குடும்ப யூடியூப் சேனல்!
குடும்பமாகக் கூடி கும்மி அடிக்க முடியுமா?
‘‘முடியுமே...’’ என்கின்றனர் ‘அம்மா - மகன் - மகள்’ என மூவராக இணையத்தில் வலம் வரும் ‘மாம்ஃப்ளூயன்சர்’ யூடியூப் சேனல் கமலாராணி குடும்பம். ‘அட இப்படியும் ஒரு குடும்பமா’ என்கிற அளவுக்கு அம்மா கமலாராணி, கல்லூரி படிப்பை முடித்திருக்கும் மகன் பிரணவ், சட்டம் படித்து வரும் மகள் சினேகாவுடன் இணைந்து, படுகேஷுவலாய் பக்கத்துவீட்டு பங்கஜம், எதிர்வீட்டு எஸ்தர், கீழ்வீட்டு ராணி என மோனோ ஆக்டிங் நடிப்பில் ஜாலி பண்ணுவது, மொக்கை பண்ணுவதென யூ டியூப் சேனலை அதகளம் செய்கிறார்கள்.
‘‘என் நடிப்புக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷனே என் சின்ன வயதில் தியேட்டரில் படம் பார்த்த நிகழ்வுதான்...’’ என்றபடி பேச ஆரம்பித்தார் கமலா ராணி.‘‘என் அப்பாவோடு சேர்ந்து வாரம் ஒரு படம் தியேட்டரில் பார்த்திடுவேன். திரைப்படங்களைப் பார்த்துப் பார்த்து வளர்ந்ததால் ஸ்கிரிப்டிங், நடிப்புன்னு இயல்பா வருது. அத்துடன் கோயம்புத்தூர் எனக்கு சொந்த ஊர் என்பதால், கொங்குதமிழ் அசால்ட்டா வரும். என் ஸ்லாங்தான் என் சேனலோட பலம்னு நினைக்கிறேன்...’’ எனப் புன்னகைத்தவர், ‘‘நடிகை கோவை சரளா எனக்கு ரொம்பவே பிடித்த நடிகை...’’ என்றவாறு டீன் ஏஜ் வயதைத் தொட்டு நிற்கும் மகன் பிரணவ், மகள் சினேகா குறித்து பெருமைப்படுகிறார்.
“‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை...’ பாட்டு மாதிரிதான் எங்க வீடு. எப்பவுமே ஜாலிதான். என்ன... ஜாலி கொஞ்சம் கூடுதலா தூக்கலா இருக்கும். ஆனாலும் எல்லாக் குடும்பங்களிலும் வருகிற சின்ன சின்ன சண்டைகளும் இருக்கும். சலசலப்பும் இருக்கும். என் பிள்ளைகள் பிரணவ், சினேகாவோட ஃபன் பண்ணிக்கிட்டே, ஜாலியா, ஃப்ரெண்ட்லியா லைஃபை கொண்டு போறேன். நான் சொன்னா என் பசங்க சமத்தா கேட்டுப்பாங்க!’’ தன் பிள்ளைகளைப் பார்த்து புன்னகைத்தபடி கண் சிமிட்டுகிறார் கமலாராணி.
‘‘குழந்தைகள் மீது அழுத்தங்களை திணிக்கிற பெற்றோர்களே இங்கு அதிகம். என் குழந்தை அதிகமா மார்க் வாங்கணும், எல்லாத்தையும் தெரிஞ்சுக்கணும் என்கிற எண்ணம்தான் குழந்தை வளர்ப்பின் சிக்கலே. நானும் அப்படியெல்லாம் இருந்த அம்மாதான். ஆனால், குழந்தைகள் வளர வளர, நம் எதிர்பார்ப்பை அவர்களிடம் திணிப்பது சரியில்லை எனவும். அவர்களால் என்ன முடியும் என்பதும் எனக்குப் புரிய ஆரம்பித்தது.குழந்தைகளின் திறமை மதிப்பெண் எடுப்பதில் கிடையாது. என் பிள்ளைகள் பிரணவ் - சினேகா ஆகிய இருவருக்குமே ப்ளஸ், மைனஸ் இரண்டுமே இருக்கு.
படிக்கிற பிள்ளதான் உசத்தின்னு நான் சொல்லவே மாட்டேன். குழந்தைகளுக்கென ஒரு நேச்சர் இருக்கும். அதற்கென ஒரு விருப்பமும் இருக்கும். நல்லா படிச்சு மார்க் வாங்குற குழந்தை மட்டுமா புத்திசாலி? மகள் ஸ்னேகா பிறந்த பிறகே நான் இதை முழுமையாக உணர ஆரம்பித்தேன். என் மகள் சினேகா எப்பவுமே ரேங்க் ஹோல்டர்தான். எதைக் கொடுத்தாலும் படிச்சு அதை அப்படியே எழுதி மார்க் எடுத்துட்டு வந்துருவா.
