சிறுகதை-வாட்ச்
அதிகாலை மஞ்சள் ஒளி மென்மையாக தன் கதிர்களை மெல்ல மெல்ல பூமியை எட்டிப்பார்க்க சமையலறையில் உணவுகளைத் தயாரித்து அதனை மிக வேகமாக கேரியரில் அடுக்கிக் கொண்டிருந்தாள் பொறியியல் பட்டதாரியான கயல்விழி. திடீரென்று ஒரு சத்தம். வேறொன்றுமில்லை. அவள் தங்கை கண்மணி தூக்கத்தில் அலறினாள்.‘‘ஒண்ணுமில்ல...’’ தட்டிக் கொடுத்து அவளை உறங்க வைத்துவிட்டு தாத்தாவிடம் வந்தாள்.
 ‘‘உங்களுக்கும் கண்மணிக்கும் டிபன் ரெடி பண்ணி டேபிளில் எடுத்து வச்சிருக்கேன். ரெண்டு பேரும் சாப்பிடுங்க. இன்னைக்கு அம்மாவோட நினைவு நாள். நான் கோயிலுக்குப் போயிட்டு அன்னதானம் பண்ணிட்டு வரேன்...’’‘‘பத்திரமா போயிட்டு வா கயல்... கண்மணியை பார்த்துக்கறேன்...’’தாத்தாவிடம் புன்னகைத்தவள் உணவு கேரியருடன் கோவிலுக்குப் புறப்பட்டாள். இரண்டு பஸ் ஏறி இறங்க வேண்டும். பேருந்து வந்தது. நிம்மதிப் பெருமூச்சுடன் அவள் உட்கார ஒரு ஜன்னலோர இருக்கை காத்திருந்தது. உட்கார்ந்து இளைப்பாறத் தொடங்கினாள்.
உடல் நலக் குறைவால் காலமான தாயைக் குறித்த நினைவு வந்தது. கூடவே அவளது குழந்தைப் பருவமும். அம்மா வீட்டுவேலை செய்துதான் குடும்பத்தை பார்த்துக் கொண்டாள். அவள் வேலைக்கு செல்லும் போதெல்லாம் குழந்தைகளை தன் மாமனாரிடம் விட்டுச்செல்வது வழக்கம். அவர் தைரியசாலி. தன் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், கடுமையான சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் கதைகளாக தன் பேத்திகளிடம் சொல்வார்.
கண்கள் விரிய கயல் அதைக் கேட்பாள்.அவள் ஐந்தாம் வகுப்பில் இருந்தபோது சில கசப்பான நிகழ்வுகளைக் கடந்தாள். அந்த அனுபவம் அவளுக்குத் தெளிவைக் கொடுத்தது. தன் தங்கை கண்மணியை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்தாள். ‘‘நீ ஸ்கூலுக்கு போகும் போதும் வரும்போதும் கேர் ஃபுல்லா இருக்கணும். உன்னை யாரும் தொட்டுப் பேசாம பாத்துக்கணும். நீயும் யாரையும் தொட்டுப் பேசக்கூடாது.
உன்னை யாராவது அப்படி தவறா தொட்டா என்கிட்ட கண்டிப்பா சொல்லிடணும். ஓகே... பயப்படக்கூடாது...’’ ‘உனக்கு வேற வேலையே இல்ல... எப்ப பார்த்தாலும் ஏதாவது அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருப்ப...’ மனதுக்குள் கண்மணி முணுமுணுப்பாள். விளை யாட்டுப் பெண். அப்படியே பள்ளிப் படிப்பை முடித்து கல்லூரியில் சேர்ந்தாள்.
கண்மணியைச் சுற்றி பல நண்பர்கள் எப்போதும் இருப்பார்கள். கண்மணி அழகானவள். அனைவரிடமும் அன்பாகப் பழகுவாள். எளிதில் யாரையும் நம்பிவிடுவாள்.
ஒரு நாள் அவளுடைய நண்பன் அருண் அவளிடம் தன் காதலைத் தெரிவித்தான். “இல்ல அருண்... எனக்கு அந்த மாதிரி எந்த ஐடியாவும் இல்லை.
