6வது படித்தவர் நடத்தும் புத்தக உணவகம்!
நாசிக் நகரின் ஒசார் எனும் ஊருக்குச் சென்று ‘புத்தக உணவகம்’ எங்கிருக்கிறது என்று கேட்டால், எல்லோருமே வழியைக் காட்டுவார்கள். அந்தளவுக்கு ஊர் முழுவதும் பிரபலமான உணவகம் அது. ‘அச்சய புஸ்தககாஞ்சா ஹோட்டல்’ என்பது அந்த உணவகத்தின் பெயர். இந்த உணவகத்தில் உணவுக்காக காத்திருக்கும் நேரத்தில் அங்கிருக்கும் புத்தகங்களை இலவசமாக எடுத்துப் படிக்கலாம். இப்படி படிப்பதற்காகவே மராத்தி, ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளில், 5 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. இது நூலகமா அல்லது உணவகமாக என்று உறுதியாகச் சொல்ல முடியாதபடி, புத்தக உணவகமாகக் காட்சி தருகிறது. பீமாபாய் ஜாண்டலே என்ற பெண்மணி இந்த உணவகத்தை நடத்தி வருகிறார். பீமாபாயின் உணவகம் மட்டுமல்ல, அவரது வாழ்க்கைக் கதையும் மற்றவர்களுக்கு உந்துதல் தரக்கூடியது. ஆம் ; ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே, பீமாபாய்க்குத் திருமணமாகிவிட்டது. நாசிக் நகரத்தின் அருகி லிருந்த குக்கிராமத்தில் வசித்து வந்த கணவரின் வீட்டுக்குச் சென்றுவிட்டார் பீமாபாய். ‘‘எனக்கு வாசிப்பின் மீது பெருங்காதல். புத்தகங்கள்தான் எனது சிறந்த நண்பன். ஆனால், கல்யாணத்துக்குப் பிறகு எல்லாமே மாறிவிட்டது...’’ என்கிற பீமாபாயின் வாழ்க்கையே தலைகீழாக மாறியது.
ஆம்; திருமணத்துக்குப் பிறகு சொந்த ஊர், வீடு மற்றும் தான் நேசித்த விஷயங்களை எல்லாம் விட்டு வெகு தொலைவுக்குச் சென்றார் பீமாபாய். கணவருடன் வசித்தாலும் தனிமை அவரை வாட்டியது. குடும்பத்தைக் கவனித்துக் கொள்வது மட்டுமே அவரது பொறுப்பாக மாறியது. இத்தனைக்கும் பதின்பருவத்துக்குள்தான் நுழைந்திருந்தார் பீமாபாய். மட்டுமல்ல, பீமாபாயின் கணவர் மதுவுக்கு அடிமையானவர். எப்போதும் குடித்துக்கொண்டு ஊரைச் சுற்றிக்கொண்டிருப்பார். அதனால் வீட்டை மட்டுமல்லாமல், விவசாயத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு பீமாபாயின் தலையில் விழுந்தது.
இதற்கிடையில் மகள் இறக்க, குழந்தையையும் கவனித்துக்கொண்டு, குடும்பத்தையும் நடத்தினார். மகள் நடக்க ஆரம்பித்தவுடனே தன்னுடன் விவசாய வேலைகளுக்கு அழைத்துச் செல்ல ஆரம்பித்துவிட்டார். நாளுக்கு நாள் பீமாபாயின் பொருளாதாரம் நலிவடைந்துகொண்டே சென்றது. அவரது கணவர் குடிப்பதும் அதிகமானது. உச்சகட்ட போதையில் நிலத்தை விற்று குடிக்கும் நிலைக்கு ஆளானார். புதிதாக சூதாட்டத்திலும் ஈடுபட்டார்.
இன்னொரு பக்கம் மகன் பிரவீன் பிறந்துவிட்டார். மகளும், மகனும் வளர்ந்து பள்ளிக்கூடம் போக ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் பீமாபாயின் குடும்பத்தினர் மூன்று வேளை சாப்பிடுவதற்கே சிரமம் ஏற்பட்டது. பல இடங்களில், பல மணி நேரம் வேலை பார்த்து குடும்பத்தின் உணவுத்தேவையைப் பூர்த்தி செய்தார் பீமாபாய். குடும்பத்தின் பொருளாதாரச் சூழலைப் புரிந்துகொண்ட பிரவீன், சிறு வயதிலேயே செய்தித்தாள்களை விநியோகம் செய்து, அம்மாவின் சுமையைக் குறைத்தார்.
‘‘எங்களுடைய எல்லா உறவினர்களும் அம்மாவின் பக்கம் நின்றனர். ஆனால், அப்பா பெயரில் மட்டுமே அப்பாவாக இருந்தார். அவர் எந்த குடும்பப் பொறுப்பையும் எடுத்துக் கொள்ளவில்லை. நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குச் சென்று அம்மாவைப் போன்று குடும்பத்தைக் கவனிக்க வேண்டும் என்ற வைராக்கியம் உண்டானது...’’ என்கிற பிரவீன், செய்தித்தாள் விநியோக வேலை மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு படித்தார்.
