ஸ்டார் கிட்ஸ் ஸ்போர்ட்ஸ்!
சினிமா நடிகர்களின் வாரிசுகள் சினிமாவில்தான் இருக்க வேண்டுமா?
இப்படி யோசித்தார்களா என்று தெரியவில்லை. பல சினிமா பிரபலங்களின் வாரிசுகள் விளையாட்டுத்துறையில் மிகப்பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். அவர்கள் குறித்த ஷார்ட் ஸ்வீட் பயோ இதோ...
 கராத்தே பயிலும் அக்ஷய் குமார் மகன்
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் மகன் ஆரவ். நான்கு வயதிலிருந்து பயிற்சி எடுத்துக்கொள்ளும் ஆரவ், இன்று கராத்தே பிளாக் பெல்ட் வீரர். இதுகுறித்து சமூக வலைதளத்தில் அவ்வப்போது தனது மகனின் புகைப்படத்தை பகிர்ந்து ‘மை சன் டே’ என குறிப்பிட்டு அவர் கராத்தே போட்டிகளில் சாதிக்கும் பதிவுகளையும் அது குறித்து தனது பெருமையையும் பகிர்ந்து கொண்டே இருப்பார். சொந்தமாகவே கராத்தே அகாடமி வைத்திருக்கும் அக்ஷய் குமார், அவர் மகன் மற்றும் மகளுடன் இணைந்து பல கராத்தே மாணவர்களையும் உருவாக்கி வருகிறார்.
 கொரியன் தற்காப்புக் கலை பயிலும் ஷாருக்கான் மகன் மற்றும் மகள்
கொரியன் தற்காப்புக் கலையான டேக்வாண்டோ கலையை மிகத் தீவிரமாக கற்றுக் கொண்டவர் ஷாருக்கானின் மகன் ஆரியன் கான். பல தேசிய அளவிலான போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறார். இந்தப் பாதையிலேயே ஷாருக்கானின் மகளும் டேக்வாண்டோ பயிற்சியை முறையாகக் கற்று வருகிறார்.  ஆனால், சுஹானா கால்பந்து விளையாட்டில் வெறித்தனமான ஆர்வம் கொண்டவர். பள்ளி, கல்லூரி என பல மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் கலந்துகொண்டு சாதித்து வருகிறார்.தற்சமயம் அதிகம் பார்ட்டி கலாட்டா என புகைப்படங்கள் பகிர்ந்தாலும் அவருடைய கால்பந்து விருப்பம் மட்டும் இன்னும் குறைந்த பாடில்லை.
 அமீர் கானின் மகன் ஜுனைத்
தற்போது நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார் ஜுனைத். இவரின் ‘மஹாராஜ்’ திரைப்படம் தென்னிந்தியாவிலும் மிகப் பிரபலம். என்னதான் சினிமாவில் துணை இயக்குநர் மற்றும் நடிகர் என தன்னுடைய கரியரை மாற்றிக் கொண்டாலும் அடிப்படையில் ஜுனைத் கிரிக்கெட் மற்றும் கால்பந்து வீரர்.  மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளிலும் விளையாடி பரிசுகளை வென்றிருக்கிறார். சினிமாவில் காலடி எடுத்து வைத்த பின்பும் கூட அவருடைய விளையாட்டு மீதான ஆர்வம் இன்னும் குறையவில்லை. தன்னை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பது தன்னுடைய விளையாட்டுதான் என்கிறார். அஜித் மகன் ஆத்விக்
நடிகர் அஜித் மகன் ஆத்விக் கால்பந்து போட்டிகளில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார். மகனின் விளையாட்டுக்கு பக்க பலமாக நிற்கும் அஜித் மற்றும் ஷாலினி தம்பதியினர் ஆத்விக் பிறந்தநாள் கேக்குகளைக் கூட கால்பந்து வடிவத்தில்தான் ஆர்டர் கொடுக்கிறார்கள்.
மகனின் எதிர்காலம் கருதி விரைவில் கால்பந்து நாடான ஸ்பெயின் நாட்டில் அவர்கள் குடியேற இருப்பதாகவும் கூட செய்திகள் ஒரு பக்கம் சுற்றிக் கொண்டிருக்கின்றன. கொசுறு: கார் ரேஸ், பைக் ரேஸ் என அஜித் ஆர்வம் காட்டிவரும் நிலையில், ஷாலினி பேட்மின்டனில் பட்டையைக் கிளப்பி வருகிறார்.
