பெரிய தாத்தா எம்ஜிஆரை அறிமுகப்படுத்தினார்... தாத்தா எம்ஜிஆரை இயக்கினார்... அப்பா சத்யராஜை டைரக்ட் செய்தார்...
நான் காஸ்டியூம் டிசைனர்!
காஸ்டியூம் டிசைனிங் துறையில் தனி முத்திரை பதித்தவர் சுபஸ்ரீ,. ‘96’, ‘மெய்யழகன்’, ‘கார்க்கி’, ‘காதல் என்பது பொதுவுடமை’, ‘சுழல் 2’ (வெப் சீரீஸ்) உட்பட ஏராளமான படங்களுக்கு இவர்தான் காஸ்டியூம் டிசைனிங். அத்துறை மீதான ஆர்வம் மற்றும் கார்த்தி, அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, த்ரிஷா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் பணிபுரிந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்ட சுபஸ்ரீ, பழங்கால இயக்குநர் டி.ஆர்.ரகுநாத் பேத்தி என்பது கூடுதல் தகவல்.
 ஃபேஷன் துறைக்கு வருவதற்கு வீட்டில் என்ன மாதிரி வரவேற்பு இருந்தது?
சின்ன வயசுலேர்ந்து ஆர்ட்ஸ் மீது ஆர்வம். கவின் கலை கல்லூரியில் சேர்ந்த பிறகு காஸ்டியூம் துறை மீது ஆர்வம் அதிகமாச்சு. அகமதாபாத்தில் உள்ள என்ஐடியில் முதுகலை முடிச்சேன்.
ஃபேமிலியைப் பொறுத்தவரை நான்தான் சினிமாவுக்கு புதுசு.  ஆனால், சினிமா எனக்கு புதுசு கிடையாது. என்னுடைய தாத்தா, பாட்டி, அப்பா, சித்தப்பா எல்லோரும் சினிமாவுல இருந்தவர்கள். ராஜாசந்திரசேகர் என்னுடைய பெரிய தாத்தா. அவர்தான் எம்ஜிஆர் சாரை ‘அசோக்குமார்’ படத்தில் அறிமுகம் செய்து வைத்தவர்.
தாத்தா டி.ஆர்.ரகுநாத் ‘மதுரை வீரன்’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, ‘யார் பையன்’, ‘வண்ணக்கிளி’ போன்ற படங்களை இயக்கியவர். அப்பா கார்த்திக் ரகுநாத், ‘சாவி’, ‘மக்கள் என் பக்கம்’ போன்ற படங்களை இயக்கியவர். என்னுடைய பாட்டி எம்.எஸ்.சரோஜா. ‘கண்ணகி’யில் மாதவியாக நடித்தவர்.  பல படங்களில் நாயகியாக நடித்தவர்.அந்த வகையில் ஆர்ட் என்பதை என்னுடைய இரத்தத்தில் ஊறிப்போன விஷயமாகப் பார்க்கிறேன். இந்தத் துறைக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் ‘96’ இயக்குநர் பிரேம். ஃபீல்டுக்கு வரும்போது ஃபேமிலியில் பெருமையாகப் பார்த்தார்கள். ஃபேஷன் துறையை உங்கள் ப்ரொஃபஷனாக தொடர எப்போது முடிவு செய்தீர்கள்?
படிச்சு முடிச்சதும் பல டிசைனர்கள் மாதிரி பல கம்பெனிகளில் வேலை செய்தேன். திருமணத்துக்குப் பிறகு மலேஷியாவில் சில காலம் இருந்துவிட்டு இந்தியாவுக்கு வந்தேன். பிரேம், பாலாஜி தரணிதரன் என்னுடைய நண்பர்கள். பிரேம் ஒளிப்பதிவாளராக இருக்கும்போது காஸ்டியூம் பற்றி சில இன்புட்ஸ் கேட்பார். அவர் படம் பன்ணும்போது நான்தான் காஸ்டியூம் பண்ணணும்னு கேட்டார்.
2017ல் ‘96’ படம் ஆரம்பமானது. அந்த சமயத்துல அப்பா தவறிவிட்டார். அப்பா விட்ட இடத்திலிருந்து நான் சினிமாவை தொடர்வதாக நினைத்து என்னுடைய பயணத்தை ஆரம் பித்தேன்.ஆடைகளை வடிவமைக்கும்போது மனதில் என்ன மாதிரியான ஐடியாக்கள் வைத்திருப்பீர்கள்?
கடந்த எட்டு வருடங்களாக ஃபீல்டில் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் கதைதான் முக்கியம். நான் ஃபேஷன் டிசைனர் கிடையாது. காஸ்டியூம் டிசைனர். ஃபேஷன் என்றால் ஃபியூச்சர்ல நான் டிசைன் பண்ணுவதைப் போடணும். காஸ்டியூம் என்றால் கதையை ரசிகர்களிடத்தில் கொண்டுபோக வேண்டும்.
புரொடக்ஷன் டிசைனருக்கும், காஸ்டியூம் டிசைனருக்கும்தான் கதைக் களத்தை கிரியேட் பண்ணுவதில் முக்கிய பங்கு உள்ளது. ஒரு காட்சியில் மருத்துவமனையைக் காண்பிக்கும்போது அது எப்படி மருத்துவமனையாக தெரிகிறது என்றால் ஆர்ட் டைரக்டர் அது மாதிரி கிரியேட் பண்ணுவார்.
அரசு மருத்துவமனையா அல்லது தனியார் மருத்துவமனையா என்பதை பெயர் பலகை தொடங்கி, உபகரணங்கள் வரை வேறுபடுத்திக் காட்டுவார். அரசு மருத்துவமனையாக இருந்தால் அங்குள்ள நர்ஸ், மருத்துவருக்கு ஒருவிதமாகவும்; தனியார் மருத்துவமனை என்றால் வேறுவிதமாகவும் காஸ்டியூம் இருக்கும்.
