குழந்தைகள் பாதி... அறை மீதி!



ஒரு வீட்டின்‌ மையப்பகுதி என்பது குழந்தைகளின்‌அறைதான்‌. சொல்லப்‌போனால்‌, நம்‌வீட்டின்‌ இதயமும்‌ அதுவே. அந்த இதயத்தை அழகாக வடிவமைத்துத் தருகிறார்‌ சென்னையைச் சேர்ந்த கரிமா அகர்வால்‌. “பொதுவாக குழந்‌தைகளின்‌ அறைகள்‌ என்றால்‌, அதில்‌ ஒரு கட்டில்‌, அவர்கள்‌ படிக்கக்கூடிய மேஜைகள்‌தான்‌ இருக்க வேண்டும்‌ என்றில்லை. அதையும்‌ தாண்டி அவர்கள்‌ அறைகளுள்‌ சின்னச்‌ சின்ன அழகான விஷயங்களை அமைக்க முடியும்‌.

அது அந்த அறையினை மேலும்‌அழகாக மாற்றும்‌...” என்று கூறும்‌ கரிமா, சென்னை நுங்கம்பாக்கத்தில்‌ ‘பீக்காப்பு பேட்டர்ன்ஸ்‌’ என்ற பெயரில்‌ குழந்தைகளின்‌ அறைகளுக்கான பொருட்கள்‌ மற்றும்‌ இன்டீரியர்‌ வடிவமைப்பு செய்து வருகிறார்‌.“நான்‌ சென்னையில்‌ செட்டிலாகி 25 வருடங்களாகிறது. ‘பீக்காப்பூ’ 2002ல்‌ ஆரம்பிச்சேன்‌. இது ஆரம்பிக்க முக்கிய காரணம்‌ என்‌ குழந்‌தைகள்தான்‌. அவர்களின்‌ அறைகளுக்கு அழகான ஜன்னல்‌திரை, மெத்தை கொண்டு அழகுபடுத்த நினைச்‌சேன்‌. ஆனால்‌, நான்‌ எதிர்பார்த்த மாதிரி எதுவுமே கிடைக்கல.

அதனால்‌நானே என்‌ குழந்தைகளின்‌ அறையினை வடிவமைக்க முடிவு செய்தேன்‌. என்‌ குழந்தைகளின்‌ விருப்‌பத்திற்கு ஏற்ப அவர்களின்‌ ஜன்னல்‌திரைகள்‌ மற்றும்‌ சுவர்களில்‌ வண்ணங்கள்‌, பெயின்‌டிங்‌ என டிசைன்‌ செய்தேன்‌. நான்‌ செய்த டிசைன்‌ கடைகளில்‌ கிடைக்கும்‌ ரெடிமேட்‌ பொருட்களை விட பார்க்க மிகவும்‌ அழகாக இருந்தது. 
அவர்களின்‌அறையினை மேலும்‌ அழகாக மாற்றியிருந்தது. அப்போதுதான்‌ எனக்குத் தெரிந்தது, என்னால்‌ குழந்தைகளின்‌ அறைகளை வடிவமைக்க முடியும்‌ என்று. என்‌ குழந்தைகளின்‌ அறையினைப் பார்த்த என்‌ நண்பர்கள்‌ அவர்களின்‌ குழந்தைகளின்‌ அறையினையும்‌ அழகுபடுத்தச் சொல்லிக்‌ கேட்டார்கள்‌. அப்படித்தான்‌ ‘பீக்காப்பூ’ துவங்கியது.

முதலில்‌ குழந்தைகளின்‌ அறைகளுக்கான ஜன்னல்‌ திரைகள்‌ மற்றும்‌ மெத்‌தைகள்தான்‌ செய்து வந்தேன்‌. நான்‌ என்ன செய்வேன்‌ என்று என்‌ நண்பர்கள்‌ மற்றும்‌ உறவினர்களுக்குத் தெரியும்‌.
ஆனால்‌, மற்றவர்‌களுக்கும்‌ என்னைப்‌ பற்றித் தெரிய வேண்டும்‌ என்று விரும்பினேன்‌. அதனால்‌, இந்தியா முழுக்க நடைபெறும்‌ கண்காட்சிகளில்‌ நான்‌ கலந்து கொள்ள ஆரம்பித்தேன்‌. இதன்‌ மூலம்‌ பலருக்கும்‌ ‘பீக்காப்பூ’ குறித்து தெரிய வந்தது.வாடிக்கையாளர்கள்‌ என்னைத்‌ தேடி வர ஆரம்பித்தார்கள்‌...” என்றவர்‌ அதன்‌பிறகு குழந்தைகளுக்கான பர்னிச்சர்களும்‌ செய்ய ஆரம்பித்துள்ளார்‌.

