GULF நாடுகளில் என்ன நடக்கிறது..? ஒன்றிய அரசு ஏன் மவுனம் காக்கிறது..?



வருடத்துக்கு 10 ஆயிரம் மர்ம மரணங்கள்!

சவுதி அரேபியா, குவைத், பஹரைன், கத்தார், ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் (UAE) மற்றும் ஓமான் போன்ற 6  வளைகுடா (கல்ஃப்) நாடுகளில் இந்தியா உட்பட்ட தெற்காசிய மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து செல்லும் தொழிலாளர்கள் வருடத்துக்கு 10 ஆயிரம் பேராவது மர்மமான முறையில் இறந்து போகிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலைச் சொல்கிறார்கள் இது தொடர்பான தன்னார்வலர்கள்.வளைகுடா நாட்டு வேலை என்பது ஒன்றும் புதுமையானது அல்ல. ஆனால், இந்தியா போன்ற நாடுகளில் அண்மைக்காலமாகத் தலைவிரித்தாடும் வேலையின்மைப் பிரச்னையால் இந்த நாடுகளுக்கு வேலைக்குச் செல்வது உச்சத்தைத் தொட்டிருக்கிறது.

2022ம் ஆண்டின் ஒரு கணக்குப்படி இந்தியாவிலிருந்து இந்த நாடுகளுக்குச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை சுமார் 1 ½ கோடியைத் தொட்டிருக்கிறது. இந்த வேலைகள் எல்லாமே ‘ப்ளூ காலர்’ (Blue Collar) என்று அழைக்கப்படுகிறது. அதாவது வெல்டர், டிரைவர், மேசன் போன்ற திறன் குறைந்த வேலைகள் (unskilled labour). இதனால் இந்த வேலைகள் ஆபத்தும் நிறைந்தது. ஆனால், இந்த வேலைகளில் இருந்துஇந்தத் தொழிலாளர்கள் இந்தியாவுக்கு கொண்டுவரும் வருமானம் ஏராளம். இது இந்திய பொருளாதாரத்துக்கும் அச்சாணியாகும்.

வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர்களை மொத்தமாக கணக்கிட்டால் இந்த கல்ஃப் நாடுகளில் வேலை செய்பவர்கள் மூன்றில் இரண்டு மடங்கு இருப்பார்கள். இந்தத் தொழிலாளர்களைக் காப்பாற்ற இந்திய அரசு என்ன செய்கிறது என்ற பெரும் கேள்வி எழுந்திருக்கிறது.இந்தத் தொழிலாளர்கள் இறந்தால் அரசு சார்பில் உதவ ‘பிரவாசி பாரதிய பீமா யோஜனா’ (Pravasi Bhartiya Bima Yojana) என்ற ஒரு காப்பீடு இருக்கிறது.

ஆனால், வெளிநாட்டில் சொல்லப்படாத காரணங்களால் இந்தத் தொழிலாளர்கள் இறப்பதால் இந்தக் காப்பீடும் பயனில்லாமல்தான் இருப்பதாக சொல்கிறார்கள் ஆர்வலர்கள்.
இந்தத் தொழிலாளர்களை வேலைக்கு வெளிநாட்டில் அமர்த்துவதற்கான ஏஜெண்டுகளையும் அரசு பட்டியலிட்டிருக்கிறது. ஆனால், என்ன பிரச்னை என்றால் இந்த ஏஜெண்டுகளுக்காக ஆள் பிடிக்கும் சப் ஏஜெண்டுகள் தொழிலாளர்களைக் கறந்துவிடுகிறார்கள்.

உதாரணமாக இந்த வேலைக்காக ஓர் அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்ட் வெறும் 30 ஆயிரம் ருபாயைத்தான் வசூலிக்கவேண்டும் என்ற சட்டம் இருக்கிறது. ஆனால், ஒரு லட்சம் வரை சப் ஏஜெண்டுகள் கறந்துவிடுகிறார்கள் என்று சொல்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஒரு கல்ஃப் தொழிலாளி வேலை தொடர்பாக இறந்துபோனாலும் அது என்னவோ இயற்கையாக நடந்த மரணம்போல வெளிநாடுகளும் அங்குள்ள அரசு நிறுவனங்களும் திருப்பிவிடுவதால் இந்திய அரசின் உதவியையும் இந்தத் தொழிலாளர் குடும்பங்கள் பெறமுடியாமல் தவிக்கின்றன.

இதனால் இந்த மரணங்கள் எதை ஒட்டி நிகழ்ந்தாலும் மரணமடையும் இந்தத் தொழிலாளர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவேண்டும் என்று தொடர்ச்சியாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் இந்தியாவில் இயங்கும் இது தொடர்பான இயக்கங்கள். அரசு இதை கவனிக்குமா என்பதே இன்றைய தேதியில் பெரிய கேள்வியாக உள்ளது.நம் ஊரில் வெளிநாட்டு வேலை என்றாலே ‘ஒட்டகத்துக்கு மயிர் பிடுங்கும் வேலையா’ என்று கிண்டலாகக் கேட்பார்கள். ஆனால், அந்த பிடுங்கும் வேலையிலும் பிக்கல் பிடுங்கல் இருந்தால் எப்படி நியாயமாரே!

டி.ரஞ்சித்