பிரவீனும், அவரது சகோதரி யும் வளர்ந்து, பெரியவர்களாகி விட்டனர். கிராமத்திலேயே இருந்தால் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் இருக்காது என்று பீமாபாயின் குடும்பம் நகரத்துக்கு இடம் பெயர்ந்தது. 2008ம் வருடம் பிரவீன் நாசிக் நகரத்தில் ஒரு பதிப்பக நிறுவனத்தை ஆரம்பித்தார். பீமாபாய்க்கும், அவரது மகளுக்கும் விவசாயத்தை விட்டால் பெரிதாக எதுவும் தெரியாது.
2010ம் வருடம் அம்மாவும், மகளும் சேர்ந்து, சிறிய அளவில் ஒரு தேநீர்க் கடையைத் தொடங்கினார்கள். அதுதான் இன்று ‘அச்சய புஸ்தககாஞ்சா ஹோட்டல்’ என்ற புத்தக உணவகமாக வளர்ந்து நிற்கிறது.
கிராமத்தைவிட்டு நகரத்தில் வந்து குடியேறி, தேநீர்க் கடையை ஆரம்பித்த பிறகும் கூட அவர்களது வாழ்க்கையில் அமைதியில்லை. குடும்பத்தைக் கவனித்து, வீட்டு வேலைகளைச் செய்யாமல், பெண்கள் எப்படி தேநீர்க் கடை நடத்தலாம் என்று கேலிப்பேச்சுகள் அம்மாவையும், மகளையும் தொந்தரவு செய்தன. ஆனால், அவர்கள் துவண்டு விடவில்லை. ஒரு கட்டத்தில் கேலிகளையும், கிண்டல்களையும் பொருட்படுத்தவில்லை.
தேநீர்க் கடை நல்ல வருமானம் கொடுத்தது. குடும்பச் செலவு போக, சேமிக்கும் அளவுக்கு பீமாபாயின் குடும்பம் முன்னேறியது. தேநீர்க் கடையைப் பெரிதாக்கி, உணவகமாகவும் மாற்றினார் பீமாபாய். கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் ஒரு விஷயம் பீமாபாயை கவலையடைய வைத்தது.
ஆம்; உணவுக்காகக் காத்திருக்கும்போது வாடிக்கையாளர்கள் தங்களது போன்களில் மூழ்கிப் போயிருப்பதை பீமாபாய் கவனித்தார். வாடிக்கையாளர்கள் மற்றவர்களிடமும் உரையாடுவதில்லை. போனைப் பார்த்துக் கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருந்தனர். இது ரொம்பவே அபத்தமாக பீமாபாய்க்குத் தோன்றியது. இதற்கு மாற்றாக உருவானதுதான் புத்தக வாசிப்புப் பழக்கம்.
ஆரம்பத்தில் உணவகத்துக்குள் சிறிய அலமாரியில் 25 புத்தகங்களை வைத்தார். கடைக்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளரிடமும் உணவுக்காக காத்திருக்கும் நேரத்தில் போனை பயன்படுத்தாமல், புத்தகம் படியுங்கள் என்று பீமாபாயே நேரடியாகச் சொன்னார். வாடிக்கையாளர்களும் புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்தனர்.
உணவு தயாராகி அவர்களது மேசைக்கு வருவது கூட தெரியாமல் புத்தகத்தை ஆர்வத்துடன் படித்தனர். புத்தகத்துடன் கூடிய உணவகத்தைப் பற்றி வாடிக்கையாளர்களே மற்றவர்களுக்கு சிபாரிசு செய்தனர். பீமாபாயின் செயல்பாட்டுக்குப் பாராட்டுகள் குவிந்தன. உணவகத்தை வாடிக்கையாளர்கள் மொய்க்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் தனிப்பட்ட காரணங்களால் பதிப்பகத்தை மூடினார் பிரவீன். தன்னிடமிருந்த மராத்தி மொழிப் புத்தகங்களை அம்மாவின் உணவகத்தில் வைக்க, புத்தகங்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டது.
பீமாபாயின் செயல்பாட்டைக் கேள்விப்பட்டு, பலரும் புத்தகங்களை அனுப்பினார்கள். புத்தகங்கள் வாங்க நன்கொடையும் அளித்தனர். இன்று பீமாபாயின் உணவகத்தில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைத் தொட்டுவிட்டது. மட்டுமல்ல, பெண்கள் தினத்தன்று கடைக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களுக்கு பரிசாக புத்தகத்தை வழங்குகிறார் பீமாபாய். பிறந்த நாள் பரிசாகவும் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இப்போது மருத்துவமனைகளுக்குப் புத்தகங்களை நன்கொடையாக் வழங்கி வருகிறார் பீமாபாய். அதே நேரத்தில் உணவகத்துக்கு புத்தகங்கள் வாங்குவதற்கான நன்கொடையும் தொடர்கிறது.
‘‘எனது உணவகத்தில் மக்கள் புத்தகம் படிப்பதைப் பார்க்கும்போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். நிலையான ஒரு வாழ்க்கைகாக பல வருடங்கள் கஷ்டப்பட்டிருக்கிறேன். ஒரு பெண்ணாக வாசிப்பின் மீது பெருங்காதல் எனக்கு. ஆனால், அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கவே இல்லை. என் குழந்தைகளும், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களும் படிப்பதைப் பார்க்கும்போது வாழ்க்கையில் வெற்றி பெற்றுவிட்டதாக ஒரு உணர்வு...’’ என்று அழுத்தமாக முடித்த பீமாபாயின் வயது எழுபதைத் தாண்டிவிட்டது.
த.சக்திவேல்
|