“குழந்தைகளின்‌ அறைகளைப்‌ பொறுத்தவரை, அவை மிகவும்‌ பாதுகாப்பாக இருக்க வேண்டும்‌. குறிப்பாக அங்குள்ள மேசைகள்‌ மற்றும்‌ கட்டில்கள்‌. அதற்காக கொண்டு வரப்‌பட்டதுதான்‌ எங்களின்‌ ‘பீக்காப்பூ இன்டீரியர்ஸ்‌’. இதனை 2009ம்‌ ஆண்டு துவங்கினோம்‌. குழந்தைகள்‌ பெரியவர்கள்‌போல்‌ இருக்க மாட்டார்கள்‌. வீடாக இருந்தாலும்‌ அங்கும்‌ இங்கும்‌ ஓடுவார்கள்‌. குறிப்பாக அவர்கள்‌ அறையில்‌ உள்ள கட்டிலில்‌ ஏறிக் குதிப்பார்‌கள்‌. அந்தச் சமயம்‌ கட்டிலின்‌ முனை கூராக இருந்தால்‌ அடிபட வாய்ப்புள்ளது.

அதனை மனதில்‌ கொண்டு குழந்தைகளுக்காகவே பிரத்யேகமாக பர்னிச்சர்களை வடிவமைக்க ஆரம்பித்தேன்‌. இதன்‌மூலம்‌ அவர்கள்‌ கட்டிலில்‌ குதிக்கும்‌போது கீழே விழுந்தால்‌ அடிபடாது. அதே சமயம்‌ அவர்கள்‌ பயன்படுத்தும்‌ மேசைகளும்‌ மிகவும்‌ ஃப்ரண்ட்லியாக இருக்க வேண்டும்‌ என்பதில்‌ கவனமாக இருந்தேன்‌. 

அவர்கள்‌ அதனை நீண்ட காலம்‌ பயன்படுத்‌தும்‌ வகையில்‌தான்‌ அமைத்திருக்கிறோம். மேலும்‌ இவை அனைத்தும்‌ யூசர்‌ ஃப்ரண்ட்லி என்பதால்‌, அவர்களுக்கு பெரிய அளவில்‌ பாதிப்பு ஏற்படாது. இதற்கிடையில்‌ எங்களின்‌ ‘பீக்‌காப்பூ பேட்டர்ன்’சில்‌ குழந்தைகளுக்கான பரிசுப் பொருட்களான ஹாண்ட்கிராஃப்ட்‌ பொம்மைகளை அறிமுகம்‌ செய்தோம்‌.

குழந்தைகள் தங்கள் நண்பர்களின்‌ பிறந்த நாளுக்கு பரிசளிக்கலாம் அல்லது பெற்றோர்கள்‌ தங்கள் குழந்தைகளுக்கு இவற்றை பரிசளிக்கலாம்‌...” என்றவருக்கு கோவிட்டின்‌ இரண்டு ஆண்டு காலம்‌ அவரின்‌ தொழிலில்‌ பெரிய அளவில்‌ மாற்றத்தினை ஏற்படுத்திக்‌ கொடுத்துள்ளது.“கோவிட்‌ பலரின்‌ தொழிலுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியது.

 ஆனால்‌, அந்த இரண்டு வருடம்தான்‌ எங்களின்‌ தொழிலை அடுத்த கட்டத்திற்கு நாங்கள் எவ்வாறு கொண்டு போகலாம் என்று திட்டமிட்டோம். காரணம், என்‌னுடைய வேலையே ஒருவர்‌ வீட்டிற்குச் சென்று அங்குள்ள குழந்தைகளின்‌ அறையினைப்‌ பார்த்து அதனை எவ்வாறு வடிவமைக்கலாம்‌ என்று யோசிப்‌பதுதான்‌.

