண்மணிதானடி?’’ என்று நினைவு வந்து கேட்க, ‘இல்லை...’ என்று தலையாட்டி ‘‘மாரியப்பன் பொண்டாட்டி...’’ என்று சொல்லிவிட்டு வெட்கமுடன் முகத்தைக் கைகளால் மூடிக்கொண்டவள், இப்போது அவன் கண்களுக்கு அழகு தேவதையாகத் தெரிந்தாள்.

 - இராஜலட்சுமி