ஆனால், பிரணவ் புக் வார்ம் செய்யும் டைப் இல்லை. ஆவரேஜ் ஸ்டூடண்ட். ஆனால், சப்ஜெக்ட் ஓரியன்டடாக இல்லாமல் எதைப்பற்றி கேட்டாலும் தெரிந்து வைத்திருப்பான். அவனுக்குத் தேவையென நினைப்பதை, அவனுக்குப் பிடித்த விஷயத்தைத் தெரிந்துகொள்வான். பல புது இன்ஃபர்மேஷன்ஸ் அவன்கிட்ட இருந்து எனக்குக் கிடைக்கும். மதிப்பெண்கள் அதிகம் வாங்குவதால் சினேகாவுக்கு எல்லாமே தெரியும், மதிப்பெண் குறைவாக எடுப்பதால் பிரணவ் நாலேஜ் குறைவானவன் என்றெல்லாம் சொல்லவே முடியாது.
இன்றைய நமது பிள்ளைகள் எல்லா விஷயங்களையும் வேகமாக கத்துக்கிறாங்க. ரொம்பவே techகியாக இருக்காங்க. கூடவே தெளிவாகவும் இருக்காங்க.
குழந்தைகள் வளரவளரத்தான் நானும் அவர்களை அனலைஸ் செய்து புரிந்துகொண்டேன்...’’ என்றவரிடம், சோஷியல் மீடியா ப்ளாட்பார்மில் தங்களின் குழந்தைகள் என்ன செய்கிறார்கள், எதைத் தேடுகிறார்கள் என்பதே பல பெற்றோருக்கு இங்கு தெரியாத நிலையில், உயரத்தில் பட்டத்தை பறக்கவிட்டு, நூல் பிடியை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் கமலா ராணியிடம், எப்படி இது சாத்தியம் என்று கேட்டோம்.
‘‘நான் +2 படித்தபோது என் பெற்றோரை விபத்து ஒன்றில் இழந்தேன். அதனால் ஸ்கூல் டிராப்அவுட் ஸ்டூடண்டாக, இழந்த குடும்பத்தை நினைத்து, எனக்கான புது குடும்பத்தை உருவாக்கும் முயற்சியில் 19 வயதிலேயே எனக்குத் திருமணம். என் 21 வயதில் என் மகன் பிரணவ்வும், 25 வயதில் என் மகள் சினேகாவும் பிறந்துவிட்டனர். மிகச் சின்ன வயதில் அம்மா என்கிற பொறுப்புடன், என் குழந்தைகளோடு குழந்தையாகவே நானும் வளர்ந்தேன் என்றுதான் சொல்வேன். என் தம்பி, தங்கையோடு வளர்ந்த ஃபீலிங்தான் எனக்குள் இருந்தது.
ஒருகட்டத்தில், சிங்கிள் மதராக வாழவேண்டிய சூழலும் ஏற்பட, என் குழந்தைகளிடமிருந்தே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு, அவர்கள் போக்கிலேயே அவர்களை வளர்த்து, நானும் வளர்ந்தேன். குழந்தை வளர்ப்பில் யாருடைய இன்ஃப்ளூயன்ஸும் எனக்கு இல்லாமல் இருந்ததால், பேரன்டிங் எனக்கு கஷ்டமானதாகத் தெரியவில்லை...’’ என்ற கமலாராணி, ‘மாம்ஃப்ளூயன்சர்’ யூடியூப் சேனல் குறித்து சொல்லத் தொடங்கினார்.
‘‘மகன் பிரணவ்தான் முதலில் யூ டியூப் சேனல் தொடங்கினான். அவனுக்கு விஷுவல் மீடியா படிப்பதில் ஆர்வம் அதிகம். +2 முடித்ததும் கல்லூரிப் படிப்புக்கு வெளிநாடு செல்லும் எண்ணமும் அவனுக்கு இருந்தது. அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியபோது, கொரோனா லாக்டவுன் ஏற்பட்டு அவன் விருப்பம் நடக்காமலே போனது. கிடைத்த இடைவெளியில ‘ஜஸ்ட் பனானா’ (Just Banana) என்கிற யூ டியூப் சேனலைத் தொடங்கி அதில் கன்டென்ட் கிரியேஷன், ஷூட்டிங், எடிட்டிங் என ஆர்வம் காட்டினான்.
