தொகுதி மறுசீரமைப்பு...வஞ்சிக்கப்படும் தமிழகம்..!
கடந்த மாதம், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்துக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் நிதி அளிக்கப்படும் என்றார் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது மும்மொழிக் கொள்கையை வலியுறுத்துகிறது என்பதாலும், இந்தியைத் திணிக்கும் முயற்சி என்பதாலும் கடுமையாகச் சாடியிருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இப்போது தொகுதி மறுசீரமைப்பு மூலம் எட்டு எம்பி தொகுதிகளைக் குறைக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து கடந்த வாரம் அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்குமேல் ஒரு கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. இது குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.  ஒன்றிய அரசு 2026ம் ஆண்டு மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்யப் போகிறது. இது மக்கள்தொகையைக் கணக்கிட்டுதான் செய்யப்படும். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது இந்தியாவின் மிக முக்கியமான இலக்கு. அந்த இலக்கில் நம்முடைய தமிழ்நாடு வெற்றி பெற்றிருக்கிறது.  பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலம் நாம் இதைச் சாதித்திருக்கிறோம்.
ஆனால், இப்போது மக்கள்தொகை குறைவாக இருக்கும் காரணத்தால் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால் தமிழ்நாட்டில் 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதாவது இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்கமாட்டார்கள். 31 எம்.பி.க்கள்தான் இருப்பார்கள். இன்னொரு முறையில் கணக்கிட்டுப் பார்த்தால் நாட்டின் ஒட்டு மொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தி அதற்கேற்ப பிரித்தாலும் நமக்கு இழப்புதான். நமக்கான பிரதி நிதித்துவம் குறைந்துவிடும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் கிடைக்கும். இதனால் தமிழ்நாட்டினுடைய குரல் நசுக்கப்படுகிறது. இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பற்றிய கவலை மட்டுமல்ல, நம் மாநிலத்தின் உரிமை சார்ந்தது...’ என்றுள்ளார்.
இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘தொகுதி மறுசீரமைப்பில் தென்மாநிலங்களுக்கு அநீதி இழைக்கப்படாது. தமிழகத்தில் ஒரு எம்.பி. தொகுதிகூட குறையாது’ என்கிறார்.
ஆனால், இதற்கு பதிலளிக்கும்விதமாக பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘அமித்ஷா சொல்வதை நம்பமுடியாது’ எனத் தெரிவித்திருக்கிறார். இதனால், தொகுதி மறுசீரமைப்பிற்கு தென்மாநிலங்களில் பலத்த ஆட்சேபணை எழுந்துள்ளது. அதென்ன தொகுதி மறுசீரமைப்பு?
மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தொகுதிகளை மறுவரையறை செய்யும் செயல்முறையே தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) எனப்படுகிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 82 மற்றும் 170 ஆகியவை தொகுதி மறுசீரமைப்பிற்கான வழிகாட்டுதல்களை வழங்குகின்றன.
அதாவது இதில் பிரிவு 82, ஒவ்வொரு தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் (பத்தாண்டுகளுக்கு ஒருமுறை) மக்களவைத் தொகுதிகளின் எல்லைகளையும், எண்ணிக்கையையும் மறுவரையறை செய்வதற்கு நாடாளுமன்றம் ஒரு தொகுதி மறுசீரமைப்பு சட்டத்தை (Delimitation act) நிறைவேற்ற வேண்டும் என்கிறது. பிரிவு 170, மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளையும், எண்ணிக்கையையும் மக்கள்தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்ய வலியுறுத்துகிறது. தொகுதி மறுசீரமைப்புச் சட்டப்படி தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் (Delimitation Commission) அமைக்கப்படுகிறது. அப்படியாக இந்தியாவில் நான்குமுறை தொகுதி மறுசீரமைப்பு ஆணையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1951ம் ஆண்டு முதல் 1952 வரை நடத்தப்பட்டது. பிறகு 1952 ஆண்டு இந்த ஆணையம் முதல்முறையாக அமைக்கப்பட்டது. முதல் தேர்தலின்போது 489 மக்களவைத் தொகுதிகள் இருந்தன.இந்நிலையில் 1951ல் மேற்கொண்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்தத் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 494 ஆக அதிகரிக்க பரிந்துரைத்தது.
பின்னர், 1963ல் இந்த ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது, 1961ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகளை 522 ஆக அதிகரித்தது. தொடர்ந்து 1973ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, 1971ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகளை 543 ஆக அதிகரித்தது.இதேபோல் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. மக்களவைத் தொகுதிகளைப் பொறுத்தவரை இன்றுவரை 543 ஆக உள்ளன.
1981ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. காரணம், 1975ம் ஆண்டு பிரதமர் இந்திரா காந்தி அவசரநிலை யை பிரகடனம் செய்தார். அப்போது குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தையும் தீவிரப்படுத்தினார்.
இதனை சிறப்பாகக் கையாளும் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அரசியலமைப்புச் சட்டத்தில் 42வது திருத்தத்தைக் கொண்டு வந்தார். இதன்படி மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு எந்த தொகுதி மறுசீரமைப்பும் செய்யக்கூடாது.
