ONE TO ONE! சர்வதேச தரத்தில் ஆன்லைன் இசைப் பயிற்சி



இசை எல்லோருக்குமானது. சிலருக்கு பாடப் பிடிக்கும்‌. ஒரு சிலர் இசைக்‌ கருவிகள்‌ வாசிக்க விரும்புவார்கள். இசை என்பது நம்முடைய வாழ்வில் ஏதாவது ஒரு வகையில் பிணையப்பட்டுதான் இருக்கிறது. அதைப் புரிந்துகொண்டுள்ளனர் நண்பர்களான ஆஷிஷ்‌ ஜோஷி மற்றும்‌ விவேக்‌ ரைச்சா. 
இவர்கள், நாம் விரும்பும் இசையினை நம் இல்லத்தில் இருந்து கொண்டே பயிலலாம்; விரும்பினால் நேரில் சென்றும் கற்றுக் கொள்ளலாம் என்கிறார்கள். ‘‘என்னுடைய அம்மா ஓர் இசைக் கலைஞர். அதனாலேயே எனக்கும் இசை மேல் ஆர்வம் இருந்தது. ஆனால், நான் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை. என்றாலும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சியில் நான் பாடியிருக்கேன்.

இசை மேல் இருந்த ஆர்வம்தான் என்னை அந்தத் துறையில் கொண்டு சென்றதுனு சொல்ல வேண்டும். நான்‌ 20 வருஷங்களா மீடியா துறையில்‌தான்‌ இருந்தேன்‌. அதில்‌10 வருஷம்‌ இசை மற்றும்‌ டிஜிட்டல்‌ துறையின் தென்‌ ஆசியா தலைவராக செயல்பட்டு வந்தேன். அதனால் எனக்கு பல இசைக் கலைஞர்களின் நட்பு கிடைத்தது. 
அதுதான் இந்த ‘ஆர்டியம் இசைப் பள்ளி’ அமைக்க ஒரு காரணமாகவும் மாறியது...’’ என்று பேசத் துவங்கினார் பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஆஷிஷ்‌.“இந்தியா மட்டுமில்லை... உலகம்‌ முழுக்க இசைக் கலைஞர்களுக்கான மதிப்பு எப்போதுமே குறைந்ததில்லை. இசைபாரம்பரிய முறையில்தான் இன்று வரை கற்பிக்கப்படுகிறது.

அதனை பலர் நேரடியாக பயிலத்தான் விரும்புகிறார்கள். ஆனால், உலகம் முழுதும் இசை சார்ந்த பயிற்சி முறைகள் டிஜிட்டல் முறையில் இயங்கி வருகிறது. அதனை இந்தியாவில் தரமான முறையில் கொடுக்க விரும்பினோம். 

இசையைப் பொருத்தவரை  தனிப்பட்ட பாடத்திட்டங்கள்‌ உள்ளன. அந்தக் கோட்பாடுகளைத்தான் இன்றும் பின்பற்றி வருகிறாம். அதில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தினர்தான் இசையினை தங்களின் தொழிலாக மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். பலர், இசை பிடிக்கும்... அதனால் அதைக் கற்றுக் கொள்ள விரும்புவதாகக்
கூறுகிறார்கள்.

இசை எல்லாருக்கும் பொதுவானது. அதனால் அதனை தொழிலாகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமில்லாமல் மற்றவர்களுக்கும் கொண்டு செல்ல விரும்பினோம். எனவே இந்த இரு பிரிவினருக்கான பாடத்திட்டங்களை அமைத்தோம். இதன் மூலம்‌ பலர்‌ இசையினைக் கற்றுக்‌கொள்ள முன்வருவார்கள்‌. 

இதற்‌காக இசைத்துறையில்‌ உள்ள ஜாம்பவான்‌களை அணுகினோம்‌. அவர்களைக் கொண்டு தனித்தனி பாடத்திட்டங்களை அமைத்‌தோம். எல்லாவற்றையும்‌விட இந்தியாவில்‌ ஒரு தரமான இசைப் பயிற்சிக்கான பிராண்ட்‌ எங்க பள்ளியாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்...” என்ற ஆஷிஷ்‌, பள்ளியின்‌ செயல்பாட்டினைப்‌ பற்றி விவரித்தார்‌.