இம்தியாஸ் அலி மகள் இடா
‘ஜப் வி மெட்’, ‘ராக் ஸ்டார்’, ‘ஹைவே’, ‘லவ் ஆஜ் கல்’, ‘தமாஷா’ துவங்கி சமீபத்தில் வெளியான ‘ஷி’ வெப் சீரிஸ் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய பாலிவுட் பிரபல இயக்குநர் இம்தியாஸ் அலியின் மகள் இடா கால்பந்து வீராங்கனை. சர்வதேச அளவிலான நிறைய போட்டிகளில் கலந்துகொண்டு ஜெயித்தவர். அப்பாவின் படங்கள் வெளியாகும்போது அப்படக் குழுவுக்கு இடையில் கால்பந்து போட்டிகள் நடத்தி படத்தை ப்ரொமோட் செய்வது இடாவின் வழக்கம்.
சைஃப் அலிகானின் மகன் இப்ராஹீம் கான்
23 வயதாகும் சைஃப் அலிகானின் மகன் இப்ராஹிம் கான், தற்போது படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார். இவர் நடிப்பில் இந்த வருடம் மட்டும் இரண்டு திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதில் ஒன்றில் ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் இரண்டாம் மகளான குஷி கபூர்தான் நாயகி.
சிறுவயதிலிருந்தே தீவிரமாக நீச்சல் பயிற்சி எடுத்து வரும் இப்ராஹீம் கான், தொடர்ந்து பல சர்வதேசப் போட்டிகளிலும் கலந்து வருகிறார். குறிப்பாக ஸ்விம்மிங் மாரத்தான் எனப்படும் ‘ஸ்விம்மத்தான்’ போட்டியில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இவருடைய ஸ்விம்மிங் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்காகவே இவருடைய இன்ஸ்டா பக்கத்தை பெண் ரசிகர்கள் மொய்க்கிறார்கள். ரித்தேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா மகன்கள்
2014ம் ஆண்டு பிறந்த ரியான், ஒன்றரை வயதாக இருக்கும்பொழுதே கால்பந்து மைதானத்தில் ஆர்வத்துடன் நிற்கும் புகைப்படம் வெளியாகி ட்ரெண்டானது. அதற்கேற்ப தற்போது 11 வயதைத் தொட்டிருக்கும் ரியான், நீச்சல் மற்றும் கால்பந்தில் அதீத ஆர்வம் காட்டி வருகிறார்.
ரித்தேஷ் - ஜெனிலியாவின் இரு மகன்களான ரியான் மற்றும் ரையல் ஆகியோர் விளையாட்டில் பல விருதுகளை வென்று வருகிறார்கள். பள்ளி அணியுடன் இணைந்து பல மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளிலும் கலந்து கொள்கிறார்கள். இது சார்ந்த பல வீடியோக்கள், புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து ரித்தேஷ் - ஜெனிலியா தம்பதியர் மகிழ்கிறார்கள். மாதவன் மகன் வேதாந்த் மாதவன்
ஒவ்வொரு முறையும் பதக்கத்துடன் நிற்கும் மகனின் புகைப்படத்தை பகிர்ந்து தனது அளவில்லா மகிழ்ச்சியை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார் நடிகர் மாதவன்.
அவர் மகனான வேதாந்த் மாதவன், இந்திய ஃப்ரீஸ்டைல் நீச்சல் வீரர்.
மலேசிய ஓபனில் 5 முறை தங்கப் பதக்கம் வென்றவர், டேனிஷ் ஓபனில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கம் வென்றவர். அதே போல் லாட்வியன் மற்றும் தாய்லாந்து ஓபனில் வெண்கலப் பதக்கம் வென்றவர். கூடிய விரைவில் ஒலிம்பிக்கில் கலந்து கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. தலைவாசல் விஜய்யின் மகள்கள்
நடிகர் தலைவாசல் விஜய்யின் இரண்டு மகள்களும் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய அளவில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்கள். தலைவாசல் விஜய்யின் மூத்த மகள் ஜெயவீணா, நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பல பதக்கங்களை பெற்றுள்ள நிலையில், நேபாளத்தில் நடைபெற்ற, 13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் சமீபத்தில் அவர் தங்கம் வென்றது தலைப்புச் செய்தியானது. இந்த ஜெயவீணா தமிழக கிரிக்கெட் வீரர் பாபாஜித்தை திருமணம் செய்திருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.
ஷாலினி நியூட்டன்
|