இந்தக் காலவரையறை 2001ல் முடிவுக்கு வந்தது.
2002ல் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த வாஜ்பாய், தென்மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக அரசியலமைப்புச் சட்டத்தில் 84வது திருத்தத்தின் மூலம் இன்னும் 25 ஆண்டுகள் தள்ளி வைத்தார்.அதனால், இந்த ஆணையம் தொகுதிகளை மறுவரையறை செய்தாலும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கைகளில் எந்த மாற்றமும் செய்யவில்லை.
இந்நிலையில் 2026ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும். இதற்கு ஏற்பதான் கடந்த 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘எங்கள்முன் தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்பு எனும் இரண்டு பெரும் வேலைகள் உள்ளன’ எனத் தெரிவித்தார்.
ஆனால், இதற்குமுன் 2023ம் ஆண்டு புதிய நாடாளுமன்றக் கட்டடம் திறக்கப்படும்போதே தொகுதி மறுசீரமைப்பு குறித்து கருத்துகள் வந்தன. ஏனெனில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் மக்களவை உறுப்பினர்களுக்கான இருக்கைகள் 888 ஆகவும், மாநிலங்களவை உறுப்பினர்களின் இருக்கைகள் 384 ஆகவும் அமைக்கப்பட்டிருந்ததுதான்.
அப்போது பேசிய பிரதமர் மோடியும், ‘‘புதிய நாடாளுமன்றம் காலத்தின் தேவை. வரும் காலங்களில் எம்.பிக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை நாம் பார்க்கவிருக்கிறோம்’’ எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில்தான் ஒன்றிய அரசு தொகுதி மறுசீரமைப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. இதைத்தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆகியோர் அநீதி எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்த அநீதியைத் தவிர்க்க அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் சித்தராமையா.
அவர், ‘‘கடந்த 50 ஆண்டுகளில் தென்மாநிலங்கள் பயனுள்ள நடவடிக்கைகள் மூலம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தியது மட்டுமில்லாமல் வளர்ச்சிப் பாதையிலும் முன்னேறியுள்ளன. ஆனால், உத்தரப்பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் போன்ற வடமாநிலங்கள் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதில் முற்றிலும் தோல்வியடைந்தது மட்டுமில்லாமல் வளர்ச்சிப் பாதையிலும் தள்ளாடுகின்றன.
எனவே 2026ல் நடத்தப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் இருந்து பெறப்படும் மக்கள்தொகை விகிதத்தின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால் மக்கள் தொகை உயர்வை கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். வடமாநிலங்களின் தொகுதிகள் அதிகரிக்கும். கர்நாடக மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 28ல் இருந்து 26 ஆகவும், ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள 42 இடங்கள் 34 ஆகவும், கேரளாவிலுள்ள 20 இடங்கள் 12 ஆகவும், தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்கள் 31 ஆகவும் குறையும். அதேநேரம், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 இடங்கள் 91 ஆகவும், பீகாரில் உள்ள 40 இடங்கள் 50 ஆகவும், மத்தியப் பிரதேசத்தின் எண்ணிக்கை 29ல் இருந்து 33 ஆகவும் உயரும். இந்த அநீதியைப் பொறுத்துக் கொள்ளமுடியாது.
அதனால் 1971ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் மக்கள்தொகை அளவுகோலைக் கைவிட்டு, தற்போதுள்ள மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை விகிதாசாரப்படி அதிகரிக்க வேண்டும்.ஆனால், மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, தொகுதி மறுசீரமைப்பில் காட்டும் ஆர்வத்தைப் பார்த்தால் தங்கள் கட்சியின் கொடியை எதிர்த்து நிற்கும் தென்மாநில மக்களைத் தண்டிக்கும் தீய எண்ணம் இருப்பதாகத் தெரிகிறது.
வரிப்பகிர்வு, ஜிஎஸ்டியில் அநீதி, இயற்கைப் பேரிடர் நிவாரணம், அரசுக்கு முள்ளாகத் திகழும் புதிய கல்விக்கொள்கை, யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் என ஒன்றிய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் தீய நோக்கம் கோண்டது.
இதற்கு எதிராக தேசிய அளவில் குரல் எழுப்பும் தென்மாநிலங்களின் குரலை மேலும் வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கையாகவே இப்போது தொகுதி மறுசீரமைப்பு என்ற புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது’’ எனக் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமல்ல. அமித்ஷா சொல்வதுபோல தென்மாநிலங்களின் தொகுதிகள் குறையாது என்றே வைத்துக்கொண்டாலும், வடமாநிலங்களில் மக்கள்தொகைக்கு ஏற்ப தொகுதிகளை அதிகரித்தால் அதுவும் அநீதிதான். ஏனெனில், வடமாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும். தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்.
இதனால், எந்த விஷயத்திற்கும் தென்மாநிலங்களால் குரல் எழுப்பமுடியாமல் போகும். இதனாலேயே தமிழகம் உட்பட தென்மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக பலத்த குரல் எழுப்பத் தொடங்கியுள்ளன.
பேராச்சி கண்ணன்
|