கொரோனா இரண்டாவது அலை, மூன்றாவது அலை என லாக்டவுன் தொடர்ந்ததில், பிரணவ் தொடங்கிய யூ டியூப் சேனல் கொஞ்சம் கொஞ்சமாக சப்ஸ்க்ரைபர்ஸ், வியூவர்ஸ் என முன்னேறியது.இதன் தொடர்ச்சியாக மகள் ஸ்னேகாவும் பிரணவ்வோடு இணைந்து, ‘ஸ்னேகாலிக்’ (sneholic) என்கிற சேனலை ஆரம்பித்து கன்டென்ட்டுகளை அப்லோட் செய்து வந்தாள்.
மூன்றாவதாக மகன் பிரணவ் எனக்காக உருவாக்கிய சேனல்தான் ‘மாம்ஃப்ளூயன்சர்’ (momfluencer). லாக்டவுன் முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக நார்மல் வாழ்க்கைக்குள் நுழைந்தபோது, பிரணவ் வெளிநாடு செல்லும் எண்ணத்தை மூட்டை கட்டிவிட்டு, கரியரை இங்கிருந்தே மேலே கொண்டு வருவதற்கான முயற்சிகளில் இறங்கியிருந்தான்.
கோவை கல்லூரி ஒன்றில் சேர்ந்து விஸ்காம் படித்துக்கொண்டே, மூன்று சேனலுக்கும் அவனே புரொப்ரைட்டராக இயங்க ஆரம்பித்தான். ஸ்கிரிப்ட் எழுதுவது, டைரக்ஷன் செய்வது, எடிட்டிங்கில் கலக்குவது என பிரணவ் பக்காவாக இருந்தான். வாய்ஸ் மாடுலேஷன், மோனோஆக்டிங் என எல்லாவற்றையும் பிரணவ்தான் எனக்கு சொல்லித் தந்து நடிக்க வைத்து இயக்குவான்.
‘மாம்ஃப்ளூயன்சர்’ சேனலோட புரொமோஷன், கமென்ட்ஸ்க்கான ரிப்ளை என மற்றவற்றை செல்ஃப் டெவலப்பாக நானே செய்து வருகிறேன். ஸ்கிரிப்ட் எழுதிவிட்டு குடும்பமாக உட்கார்ந்து பிளான் போட்டு, நேரத்தை செட் செய்துகொள்வோம்.‘ஜஸ்ட் பனானா’ 6 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ், ‘ஸ்னேகாலிக்’ 8.5 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ், ‘மாம்ஃப்ளூயன்சர்’ 4.5 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ்களுடன் சில்வர் பிளே பட்டன்களை பெற்று டாப் கியரில் நகர்கிறது...’’ என்றவரிடத்தில், மகள் சினேகா குறித்துக் கேட்டோம். ‘‘படிப்பில் மட்டும் சினேகா அவுட்ஸ்டாண்டிங் கிடையாது. நிறைய வால்தனம் செய்து ஆசிரியர்களிடத்தில் மாட்டி, வகுப்பைவிட்டு வெளியில் நிற்பதிலும் அவுட்ஸ்டாண்டிங்தான்!
நன்றாகப் படித்து மார்க் எடுத்துவிடுவதால் ஆசிரியர்கள் அவளை ஒன்றும் சொல்வதில்லை. சன் தொலைக்காட்சியில் இருந்து ஒளிபரப்பாகும் ஆதித்யா சேனலில் ‘காதல் கசக்குதய்யா’ என்கிற வெப் சீரிஸில் சினேகா நடித்திருக்கிறார். ஸ்கூல் படித்துக்கொண்டே காம்பியராகவும் இருந்தார். தொடர்ந்து வெப் சீரிஸ், திரைப்படம் என நடிக்க அழைப்பு வந்தாலும், ஸ்னேகாவுக்கு நடிப்பில் பெரிதாக ஆர்வமில்லை.
ஒவ்வொரு முறையும் கோவையில் இருந்து சென்னை வந்து சேனல் நிகழ்ச்சிகளைச் செய்துவிட்டு திரும்புவது சிரமமாக இருந்ததால், படிப்பில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தாள். +2 முடித்ததுமே அவளுக்கான படிப்பு சட்டம் என முடிவு செய்து, சென்னை சட்டக் கல்லூரி மாணவியாக தற்போது வலம் வருகிறாள். மகன் பிரணவ்வும், மகள் சினேகாவும் அவரவர் கல்விக் கட்டணத்தை அவரவர் யூ டியூப் வருமானத்தில் கவனித்துக் கொள்கிறார்கள்...’’ என கம்பீரமாகப் புன்னகைக்கிறார் ‘மாம்ப்ளூயன்சர்’ கமலாராணி.
செய்தி: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: சதீஸ் தனபாலன்
|