தலைமுறைகளைக் கடந்து சாதனை படைக்கும் சமைத்துப் பார்
1955களில் கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ சரித்திரத் தொடர் புத்தகமாக வந்து தமிழ் பொது வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றபோது இன்னொரு புத்தகம் பெண்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்தது. அந்தப் புத்தகத்தின் பெயர் ‘சமைத்துப் பார்’.  இந்தப் புத்தகத்தை எழுதியவர் மீனாட்சி அம்மாள். மதுரையை பூர்வீகமாகக் கொண்ட பெண்மணி. இந்தப் புத்தகம் அன்றைய காலத்தில் 3 பாகங்களாக வெளியிடப்பட்டது. இன்று ‘மீனாட்சி அம்மாள் பப்ளிகேஷன்ஸ்’ எனும் பதிப்பகத்தால் வெளிவரும் இந்த நூல் 40க்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டிருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை.

மீனாட்சி அம்மாளின் பேரனான ராம்குமாரின் மனைவியின் பெயர் ப்ரியா ராம்குமார். இவர்தான் இந்த அரிய புத்தகத்தை மேலும் மெருகேற்றி இன்றும்கூட இந்தப் பதிப்பகத்தின் மூலம் ஒரு வெற்றிகரமான நூலாக மாற்றியிருக்கிறார்.  கையில் கரண்டி வைத்திருப்பவன் எல்லாம் ஃபுட் விளாக்கர்ஸ் ஆகும் என்ன கொடுமை சரவணன் மொமண்டில் மீனாட்சி அம்மாள் பற்றியும் இந்தப் புத்தகத்தின் சிறப்பைப் பற்றியும் சென்னையில் வசிக்கும் ப்ரியாவிடம் பேசினோம்.‘‘மீனாட்சி அம்மாளின் கணவர் திருமணமான சில வருடங்களிலேயே ஒரு சிகிச்சையின்போது இறந்துபோனார். அப்போது மீனாட்சி அம்மாளுக்கு சிறுவயது. விதவையான மீனாட்சி அம்மாள் தன் மகனை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார். மகன் படித்ததும் சென்னையில் குடியேறினார். சென்னையில் மாமியார், மச்சினன், மகன் என சிறுகுடும்பமாக வாழ்ந்தார். மீனாட்சி அம்மாளுக்கு படிப்புகுறைவு என்றாலும் வீட்டை நிர்வகிக்கும் திறன் அதிகமாக இருந்தது. இந்தத் திறமையை, குறிப்பாக வீட்டு சமையலில் காண்பித்தார்.ருசி பார்த்த உறவினர்கள் மீனாட்சி அம்மாளிடம் அந்த சமையல் குறிப்புகளை அவ்வப்போது எழுத்து வடிவமாக வாங்கிக் கொண்டிருந்தனர்.
இந்த எழுத்துக் குறிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்ட அவரது உறவினர்களில் ஒருவரான மாமாதான் அந்தக் குறிப்புகளை புத்தகமாக போட மீனாட்சி அம்மாளுக்கு ஆலோசனை கூறியிருக்கிறார்.
முதன்முதலாக ‘அல்லயன்ஸ் பதிப்பகத்தாரால்’ வெளியிடப்பட்டு பல ஆயிரம் காப்பிகள் அப்போது விற்றதாக கேள்விப்பட்டிருக்கிறேன்...’’ என்று சொல்லும் ப்ரியா, மீனாட்சி அம்மாளின் ‘சமைத்துப் பார்’ புத்தகத்தின் சிறப்புகளை விவரித்தார்.‘‘குஞ்சாலாடு, பதிர்பேணி, நொக்கல், சுகியன், உக்காரை, புளிப் பொங்கல், தூத்பேடா போன்ற உணவுப் பெயர்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? எல்லாம் ‘சமைத்துப் பார்’ நூலில் உண்டு.
இப்படியாக சுமார் ஆயிரம் சமையல் குறிப்புகளையாவது இந்தப் புத்தகத்தில் அம்மாள் வழங்குகிறார். அதுவும் ஒரு மூத்த பெண்மணி, தன் குழந்தை களுக்கு சமையல் குறிப்புகளை சொல்லிக் கொடுப்பது மாதிரி- ஒரு கதை ரீதியாக இந்தக் குறிப்புகளை அம்மாள் கொடுக்கிறார்.
அந்தக் காலத்தில் எல்லாமே கையால் செய்யப்படும் சமையல்தான். இயந்திரங்கள் ஏதும் இல்லாத காலம். அதுவும் சைவ சமையல். குழந்தைகளுக்கான உணவு முதல், குழந்தை பெற்றுக்கொண்ட தாய்மார்கள் என்ன உணவு உண்ணவேண்டும் என்ற குறிப்புகள் வரை எல்லாம் இதில் உண்டு.
இத்தோடு உடல் நலத்தைப் பேணுவதற்கான ஆயுர்வேத சூரண உணவுகளும் இதில் அடக்கம். இன்று பழச்சாறு என்று கடைகளில் உடலுக்கு தீங்கான ஜூஸ்களை குடிக்கிறோம். ஆனால், அம்மாள் வீட்டிலேயே செய்யக்கூடிய பழ ஜூஸ் வகைகளை அன்றே குறிப்புகளாக கொடுத்திருக்கிறார். பலவகைப் பொடிகள், ஸ்நேக்ஸ் என்று சொல்லப்படும் சிற்றுணவு வகைகள், பலவகை ஊறுகாய்கள், கூட்டு வகைகள் என்று இந்தக் குறிப்புகள் இருக்கிறது.
ஒரு காய் குழம்பைச் சொல்லி ஒருவேளை அந்தக் காய் கிடைக்காதபட்சத்தில் வேறு என்ன போடலாம், ஒருவேளை நாம் நினைத்த சுவை வரவில்லை என்றால் எப்படி குறைகளைக் கண்டுபிடிப்பது, அதை எப்படி நிவர்த்தி செய்வது...
என எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொல்கிறார்...’’ எனச் சொல்லும் ப்ரியா, மீனாட்சி அம்மாள் அந்தக் காலத்தில் எழுதிய பழந்தமிழை கொஞ்சம் மெருகேற்றி இருப்பதுடன் ஆங்கிலத்திலும் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறார்.‘‘சில இடங்களில் பழைய தமிழை மாற்றியிருக்கிறேன்.
இதை நானும் என் மாமனாரும் சேர்ந்தே செய்தோம். இத்தோடு முதல் இரண்டு பாகத்தை பத்மா என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க மூன்றாம் பாகத்தை என் மாமனார் மொழிபெயர்த்தார். இந்த ஆங்கிலப் பதிப்பும் 1968ல் வெளியானது. இதற்கும் வரவேற்பு இருக்கிறது. இத்தோடு மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில்கூட இந்தப் புத்தகம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் முதல் பாகம் அடிப்படையான சமையலாக இருப்பதால் பலருடைய வீட்டிலும் இருக்கிறது. நாம் மறந்துபோன உணவுகளை நினைத்துப் பார்த்து அதை ருசிக்கவேண்டுமென்றால் இந்த நூல் ஒரு அற்புதமான புத்தகம்தான்...’’ புன்னகைக்கிறார் ப்ரியா.
செய்தி: டி.ரஞ்சித்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
|