“ஒவ்வொருவரின்‌ விருப்பத்திற்கு ஏற்ப இசை அமைத்துத் தரவேண்டும்‌ என்பதுதான்‌ எங்களின்‌ நோக்‌கம்‌. அதனால் இசையின் பாரம்பரியம்‌ மாறாமல்‌ மாடர்ன்‌ பாடத்திட்டத்தை இசை ஜாம்பவான்கள்‌ கொண்டு அமைத்திருக்கிறோம்‌. இதில்‌ கர்நாடக சங்கீதம்‌, ஹிந்துஸ்தானி, கசல்‌, சினிமா பாடல்கள்‌ (தமிழ்‌, மலையாளம்‌, கன்னடம்‌, இந்தி, தெலுங்கு மொழிகள்‌) மட்டுமில்லாமல்‌ கிட்டார்‌, பியானோ, தபேலா, டிரம்ஸ்‌ போன்ற இசைக்கருவிகளுக்கும்‌ பயிற்சி அளிக்கிறோம்‌.

ஒவ்வொரு இசைக்கும்‌ தனிப்பட்ட ஆசிரியர்கள்‌ உண்டு. அவர்களை நேர்காணல்‌ மூலம்‌ தேர்ச்சி செய்கிறோம்‌. தேர்ச்சி பெற்ற ஆசிரியர்‌களுக்கு இசை ஜாம்பவான்‌கள்‌ எங்களின்‌ பள்ளியின்‌ பாடத்திட்டங்கள்‌ குறித்து பயிற்சி அளிப்பார்கள்‌. பயிற்சிக்குப் பிறகு அவர்கள் தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்வானவர்களுக்குத்தான் சான்றிதழ்கள் வழங்கப்படும்‌. அதன்‌ பிறகுதான்‌ அவர்கள்‌ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்‌.

ஆசிரியர்களைப் பொறுத்தவரை அவர்கள்‌ முறையான இசைப் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அப்போதுதான்‌ அவர்‌களால்‌ எங்களின்‌ பாடத்திட்டங்களுக்கு ஏற்ப மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியும்‌. மேலும் எங்களின்‌ பள்ளியில்‌ சேர விரும்பும்‌ மாணவர்களுக்கு இசை பயில வேண்டும்‌ என்ற ஆர்வம்‌ இருந்தாலே போதும்‌. 

அவ்வாறு விரும்பும் மாணவர்களுக்கு முதலில்‌ எங்களின்‌ பாடத்திட்டங்கள்‌ மற்றும் பயிற்சி முறைகளை ஒரு வீடியோ மூலம்‌ தெளிவுபடுத்துவோம். அதன்பின்‌ அவர்கள்‌ விரும்பும்‌ துறையில்‌ பயிற்சியினைப் பெறலாம்‌.

ஐந்து வருட பயிற்சியை உலகளாவிய தரநிலையில் அமைத்திருக்கிறோம். இதன் மூலம் அவர்கள் உலகளவில் செயல்படும் இசைப் பள்ளிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்குப் பிறகு அவர்கள் அதனை தொழிலாக அமைத்துக்‌ கொள்ளலாம்‌ அல்லது தனிப்பட்ட இசை ஆல்பங்களை உருவாக்கலாம்‌.

ஆன்லைன் முறையில் ஒரு மாணவருக்கு ஓர் ஆசிரியர்‌ என்று பயிற்சி அளிப்‌பார்கள்‌. பயிற்சிக்குப் பிறகு அவர்‌களுக்கு வீட்டுப்பாடம்‌ வழங்கப்‌படும்‌. அதை முடித்து அவர்களுக்கு என கொடுக்கப்பட்டுள்ள டாஷ்‌போர்டில்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌. அதை ஆசிரியர்கள்‌ சரி பார்த்து, எங்கு தவறு உள்ளது என்பதைக் கண்டறிந்து, அதற்கான விளக்கத்தினை அளிப்‌பார்கள்‌. நேரடி பயிற்சிக்கு ஐந்து மாணவருக்கு ஓர் ஆசிரியர் என்று நியமித்து இருக்கிறோம். வாரத்திற்கு இரண்டு என்று மாதம் எட்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.

