சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் இந்தியர்கள் ஏன் நுழைகிறார்கள்..?



அமெரிக்காவுக்குள் அதிக அளவிலான இந்தியர்கள் சட்டவிரோதமாக நுழைகின்றனர் என சமீபத்தில் வெளியான செய்தி பலரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

இந்தத் தகவலை அமெரிக்காவின் சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறையே அளித்துள்ளதுதான் ஹைலைட்! 
இதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் 90 ஆயிரத்து 415 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்து பிடிபட்டுள்ளதாகச் சொல்கிறது. அதாவது ஒரு மணிநேரத்திற்கு பத்து பேர் என்ற கணக்கில் சட்டவிரோதமாக நுழைய முயன்று பிடிபடுவதாகத் தெரிகிறது.

இதில் கூடுதல் தகவல், இந்த எண்ணிக்கையில் பாதிப் பேர் குஜராத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுதான். முன்பெல்லாம் மெக்ஸிகோ வழியாக சட்டவிரோதமாக நுழைந்தவர்கள், சமீபகாலமாக அதிகளவில் கனடா வழியாக நுழைவதாகச் சுட்டிக்காட்டியுள்ளது அமெரிக்க பாதுகாப்புத் துறை.  அதுமட்டுமல்ல. 
இப்படி அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழையும் நாட்டவர்களில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது எனக் குறிப்பிடுகிறது அமெரிக்காவைச் சேர்ந்த பியூ ஆய்வு மையம். முதலிரண்டு இடங்களில் அமெரிக்கா அருகேயுள்ள மெக்ஸிகோ மற்றும் எல் சால்வடார் நாடுகள் உள்ளன. இந்நிலையில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை ஒரு தனி விமானத்தில் திரும்ப அனுப்பியும் வைத்துள்ளது அமெரிக்கா.

சரி, ஏன் இந்தியர்கள் இப்படி அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்?

பொதுவாக அமெரிக்காவிற்கு விசா மூலம் கல்வி, ஐடி பணி, வணிகம் உள்ளிட்ட விஷயங்களுக்காகச் செல்வதையே நாம் பார்த்துள்ளோம். இப்படி சட்டவிரோதமாக அதிகளவு குடியேற முயல்வதை சில ஆண்டுகளாகவே கேள்விப்படுகிறோம். இதற்குக் காரணம் அமெரிக்கா சென்று வாழும் கனவுதான். 

இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகெங்கும் வாழும் அனைத்து மக்களுக்குமே இந்த எண்ணம் இருக்கிறது. அங்குள்ள வாழ்க்கைமுறை, வேலைவாய்ப்புகள், கைநிறைய சம்பளம் உள்ளிட்டவையே அவர்களை அமெரிக்கா நோக்கி ஈர்க்கும் விஷயங்களாக உள்ளன.  

ஆனால், இந்தியாவில் வேலையின்மை, போதுமான வருமானம் இல்லாதது, கிராமப்புறப் பொருளாதார அழுத்தம் என எல்லாமுமாக இந்தியர்களை வெளிநாடு செல்லத் தூண்டுகிறது.
அப்போது அவர்களின் முதல் சாய்ஸாக அமெரிக்கா இருக்கிறது.  இதற்காக அவர்கள் தேர்ந்தெடுக்கும் வழி, ‘டாங்கி ரூட்’. அதாவது சட்டவிரோதமாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற நினைப்பவர்களின் வழி, ‘டாங்கி ரூட்’ (தமிழில், கழுதைப் பாதை) என அழைக்கப்படுகிறது.

விசா கிடைக்காத இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய இந்த டாங்கி ரூட்டை தேர்ந்தெடுக்கின்றனர். இதற்கு முகாந்திரமாக இருப்பது மெக்ஸிகோ. உலக வரைபடத்தில் அமெரிக்காவின் கீழிருக்கும் நாடு. 

இருந்தும் அவர்கள் நேரடியாக மெக்ஸிகோ செல்வதில்லை.அதற்கும் கீழிருக்கும் பனாமா, குவாத்தமாலா, கோஸ்டா ரிக்கா, எல் சால்டவார் உள்ளிட்ட நாடுகளுக்கு முதலில் செல்கின்றனர். ஏனெனில், இங்கெல்லாம் விசா வாங்குவது எளிது எனச் சொல்லப்படுகிறது. இதுதவிர, பலர் பிரேசில் வழியாக வந்து அங்கே அகதிகளாக இருந்தபடி அமெரிக்காவிற்குள் நுழைவது தனிக்கதை.

மேற்சொன்ன நாடுகளிலிருந்தபடியே மெக்ஸிகோவில் இதற்காக இருக்கும் ஏஜென்ட்களை நாடுகின்றனர். இந்த ஏஜென்ட்கள் எல்லையிலிருக்கும் மாஃபியா கும்பலுக்கு பணத்தைக் கொடுத்து இவர்களை அமெரிக்காவிற்குள் அனுப்பிவிடுகின்றனர்.இந்த ஏஜென்ட்களுக்கு இந்தியர்கள் தங்கள் நிலங்களை விற்றும், கடன் வாங்கியும் பணம் கொடுக்கின்றனர். இதற்காக சுமார் 40 லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் ரூபாய் வரை பணத்தைச் செலவழிக்கின்றனர்.