ஆனால்‌, கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகள்‌ வெளியே யார்‌ வீட்டிற்கும்‌ செல்லமுடியாத நிலை. பிசினசும் இல்லை என்பதால், தொழிலை மேம்படுத்த அக்காலத்தைப் பயன்படுத்திக் கொண்டோம். பலருக்கு ‘பீக்காப்பூ’ என்றால்‌ என்ன என்று தெரியும்‌. அதே சமயம்‌ அவர்‌களுக்கு நாங்கள் என்ன கொடுக்கிறோம்‌ என்ற குழப்பம்‌ இருந்தது. 

எங்களிடம் குழந்தைகளுக்கான உடைகள்‌, தலையணைகள்‌, பரிசு மற்றும்‌ விளையாட்டுப் பொருட்கள்‌, அவர்களின்‌ அறைகளை அழகுபடுத்தக்‌கூடிய பொருட்கள்‌ என அனைத்தும்‌ கிடைக்‌கும்‌.ஆனால், அதை நாங்கள் தனிப்பட்ட பிராண்‌டாக அமைத்த பிறகுதான் வாடிக்கையாளர்களின்‌ தேவைக்கு ஏற்ப செயல்பட முடிகிறது.

எல்‌லாவற்றையும்‌விட எங்களின்‌ ஒவ்வொரு பிராண்டிற்கும்‌ தனிப்பட்ட அடையாளமும்‌ கிடைத்தது. அதைத் தொடர்ந்து ‘பூட்டிஃபுல்‌’ என்று   குழந்தைகளின்‌ உடைகளுக்கான தனிப்‌பட்ட பிராண்ட்‌ ஆரம்பிச்சோம்‌. சர்வதேசத் தரத்தில் 2 முதல்‌ 10 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான உடைகள்‌. அனைத்தும்‌ பருத்தி மற்றும்‌ லெனின்‌ என்பதால்‌ குழந்தைகளின்‌ மென்மையான சருமத்திற்கு மிகவும்‌ பாதுகாப்பானது. எல்லாவற்றையும்‌விட நம்முடைய அனைத்து சீசனுக்கும் ஏற்ப இவர்களின்‌ உடைகளை வடிவமைத்திருக்கிறேன்‌...” என்றவர்‌ ‘பீக்காப்பூ’ ஆரம்பித்ததற்கான காரணத்தை விவரித்தார்‌.

“முன்பே சொன்னபடி என்னுடைய குழந்தைகள்தான்‌ எனக்கு இன்ஸ்பிரேஷன்‌. அவர்களின்‌ அறையை அலங்கரிக்கப் போய்த்தான் நான் இந்தத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தேன். நான்‌ இதற்காக தனிப்பட்ட பட்டப்‌படிப்பு எல்லாம்‌ படிக்கவில்லை என்றாலும்‌, ஒவ்வொரு துறை சார்ந்‌தும் டிப்ளமா படிப்பு படிச்சிருக்கேன்‌. 

மேலும்‌ கல்லூரியில்‌ ஆர்ட்‌துறை என்பதால் எனக்கு தையல்‌ மற்றும்‌ கைவினைப்‌ பொருட்கள்‌ செய்வதில்‌ தனிப்பட்ட ஈடுபாடு உண்டு.முதலில்‌ குழந்தைகளின்‌ அறைகளில்‌ உள்ள ஜன்னல்‌ திரைகளைத்தான்‌ நான்‌ வடிவமைத்து வந்தேன். அந்த சமயத்தில்‌ குழந்தைகளுக்கு பிடிச்ச விஷயம்‌ என்ன என்று தெரிந்து கொள்வேன்‌. அதற்கு ஏற்ப எம்பிராய்டரி அல்லது மோடிவ்ஸ்‌கொண்டு திரைகளை அமைப்பேன்‌.

சில சமயம்‌ ஒருவருக்கு ஆண்‌, பெண்‌ என இரண்டு குழந்தைகள்‌ இருக்கும்‌. இருவரின்‌ விருப்பத்திற்கு ஏற்ப அந்த அறையை அமைக்க வேண்டும்‌. பொதுவாக பெண்‌ குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான சிந்தனை இருக்கும்னு பெற்றோர்கள்‌ நினைப்பாங்க. அப்படி கிடையாது. ஒரு பெண்‌ குழந்தைக்கு பார்பி பொம்மை பிடிக்கும்‌. அடுத்த குழந்தை டோராவின்‌ ரசிகையாக இருப்பாள்‌. என்‌னைப்‌ பொறுத்தவரை ஓர் அறை என்பது அவர்கள்‌ நீண்ட நாட்கள்‌ இருக்கக் கூடியது. அதனால்‌ அதில்‌ உள்ள பொருட்களும்‌ அவர்‌கள் நீண்ட நாட்கள்‌ பயன்படுத்தும்‌படி இருக்க வேண்டும்‌.