எங்களின் இசை ஜாம்பவான்கள்‌ அவ்வப்‌போது ஆசிரியர்களின்‌ திறமையினை மெருகேற்றுவதால்‌, அதன் பலனை நாம் மாணவர்களின் பயிற்சியில் காண முடியும். மேலும் ஜாம்பவான்களும்‌ மாணவர்களின்‌ திறனை அவ்வப்போது சோதிக்கவும்‌ செய்வார்கள்‌. 

கர்‌நாடக இசைக்கு அருணா சாய்‌ராம்‌, ஹிந்துஸ்தானிக்கு சுபா முத்‌கல்‌, தெலுங்கு, தமிழ்‌, மலையாளம்‌, கன்னட சினிமா இசைக்கு பாடகி சித்ரா, இந்தி, சினிமா பாடல்கள்‌ மற்றும்‌ கசலுக்கு இசைக்‌ கலைஞர்‌ சோனு நிகாம்‌, குரல்‌ வளத்திற்கு அனந்த்‌ வைத்தியநாதன்‌... போன்ற ஜாம்பவான்களின்‌ பயிற்சியின்‌ அடிப்படையில்‌தான்‌ இந்த இசைப்‌பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்தப் பயிற்சிகள்‌ அனைத்தும்‌ முதலில் ஆன்‌லைனில்தான் கொடுத்து வந்தோம். ஆனால், பலரின் விருப்பத்தினை ஏற்று தற்போது மும்பை மற்றும் சென்னையில் மட்டும் நேரடியாக பயிற்சி வகுப்பினைத் துவங்கி இருக்கிறோம். விரைவில் சென்னையில் பல கிளைகள் மற்றும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நேரடி பயிற்சிப் பள்ளியினை ஃபிரான்சைசி முறையிலும் கொடுக்கும் எண்ணம் உள்ளது.

தவிர நாங்க இசை நிறுவனம் ஒன்றையும் துவங்கி இருக்கிறோம். அதன் மூலம் சிறந்த குரல்களை அடையாளம் கண்டறிந்து, அவர்களுக்கு இசைத் துறையில் வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறோம்.

அவர்கள் தனிப்பட்ட ஆல்பம் கூட வெளியிடலாம். அதற்கான அனைத்து ஊக்கங்களையும் அளித்து வருகிறோம்...’’ என்கிறார் ஆஷிஷ்.

ஈரோடு, சேலம்‌, திருச்சி ஆசிரியர்கள் சென்னை, மும்பை மாணவர்களுக்கு பாடம் எடுக்கிறார்கள்

‘‘ஆஷிஷ் என்னை அணுகி கர்நாடக சங்கீதம் பயிற்சி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படித்தான் நான் பயிற்சி அளிக்க ஆரம்பித்தேன். பள்ளியில்‌ என்னுடைய முக்கிய பங்கு கர்நாடக இசை குறித்து பாடத்‌திட்டம்‌ அமைப்பது. ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது. மாணவர்களைப் பொருத்தவரை பல தரப்பட்ட வயதினைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள்‌. அதில்‌ எல்லோரும்‌ கர்நாடக இசையினை தங்களின்‌ தொழிலாக அமைத்துக் கொள்வதற்காக பயில வர மாட்டார்கள்.

சிலருக்கு இசை பிடிக்கும், அதனால் பாட கற்றுக் கொள்ள வேண்டும் என்று வருவார்கள். அதனால்‌ பாடத்திட்டத்தினை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்திருக்கிறோம். ஆசிரியர்களும் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்பதான் பயிற்சி அளிப்பார்கள்.