முதல்ல படிக்கணும். என் ஃபேமிலியை பார்த்துக்கணும். என்னை டிஸ்டர்ப் பண்ணாத...” அருண் கேட்கவில்லை. திரும்பத் திரும்ப வற்புறுத்தி கண்மணியை சம்மதிக்க வைக்க முயற்சி செய்தான்.இது பிடிக்காத கண்மணி, அவனை விட்டு விலகினாள்.
அருணின் நண்பர்களோ அவனைக் கேலி செய்து தூண்டி விட்டனர். மறுநாள் கண்மணி கல்லூரிக்கு வரும் பொழுது அருண் தன் நண்பர்களிடம் “இன்னைக்கு நான் யாருன்னு அவளுக்கு காட்டுறேன்...” என்றான்.“என்னடா செய்வே?” நிமிர்ந்து கேட்டாள் கண்மணி.உடனே அருண் அவளது துப்பட்டாவை இழுத்து விட்டான்.
இதை எதிர்பார்க்காத கண்மணி கோபத்தில் அவனை அறைந்தாள். நண்பர்களின் முன் அடிவாங்கியதை அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அந்த அவமானம் அவனை மிகவும் பாதித்தது. கண்மணிக்கு பயமும் பதற்றமும் அதிகரிக்க தன் அக்காவிடம் சென்று ‘‘நான் இனிமே கல்லூரிக்கு போகமாட்டேன்...’’ என்றாள்.
அவளது தோழி மூலம் நடந்ததை அறிந்த கயல்விழி, சமாதானப்படுத்தி தங்கையைக் கல்லூரிக்கு அனுப்பி விட்டு வேலைக்குச் சென்றாள். அக்கா கொடுத்த தன்னம்பிக்கையான பேச்சினையும் தைரியத்தை வளர்க்கக்கூடிய சொற்களையும் மனதில் அசைபோட்டபடி காலேஜை நோக்கிச் சென்ற கண்மணியை நான்கு சக்கர வாகனம் ஒன்று வழிமறித்தது.
அவள் சுதாரிப்பதற்குள் அந்த வாகனத்தில் ஏற்றப்பட்டாள். என்ன நடக்கிறது என்று அறியும் முன்பே அவளது பெண்மை சூறையாடப்பட்டது.சாலையோரத்தில் வீசப்பட்டவள், தட்டுத் தடுமாறி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். அறையில் முடங்கினாள்.
வேலையை விட்டு வந்த கயல்விழி, அழுதுகொண்டிருக்கும் தங்கையைப் பார்த்தாள். என்ன நடந்திருக்கும் என்று புரிந்தது. நிலை குலைந்து போனாள்.அருண்மீது சந்தேகம் எழுந்தது. ஆனால், கல்லூரியில் தன் நண்பர்களுடன் இயல்பாக சிரித்துச் சிரித்து பேசிக் கொண்டிருந்தான். கொடூரத்தை செய்தவன் இப்படியா இயல்பாக இருப்பான்?
கயல்விழி அவனை தனியே அழைத்து கண்மணிக்கு நடந்ததைச் சொன்னாள். துடித்துப்போனான்.
‘‘கண்மணி வந்ததும் சாரி கேட்க நினைச்சேன்... நீங்க என்னடானா இப்படி சொல்றீங்க..?’’
‘‘அவ வீட்லதான் இருக்கா. எனக்கு என்ன செய்யறதுன்னு தெரியல அருண்...” உதடு துடிக்க கயல்விழி சொன்னாலும், கண்மணியை தேற்ற வேண்டுமே... மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றாள். உடல் குலுங்கியதும் கயல்விழி நடப்புக்கு வந்தாள். பிரேக் பிடித்த ஓட்டுநர், குறுக்கே வந்தவனை திட்டிவிட்டு பேருந்தை இயக்கினார்.
சட்டென பஸ்ஸில் சலசலப்பு. பேருந்தில் வயதானவர்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ - மாணவிகள்... என அனைவரும் இருந்தனர். அவர்களில் ஒரு மாணவியின் முகத்தில் பதற்றம் தெரிந்தது.யோசனையுடன் அவளைச் சுற்றி கயல்விழி பார்த்தாள். நாற்பது வயது மதிக்கத்தக்க ஓர் ஆண், அந்த மாணவியின் அருகில் நின்றிருந்தான்.