பார்பி பொம்மை பிடிக்கும்‌ என்பதால்‌, அறை முழுக்க எங்குதிரும்பினாலும்‌ பார்பி பொம்மையை வைக்கவேண்டும்‌ என்ற அவசியம்‌ இல்லை. காரணம்‌, அந்தக் குழந்தை வளர்ந்தபிறகு பார்பி பொம்மை மேல்‌ இருக்‌கும்‌ மோகம்‌ குறைந்திடும். வேறு கதாபாத்திரத்தை விரும்புவார்கள்‌. இப்படி அவர்‌களின்‌ விருப்பத்திற்கு ஏற்ப அவ்வப்போது அறையின்‌அமைப்பினை மாற்றிக்கொண்டே இருக்க முடியாது. அதனால்‌ ஒன்று ஜன்னல்‌ திரையில்‌ அவர்களுக்குப் பிடித்த கதாபாத்திரத்தினை இணைக்கலாம்‌. அல்லது கட்டில்‌ தலையணையில்‌ பார்பி பொம்மையை எம்‌பிராய்டரி செய்யலாம்‌.

எனவே முதலில்‌ அவர்களின்‌ அறையினை பார்ப்பேன்‌. அதன்‌பிறகு அதில்‌ என்ன மாற்றம்‌ செய்யலாம்‌ என்று பெற்றோர்களுடன்‌ ஆலோசனை செய்வேன்‌. பிறகு அதற்கு ஏற்ப ஜன்னல்‌ திரை, சுவர்‌ வண்ணம்‌, வால் பேப்‌பர்‌, படிக்கும்‌ மேசை போன்றவற்றை மாற்றுவேன். இதுபோன்ற சின்னச்‌ சின்ன மாற்றங்கள்‌ செய்தாலே அவர்கள்‌ அறை புதிதாக மாறிடும்‌. என்னைப்‌ பொறுத்தவரை சிம்பிளாக அமைத்தாலே பார்க்க அழகாக இருக்கும்‌...” என்றவர்‌ குழந்தைகளின்‌ அறையினை வடிவமைப்பதற்காகவே பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார்‌.

“குழந்தைகள்‌ அறை மட்டுமில்லை, என்னைப்‌ பொறுத்தவரை ஒருவரின்‌ வீடு நல்ல காற்றோட்டமாகவும்‌ அதே சமயம்‌ வெளிச்சமாகவும்‌ இருப்பது அவசியம்‌. அதே போல்‌ சில வண்ணங்கள்‌ அவர்கள்‌ அறைக்‌கும்‌ பாசிடிவ்‌ எனர்ஜியினை கொடுக்கும்‌. எல்லாவற்றையும்‌விட குழந்தைகள்‌ அறை என்பதால்‌ மிகவும்‌ கவனமாக நாம்‌ பார்த்துச் செய்ய வேண்டும்‌. குறிப்பாக என்னுடைய டிசைன்‌ அனைத்தும்‌ ஆண்‌, பெண்‌ குழந்தைகள்‌ இருவரும்‌ பயன்படுத்தக்கூடிய நியூட்ரல்‌டிசைனாக இருக்கும்‌.

ஆன்லைன்‌ மட்டுமில்லாமல்‌ நேரடியாகவும் ஆலோசனை அளித்து வருகிறோம். சென்னையில்‌ இயங்கி வந்தாலும்‌ பான்‌ இந்தியா மற்றும்‌ சர்வதேச அளவில்‌ கொண்டு போக வேண்டும்‌ என்ற எண்ணம் ‌உள்ளது. சென்னையைத் தொடர்ந்து கொச்சி, ஹைதராபாத்‌, பெங்களூரு போன்ற இடங்களிலும்‌ எங்களின்‌ ‘பீக்காப்பூ பேட்டர்ன்’ஸினை அமைக்க வேண்டும்‌ என்ற திட்டம்‌ உள்ளது” கண்களைச் சிமிட்டியபடி கனவுடன் புன்னகைக்கிறார் கரிமா அகர்வால்‌.  

ப்ரியா