ஆனாலும், இந்தப் பயணம் அவ்வளவு சுலபமானதாக இருப்பதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு மேல் எடுக்கக்கூடியது. மேலும் அதிக ஆபத்து கொண்டது. சிலர் பணத்தை வாங்கிக் கொண்டு வேறு நாட்டிற்கு அனுப்பிய கதைகளும் இருக்கின்றன.இந்த வர்த்தகத்தில் ஆயிரக்கணக்கான கடத்தல்காரர்கள் ஈடுபடுகின்றனர். குறிப்பாக இந்தியாவின் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கடத்தலில் ஈடுபடுவதாக பிரிட்டனைச் சேர்ந்த ஸ்கை நியூஸ் சேனல் எடுத்த புலனாய்வுச் செய்தியில் தெரியவந்துள்ளது.

இந்தப் பயணத்தின் போது இந்தியர்கள் பிடிபடுவதும், சித்திரவதை செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும் நடக்கிறது. பல நேரங்களில் இறக்கும் வாய்ப்புகளும் அதிகம். அதாவது உயிரைப் பணயம் வைத்துதான் அமெரிக்காவிற்குள் நுழைய இந்தியர்கள் முயல்கின்றனர்.

இதில் பெண்கள் படும்பாடுதான் சொல்லிமாளாது. அவர்கள் கடத்தல்காரர்களால் அமெரிக்க எல்லையில் தாக்கப்படுவதும், பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதும், பாலியல் தொழிலுக்குள் தள்ளப்படுவதும் நடப்பது வாடிக்கை என்கிறது நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை.

மாஃபியாக்களின் கைகளில் எல்லைகள் இருப்பதால் அவர்கள் வைத்ததுதான் சட்டமாக உள்ளது. இதற்கு 30 வயதான மல்கீத் சிங் நுழைவு ஒரு உதாரணம் என்கிறது ஸ்கை நியூஸ். அமெரிக்காவிற்குச் செல்ல வீட்டுச் சொத்துகளை எல்லாம் விற்று கடத்தல்காரர்களுக்குப் பணம் கொடுத்துள்ளார் அவர். பின்னர் தோகா, இஸ்தான்புல், பனாமா சிட்டி வழியாக எல் சால்வடார் வந்தடைந்தார். 

அதன்பிறகு அவர் என்ன ஆனார் என்பது யாருக்கும் தெரியாது. மூன்று வாரங்களுக்குப் பிறகு அவரின் உடலை அவர் குடும்பத்தினர் சமூகவலைதளம் வழியாக அடையாளம் கண்டு கதறினர். இதேபோல் 45 வயதான சிவ்குமார், தன்னுடைய 19 வயது மகனை இப்போது வரை தேடிக் கொண்டுள்ளார்.  

அவரின் மகன் ஷகில், அமெரிக்கா செல்ல கடத்தல்காரர்களிடம் பணம் கொடுத்திருந்தார். கடைசியாக அவர் லிபியாவில் இருந்து கிளம்ப இருந்தார். இதுவும் ஓராண்டுக்கு முன்பான செய்தி. ஆனால், இப்போதுவரை அவர் பற்றி தகவல் இல்லை.  இந்நிலையில்தான் மெக்ஸிகோ எல்லையை விடுத்து தற்போது கனடா எல்லை வழியாக நுழையும் போக்கு அதிகரித்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

கனடா-அமெரிக்கா எல்லையில் இந்த ஆண்டு 43 ஆயிரத்து 764 இந்தியர்கள் பிடிபட்டுள்ளனர். மெக்ஸிகோ எல்லையில் 25 ஆயிரத்து 616 பேர்களே பிடிபட்டனர். கடந்த ஆண்டு இதே மெக்ஸிகோ எல்லையில் இந்த எண்ணிக்கை 41 ஆயிரமாக இருந்தது.அப்படியாக இப்போது கனடா வழியாக அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தன்னுடைய கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளது.

தற்போது அமெரிக்காவில் ஏழரை லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக வசிப்பதாக பியூ ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இப்படி சட்டவிரோத நுழைவில் இந்தியா மட்டுமல்ல, நேபாளம், வியட்நாம், சீனா, கனடா, தென் அமெரிக்க நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் எனப் பல நாட்டினரும் அமெரிக்காவிற்குள் நுழைந்து வருகின்றனர்.

இந்த ஆண்டு மொத்தமாக 29 லட்சம் பேர் கனடா-மெக்ஸிகோ எல்லையில் பிடிபட்டுள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். அமெரிக்கக் கனவு இருக்கவேண்டியதுதான். அதற்காக உயிரைப் பணயம் வைத்து போவது தேவையா என்பதை இந்தியர்கள் சிந்திக்க வேண்டும்.

பேராச்சி கண்ணன்