கயல்விழிக்கு புரிந்தது. தன் கைபேசியை எடுத்தாள். அடுத்த பேருந்து நிறுத்தத்தில், மகளிர் காவலர்கள் பஸ்ஸில் ஏறினர்.‘‘அந்த மஞ்ச சட்டை ஆள்தான்...’’ எழுந்து கயல்விழி குரல் கொடுத்தாள்.பயணிகள் தங்களுக்குள் பேசிக்கொள்ள... தரதரவென அந்த மஞ்சள் சட்டைக்காரனை காவலர்கள் இழுத்துச் சென்றனர்.
கண்கலங்க அந்த மாணவி, கயல்விழியை பார்த்தாள்.கண்களால் அவளுக்கு ஆறுதலும் தைரியமும் சொல்லிவிட்டு தன் நிறுத்தத்தில் இறங்கி கோயிலுக்கு சென்றாள் கயல்விழி. “தாத்தா... கண்மணி என்ன பண்றா? சாப்பிட்டாளா? ஏதாவது தொந்தரவு கொடுத்தாளா..?’’ கேட்டபடியே வீட்டுக்குள் நுழைந்தாள் கயல். “ஏன் மா இப்படி கேட்கிற... அவளே ஏதோ மனக்குழப்பத்துல புரியாமல் நடந்துக்கிறா. அதைப் போய் ஏமா தொந்தரவுன்னு சொல்லணும்? கொஞ்ச நாள்ல எல்லாம் சரியா போயிடும்...”
தாத்தாவுக்கு தலையசைத்துவிட்டு கண்மணியை பார்க்கச் சென்றாள். மெல்ல மெல்ல இவளை மீட்க வேண்டும்.
அதேநேரம் கண்மணிக்கு நிகழ்ந்தது, தான் அறிய... தன் கண் முன்னால் இன்னொரு பெண்ணுக்கு நிகழக் கூடாது.என்ன செய்யலாம்..? யோசித்த கயலுக்கு ஆதித்யாவின் நினைவு வந்தது. கல்லூரி நண்பன். தலைமைப் பொறியாளராக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறான். ‘‘ஆதி... ஒரு சந்தேகம்...’’ மறுநாளே அவனை சந்தித்து கேட்டாள். ‘‘என்ன சந்தேகம் கயல்?’’
‘‘இப்போ நிறைய கொலைகள், கொள்ளைகள், செக்ஸுவல் அப்யூஸ் அண்ட் அராஸ்மெண்ட்ஸ் நடக்குது இல்லையா..?’’
‘‘ஆமா...’’‘‘அதைத் தடுக்க... ஐ மீன் கட்டுப்படுத்த ஒரு யோசனை தோணுது...’’
ஆதித்யா அவளை ஆச்சர்யமாகப் பார்த்தான். ‘‘நம்ம என்ன பண்ண முடியும் கயல்? அதான் அதற்கான சட்டமே வந்திருக்கே...’’‘‘தெரியும் ஆதி... நான் சொல்றதைக் கேளு...’’‘‘சரி... சொல்லு...’’“இப்ப எல்லாருமே கையில் ஸ்மார்ட் வாட்ச் கட்டறாங்க இல்லையா?
அந்த ஸ்மார்ட் வாட்சில் Photoplethysmography technology பயன்படுத்திதான் அவர்களுடைய இரத்த அழுத்தத்தின் அளவை தெரிஞ்சுக்க முடியுது...’’‘‘ஆமா...’’‘‘அதேபோல ஒவ்வொருத்தரும் கட்டியிருக்கிற ஸ்மார்ட் வாட்சை அந்தந்த பகுதி சிசிடிவி சர்வே லென்ஸ் கேமரா கூட கனெக்ட் பண்ண சான்ஸ் இருக்கா..?’’ ‘‘...’’
‘‘ஏன்னா ஒரு பதற்றமான சூழ்நிலையில் ஏற்படுற இரத்த அழுத்தத்தினுடைய அளவு எல்லாமே நம்முடைய ஸ்மார்ட் வாட்சல தெரியுது. அது மட்டும் இல்லாம வாய்ஸ் ரெக்கார்டிங் இருக்கு. சோ ஆபத்துல சிக்கும்போது வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி அனுப்ப முடியுமே... போலீஸ் பூத்துல இருக்கும் காவலர்கள் உடனே ஆக்ஷன் எடுக்க வசதியா இருக்குமே... இப்படி செய்ய முடியுமா?’’ “கயல்... இது எல்லாம் வெச்சு நீ என்ன பண்ண போற? நீ எப்படி இதை எல்லாருக்கும் கொண்டு போய் சேர்க்க முடியும்? பிராக்டிகலா யோசி...’’
