வாட்டர் கேன் பிசினஸ் பாலிடிக்ஸ்தான் படம்!
‘‘‘நீரின்றி அமையாது உலகு’ என்று சொல்வார்கள். அந்த முதுமொழியை மையமா வெச்சு எடுத்துள்ள படம் ‘வர்ணன்’. பொதுவா வெயில் காலம் என்றாலே தண்ணீர் ஞாபகத்துக்கு வரும். இந்தச் சூழ்நிலையில் தண்ணீரை மையமா வைச்சு வெளிவரவுள்ள இந்தப் படம் மக்கள் மனசுல இடம் பிடிக்கும்...’’ நம்பிக்கையுடன் பேசுகிறார் ஜெயவேல் முருகன். இவர் கே.பாலசந்தரிடம் சினிமா கற்றவர்.ஆக்ஷன் படமா இது?
 அப்படியும் சொல்லலாம். இப்போது உலகம் முழுவதும் தண்ணீர் பெரிய வியாபாரமாகியுள்ளது. தண்ணீர் டிமாண்ட் ஆகி அதிகமா தேவைப்படும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அப்படி தண்ணி கேன் பிசினஸ் பண்ணுபவர்களின் வாழ்வியலைச் சொல்லும் படம் இது.  ஆரம்பத்துல இருந்து சென்னையில் தண்ணி கேன் பிசினஸ் பண்ணும் குரூப்... தென்மாவட்டத்திலிருந்து வந்து தண்ணி கேன் பிசனஸ் செய்யும் இன்னொரு குரூப். இந்த இரண்டு குரூப்புக்கு நடுவே நடக்கும் வாழ்வியல் சார்ந்த பிரச்னைகள், தண்ணீர் வியாபாரத்தில் உள்ள பிரச்னைகளை முடிஞ்சளவுக்கு கமர்ஷியலா சொல்லியிருக்கிறேன். ஐந்து பூதங்கள் எல்லோருக்கும் பொதுவானது என்பதுதான் படத்தோடமெசேஜ். அது வியாபாரமாக மாறும்போது அதன் பின்விளைவுகள் எப்படியிருக்கும் என்பது படத்தோட புரிதலாக இருக்கும்.
டிரைலர்ல சத்யராஜ் குரல் மட்டும்தான் கேட்குது..?
ஆமா. இதுல அவர் நடிக்கல. குரல் மட்டும்தான் கொடுத்துள்ளார். அவரிடமிருந்துதான் இந்தப் படத்தோட கதை ஆரம்பமாகும். தண்ணீர் எப்படி வியாபாரப் பொருளாக மாறியது என்பதை அவர் குரல் வழியாகச் சொல்லி கதையை ஆரம்பிச்சு வைப்பார்.தண்ணீர் உருவாக்கத்திலிருந்து அது எப்படி வியாபாரப் பொருளாக மாறியது என்பதுவரை அவர் சொல்லும் விஷயம் படத்துக்கு அழுத்தம் தரும் வகையில் இருக்கும்.
யாரெல்லாம் நடிக்கிறார்கள்?
நடிகர் ஜெயப்பிரகாஷ் சார் மகன் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் மெயின் லீட் பண்ணியுள்ளார். ‘ஈசன்’, ‘கருடன்’ என சில படங்கள் பண்ணியவர். இதில் முழுமையான ஹீரோவாகப் பார்க்கலாம். அவருக்கு ஜோடியா ‘அப்பா’ கேப்ரில்லா நடிக்கிறார்.சங்கர்நாக் விஜயன் வில்லனாக வர்றார். இவர் இயக்குநர் விஷ்ணுவர்தன் தம்பி. வட சென்னை இளைஞரின் உடல் மொழியை பிரமாதமா உள்வாங்கி நடித்தார். விஜே மகேஸ்வரி வில்லியா வர்றார்.
இவர்களுடன் ராதாரவி சார், சரண்ராஜ் சார் இருக்கிறார்கள். இருவரும் இயக்குநர்களுக்கு அதிகமா ரெஸ்பான்ஸ் தருபவர்கள். ராதரவி சார் ஏராளமான படங்கள் பண்ணியிருந்தாலும் கதைக்கு தகுந்த மாதிரி தன்னை மாத்திக்கிட்டு நடிப்பவர்.
இதுல தண்ணி கேன் பிசினஸ் பண்ணும் வியாபாரிகளை சந்திச்சு இன்புட்ஸ் எடுத்தார். இப்போதுள்ள இளைஞர்கள் அவரிடம் கத்துக்க வேண்டிய பாடம் இது.சரண்ராஜ் சாரும் அதே மாதிரிதான். இதுல தனித்துவமான மேனரிசம் பண்ணியிருப்பார். ‘பாட்ஷா’ மாதிரி அது பேசப்படும். மியூசிக் யார்?
‘போபோ’ சசி. ‘குளிர் 100’ படத்துல அவருடைய இசை பிரமாதமா இருக்கும். இந்தக் கதைக்கு அவர்தான் பண்ணணும் என்ற முடிவில் இருந்தேன். ஆக்ஷன் கதைக்கு பின்னணி இசை
முக்கியம். அதைப் புரிஞ்சு பண்ணினார். கேங்ஸ்டர் பாடல், காதல் பாடல் என பாடல்களையும் வெரைட்டியா கொடுத்தார்.
ஸ்ரீராம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் மாணவர். விஷுவல்ஸ் மிரட்டலா வந்திருக்கு. படத்துல சிங்கிள் ஷாட் நிறைய இருக்கும். அது பேசப்படும். எடிட்டிங் முத்தையா. நான் ஷூட் பண்ணியதை மிக அழகா கோர்வையா பண்ணிக்கொடுத்தார். க்ளைமாக்ஸ் காட்சியை 120 அடி உயரம் உள்ள ஆயில் டேங் மேல ஷூட் பண்ணினோம். சிஜி இல்லாம பண்ணியது. அங்கு யாரும் ஷூட் பண்ணியதில்லை. ரிஸ்க்கான இடம். பகலில் கொஞ்ச நேரம் இருந்தாலே தீப்பிடிக்க ஆரம்பிச்சுடும். ஃபைட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன் பெரிய ரிஸ்க் எடுத்து பண்ணினார். தயாரிப்பு கார்த்திக் ஸ்ரீதர்.
கே.பாலசந்தரிடம் கற்ற பாடம் என்ன?
எனக்கு கே.பி.சார் படங்கள் பிடிக்கும். ‘தண்ணீர் தண்ணீர்’ என்னுடைய ஃபேவரைட். அந்த இன்ஸ்பயர்லதான் சினிமாவுக்கு வந்தேன். நான் இயக்கிய குறும்படத்துக்கு சர்வதேச விருது கிடைத்தது. அந்த குறும்படத்தை சாரிடம் காட்டும்போது அவரிடமே வேலை செய்யும் வாய்ப்பு கிடைச்சது.‘குசேலன்’ தொடங்கி சாரிடம் இருந்தேன். கே.பி. சார் படங்கள் என்றால் வாழ்வியல் சார்ந்து இருக்கும். என்னுடைய படங்களிலும் அதைக் கொண்டு வரணும்னு நினைக்கிறேன்.l
எஸ்.ராஜா
|