பள்ளியில் என்னுடைய முக்கிய பங்கு ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிப்பது, அவர்களை ஊக்குவிப்பது மற்றும்‌ அவர்களை மெருகேற்றுவது. மாணவர்களுக்கு நாங்க நேரடியாக பயிற்சி அளிக்கமாட்டோம் என்றாலும், அவ்வப்போது, அவர்களுடன்‌ பேசி அவர்களின்‌ தேவையை அறிந்து அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு நான் பயிற்சி கொடுப்பேன்‌.

இங்கு மாணவர்களை மட்டுமில்லை ஆசிரியர்களை தேர்வு செய்வதும்‌ பெரிய பிராசஸ்‌. முதலில் ஆசிரியருக்கு, இசை குறித்த அறிவு உள்ளதா, அவர்கள்‌ எப்படி சொல்லிக்‌ கொடுக்கிறார்கள்‌, ஆன்லைன்‌ முறையில்‌ மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க முடியுமா... என பல ஆய்வுகளுக்குப் பிறகுதான்‌ ஆசிரியர்களை தேர்வு செய்வோம்‌.

இது ஆன்லைன் பள்ளி என்பதால் கற்கும் ஆர்வம் உள்ளவர்கள் மெட்ரோபாலிடன்‌ சிட்டியில்தான்‌ இருக்க வேண்டும்‌ என்றில்லை. உதாரணமாக ஈரோடு, சேலம்‌, திருச்சி போன்ற மாவட்டங்களில்‌ இருந்தும்‌ திறமையான ஆசிரியர்கள்‌ பயிற்சி அளிக்கிறார்கள்‌. மாணவர்களைப் பொறுத்தவரை பொழுதுபோக்கிற்காக பயிற்சி எடுத்தாலும்‌ கற்றுக்‌கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும்...’’ என்கிறார் அருணா சாய்ராம்.

குரல் வளக் கலை!

‘‘ஒருவரின் குரல்‌ வளத்தினை இசையுடன்‌ சேர்த்துதான்‌ பயிற்சி அளிக்க முடியும்‌. அதன்‌ அடிப்படையில்‌தான்‌ நான்‌ இவர்களுடன்‌ சேர்ந்து செயல்பட்டு வருகிறேன்‌. குரல்‌வள பயிற்சியினை எவ்வாறு மேம்படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பேன்‌. அவர்கள்‌ மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பார்கள்‌. இதற்காக தனிப்பட்ட பாடத்திட்டங்களும் உள்ளன. இப்போது நான் பயிற்சி அளித்து அதில் தலைமையாக ஒருவரை நியமித்து இருக்கிறேன். அவர்தான் என்னுடைய ஆரம்பகட்ட வேலையை பார்த்துக் கொள்கிறார்.

நான் தற்போது முழுக்க முழுக்க குரல் வள ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறேன். அதன் மூலம் மாணவர்களின் குரலை மேலும் எவ்வாறு மேம்படுத்தலாம் என்று ஆய்வு செய்து வருகிறேன்.
கடந்த 3 வருடங்களில் 300க்கும்‌ மேற்பட்ட ஆசிரியர்களுக்கு குரல்‌வளப்‌ பயிற்சி அளித்திருக்கேன்‌.  முதலில் ஆசிரியர்களுக்கு இசை குறித்து ஞானம் இருக்கணும். திறமையானவர்களாக இருக்க வேண்டும். கர்நாட சங்கீதம் தெரிந்திருக்கணும். இசை சொல்லிக் கொடுப்பதில் ஆர்வம் இருக்க வேண்டும்.

அப்பதான் அவர்களால் நாம் சொல்லிக் கொடுக்கும் குரல் வள டெக்னிக்கைப் புரிந்து கொண்டு மாணவர்களுக்கு சொல்லித் தர முடியும். 15 நாட்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்போம். அதன் பிறகு அவ்வப்போது அவர்களுக்கு ஆலோசனையும் கொடுப்போம். தற்போது சர்வதேச அளவில் நாங்க பயிற்சி அளிப்பதால் அதற்கு ஏற்ப ஆசிரியர்களுக்கான பயிற்சித் திட்டத்தினை மேம்படுத்தி வருகிறோம்...’’ என்கிறார் அனந்த் வைத்தியநாதன்.

ப்ரியா