74 வயசு 72 லட்சம் வருமானம்!
‘‘யூடியூப் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துவருகிறார் ஒரு பாட்டி...’’ என்ற செய்தி பலரையும் ஆச்சர்யத்தில் உறையவைத்தது. அந்தப் பாட்டியின் பெயர் சுமன் தாம்னி. அவரது வயது 74. மகாராஷ்டிராவின் அகமத்நகரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சரோலா காசர் எனும் கிராமத்தில் பிறந்து, வளர்ந்தவர் சுமன்.  மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத சுமன், எப்படி யூடியூப்பில் சாதித்தார் என்பதற்குப் பின்னணியில் இருக்கிறார் அவருடைய பேரரான யாஷ் பதக். ஆறு வருடங்களுக்கு முன்பு பதினொன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார், யாஷ். ஒரு மாலை வேளையில் தனது பாட்டியிடம் பவ் பஜ்ஜி செய்து தரும்படி கேட்டிருக்கிறார். அத்துடன் யூடியூப்பில் பிரபலமான இரண்டு பவ் பஜ்ஜி ரெசிபி வீடியோக்களைப் பாட்டியிடம் காட்டியிருக்கிறார். அதுதான் பாட்டி பார்த்த முதல் யூடியூப் வீடியோ. அந்த வீடியோவைப் பார்த்த பிறகு, ‘‘இதைவிட சிறப்பாக பவ் பஜ்ஜியை என்னால் செய்ய முடியும்...’’ என்று சொல்லியதோடு, செய்தும் காட்டியிருக்கிறார் சுமன். பாட்டி செய்துதந்த பவ் பஜ்ஜி மிகவும் சுவையாக இருந்திருக்கிறது. யாஷ் மட்டுமல்லாமல், குடும்பமே பாட்டியின் கைவண்ணத்தைப் பாராட்டியது.
யாஷ் காட்டிய யூடியூப் வீடியோவில் இருந்த ரெசிபியில் நிறைய மாற்றங்களைச் செய்து பவ் பஜ்ஜியை செய்திருக்கிறார் பாட்டி.  இந்த விஷயம் யாஷின் மனதுக்குள் யூடியூப் சேனலை ஆரம்பிக்க வேண்டும் என்ற யோசனையைத் தூண்டியது. 2019ம் வருடத்தின் மார்ச் மாதம் ‘ஆப்லி ஆஜி’ என்ற யூடியூப் சேனலை ஆரம்பித்தார் யாஷ். ‘ஆப்லி ஆஜி’ என்றால் ‘நம்ம பாட்டி’ என்று அர்த்தம். சேனலுக்குத் தேவையான அனைத்துத் தொழில்நுட்ப உதவித்களையும் யாஷ்தான் செய்தார். 
மகாராஷ்டிராவின் பாரம்பரிய உணவுகளை வீட்டு முறைப்படி சமைப்பார் சுமன். அதை வீடியோவாக்கி யூடியூப் சேனலில் பகிர்வது யாஷின் வேலை. முதல் வீடியோவாக பாகற்காய் ரெசிபியைப் பதிவு செய்தனர். பாகற்காய் உணவு பார்வையாளர்களின் கவனிப்புக்குள்ளாகியது.
அதற்குப் பிறகு நிலக்கடலை சட்னி, பச்சை காய்கறிகள் ரெசிபி, மகாராஷ்டிராவின் பிரத்யேக இனிப்பு வகைகள் மற்றும் பாரம்பரிய உணவுகள் குறித்த சமையல் வீடியோக்களையும் பதிவு செய்தனர். சேனல் ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே 6 லட்சம் சப்ஸ்கிரைபர்களைத் தன்வசமாக்கிவிட்டார் சுமன். சில நாட்களில் தினமும் 4000 பேர் புதிதாக சப்ஸ்கிரைப் செய்தனர். ஒரே நாளில் சேனலில் இருந்த வீடியோக்கள் பத்து லட்சத்துக்கும் மேலான பார்வைகளை அள்ளியது. ஒரு சில மாதங்களில் பார்வைகளின் எண்ணிக்கை 80 லட்சத்தை
எட்டியது. ‘‘யூடியூப் சேனலைப் பற்றி யாஷ் சொன்னபோது, எனக்கு உற்சாகமாக இருந்தது. என் வாழ்க்கையில் அதுவரை வீடியோ கேமராவின் முன்பு நான் நின்றதில்லை.
ஆரம்பத்தில் கொஞ்சம் சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால், போகப் போக பழகிவிட்டது...’’ என்கிற சுமனுக்கு, சேனல் ஆரம்பித்த ஒரு வருடத்திலேயே யூடியூப் கிரியேட்டர் விருது கிடைத்தது. அத்துடன் அவர் மகாராஷ்டிரா முழுவதும் பிரபலமாகிவிட்டார்.
தவிர, பாட்டி ரெசிபியைப் பதிவு செய்யும்போது பேக்கிங் பவுடர், சாஸ் போன்ற பல ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்த வேண்டும். அதை பாட்டியால் சரியாக உச்சரிக்க முடியவில்லை. பேரன் யாஷ்தான் அந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில் சரியாக உச்சரிக்க பயிற்சி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டுமல்ல, ஒரு முறை பாட்டியின் சேனலை யாரோ சிலர் ஹாக் செய்து விட்டனர். அன்றைக்கு பாட்டியும், பேரனும் சாப்பிடவே இல்லை. சேனலில் வேறு ஏதோ வீடியோ ஓடியது. நான்கு நாட்களில் சேனலை பழைய நிலைக்குக் கொண்டு வந்தார் பேரன்.
‘‘எனக்கு யூடியூப்பைப் பற்றி ஏதும் தெரியாது. இப்படியெல்லாம் சமையல் குறிப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இன்று சேனலில் ரெசிபியை பகிரவில்லை என்றால் ஒரு மாதிரி கஷ்டமாக இருக்கிறது...’’ என்கிறார் சுமன்.
இவர் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திருக்கிறது. அவர்களுக்கு நேரடியாக மசாலாப் பொருட்களையும் விற்பனை செய்கிறார். தீபாவளி ரெசிபி, வேகமாக சமைக்கப்படும் உணவுகளின் ரெசிபி, பேக்கரி உணவுகள் ரெசிபி, கோடைக்கால உணவுகள் ரெசிபி, குளிர்பானங்கள் ரெசிபி, இனிப்பு வகைகள் ரெசிபி, விரைவாகத் தயாராகும் உணவுகளின் ரெசிபி என பாட்டியின் சேனலில் 816 வீடியோக்கள் இருக்கின்றன.
இதுவரை இந்த வீடியோக்கள் 286,496,120க்கும் அதிகமான பார்வைகளை அள்ளியிருக்கின்றன. பல வீடியோக்கள் பத்து லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைக் குவித்திருக்கின்றன. சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை 17.8 லட்சத்தை தாண்டி விட்டது.
த.சக்திவேல்
|