“ஆதி... இப்போதைக்கு எனக்கு தேவையானது இது பாசிபிளானு மட்டும்தான். ஒரு முறை இல்ல... பல முறை யோசிச்சுதான் நான் சொல்றேன். எனக்காக நீ ஒரு முறை ட்ரை பண்ணு. உனக்கு இதுல நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. எனக்கு ஒரே ஒரு வாட்ச் மட்டும் ரெடி பண்ணிக் கொடு. நான் அது எப்படி இருக்கு... நான் எதிர்பார்த்த மாதிரி இருக்கான்னு செக் பண்றேன். அதுக்கப்புறம் என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம்...”
“ஓகே... நான் ரெடி பண்ணித் தரேன்...” மூன்று நாட்கள் கழித்து ஆதித்யா அந்த வாட்ச்சை கொடுத்தான். கயலுக்கு ஆனந்தமாக இருந்தது. அதைப் பரிசோதிக்க தன் கையில் கட்டிக்கொண்டாள். அங்கிருந்த ஒரு பள்ளத்தில் விழுந்தாள். கையில் அணிந்திருந்த ஸ்மார்ட் வாட்சில் வாய்ஸ் ரெக்கார்டிங் செய்தாள். அருகில் இருந்த போலீஸ் பூத்தில் இருந்த காவலர், ‘ஏதோ சத்தம் கேட்கிறதே...’ என அங்கிருக்கும் சிசிடிவியை பார்த்தார்.ஒரு பகுதியில் மட்டும் சிவப்பு நிறம் ‘பளிச்’ என்று அடித்தது.
அது எந்த இடம் என்று கண்டறிந்து அங்கு சென்று பார்த்தார். பள்ளத்தில் கயல்விழி.“யாரும்மா நீ..? எப்படி விழுந்த..?’’ கேட்டபடியே அவளைக் காப்பாற்றினார். கயலுக்கு அளவில்லாத சந்தோஷம். தான் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. இதை அனைவருக்கும் பயன்படும்படி கொண்டு சேர்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டாள்.
உடனே ஆதித்யாவை கூப்பிட்டு நடந்தவற்றை கூறினாள்.
‘‘குட்... இனி என்ன செய்யலாம்..?’’‘‘என் கூட வா...’’அவனை அழைத்துக் கொண்டு கடிகாரம் தயாரிக்கும் பல தொழிற்சாலைகளுக்கு கயல் சென்றாள். துண்டுப் பிரசுரங்கள் மூலமும், வாட்ஸ்அப் செய்தி வழியாகவும் வாட்ச்... வாய்ஸ் ரிக்கார்டர்... சிசிடிவி... விஷயத்தைப் பகிர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினாள். இதைப்பற்றி தெரிந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் பலரும் இதனை ஆதரித்தனர்.
காவல்துறை அதிகாரிகளும் ‘காவலன் ஆப்’ செயலியை பற்றி பல விழிப்புணர்வுக் காணொலியை வெளியிட்டனர். அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்னவெல்லாம் செய்யலாம் என்பதையெல்லாம் மிக அழகாக எடுத்துரைத்தனர். இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் பரவலாக சுற்றித் திரிந்தது. பலரும் இந்த ஸ்மார்ட் வாட்ச் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
ஒளி இல்லாத பாதையில் வழி தெரியாத பேதை போல் நின்ற பெண்களுக்கு வளர்பிறை போல் வானில் ஒளி வீச வாழ்க்கை வழிகாட்ட துவங்கியது. இதைக் கண்ட கயல்விழியின் கனவு மெய்ப்பட்டது. வாட்ச் என்றால் கடிகாரம் மட்டுமல்ல கண்காணிப்பும்தான். சுற்றி நடப்பதை கண்காணிப்பது, ஆபத்து நேரத்தில் அச்சப்படாமல் சூழலை கண்காணித்து தப்பிப்பது.
மோகனா ராஜசேகர்
|