அந்த வகையில் ரசிகர்களுக்கு விஷுவல் ரீதியாக படத்தைச் சேர்க்கும் பொறுப்பு காஸ்டியூம் மற்றும் ஆர்ட் டிபார்ட்மென்ட்டுக்கு உள்ளது. அப்படி ஒரு படத்தில் காஸ்டியூம் டிசைனர் கீ ரோல் வகிக்கிறார். காஸ்டியூமர் எதாவது தப்பாக பண்ணினால் அது படத்தின் நம்பகத்தன்மையைப் பாதிக்கும். உதாரணத்துக்கு ‘கார்க்கி’ படத்துல நீதிபதியாக திருநங்கை சுதா நடித்திருந்தார்.பொதுவாக ஒரு ஆர்ட்டிஸ்ட் நடிக்கும்போது திரையில் அழகா இருக்கணும்னு நினைப்பாங்க. அவர் கை விரல்களுக்கு விதவிதமான கலரில் நைல் பாலிஷ், டிசைனர் ஜாக்கெட், தலைமுடிக்கு கலர் என்று பளபளப்பாக வந்தார். ஜட்ஜ் கேரக்டர்ல நடிக்கிறவர் மதிப்புமிக்கவராக இருக்கணும். அப்படி வரணும்னா இந்த அலங்காரம் இருக்கக்கூடாது என்று சொன்னேன்.
சினிமாவில் ஜட்ஜ் என்றால் ஒருவித டிரஸ் கோட், டீச்சர் என்றால் ஒருவித டிரஸ் கோட் இருக்கும். அது ஸ்டீரியோ டைப் கிடையாது. இதெல்லாம் நாம் பார்க்கும் விஷயத்திலிருந்து எடுத்துப் பண்ணுவது. கேர்ள் நெக்ஸ் டோர், பணிப்பெண், ஐடி ஊழியர்கள் என ஒவ்வொருவரும் எப்படி டிரஸ் பண்ணுகிறார்கள் என்பதில் பேக் ஸ்டோரி இருக்கும். அதை புரிஞ்சுக்கிட்டாதான் ஒவ்வொருவரும் எந்தவிதத்துல டிரஸ் பண்ணுவாங்கன்னு காஸ்டியூம் பண்ண முடியும்.
இதில் பொருளாதரம் முக்கியம். எந்த இடத்தில் வளர்ந்தாங்க, எந்த இடத்தில் வேலை செய்கிறாங்க எப்படி அவர்கள் ஸ்டைல் மாறுகிறது என்று பேக் ஸ்டோரி புரிஞ்சு பண்ணினால் நம்பகத்தன்மை கரெக்டாக இருக்கும். அப்சர்வேஷனை வெச்சுதான் டிசைனிங் இருக்கணும். என்னுடைய பிராசஸ் அதுதான்.டைரக்டர் கதை சொல்லும்போது பீரியட் படமா, கரண்ட் படமா என்று சொல்வாங்க. டீக்கடையில் ஒலிக்கும் பாடல் கூட பீரியட்டை சுட்டிக்காட்டும்.80கள்என்றால் ராஜா சார் பாடல்கள், 90கள் என்றால் ரஹ்மான் சார்.
புரொடக்ஷன் டிசைனர், ஆர்ட் டைரக்டர், ஒளிப்பதிவாளர் என எல்லோரும் சேர்ந்து படத்தோட கலர் எப்படி இருக்கணும்னு டிஸ்கஸ் பண்ணுவோம். காஸ்ட்டியூம்ல கலர் மட்டும் தனியா தெரியுது என்றால் அது தோல்வி.
‘96’ படத்தில் த்ரிஷாவுக்கு நீங்கள் வடிவமைத்த ஆடைகளில் உங்களுக்குப் பிடித்தது எது?
அந்தப் படத்தில் த்ரிஷாவுக்கு மூன்று காஸ்டியூம் மட்டும் இருக்கும். மஞ்சள் சுரிதார், ஜீன்ஸ் பேண்ட், ஷாவ்ல் அதுதான் என்னுடைய ஃபேவரைட். அந்த உடையைத்தான் யூஸ் பண்ணணும்னு ஃபைட் பண்ணி அப்ரூவல் வாங்கினேன். தஞ்சாவூர்ல இருந்து சிங்கப்பூர் போகும் பொண்ணு எப்படி இருப்பாங்க... ஊருக்கு வரும்போது எப்படி இருப்பாங்க என்று ஜானு கேரக்டர் கிரியேட் பண்ணியது.
சிங்கப்பூர்ல வசதியாக வாழ்பவர் என்பதால் அங்கு கிடைக்கும் இன்டர்நேஷனல் ஜீன்ஸ், செருப்பு, வாட்ச் அணிந்திருப்பார். அதே சமயம் சிம்பிள் லுக்ல இருப்பார். மத்தவங்க ஜாலியா வந்திருப்பாங்க. ஜானு வந்தது ராமுவைப் பார்க்க. ஆடையைப் பொறுத்தவரை கிராண்டா இருக்கலாம், இல்லைன்னா சிம்பிள் காட்டன் புடவை கட்டினாலும் அட்டென்ஷன் கிடைக்கும். அந்த சிம்பிளிசிட்டி பேர் வாங்கித் தரும். த்ரிஷா நிஜ வாழ்க்கை பெண்ணாகவே வந்தது கேரக்டருக்கு அழுத்தம் சேர்த்துச்சு.
‘மெய்யழகன்’ அனுபவம்?
என்னுடைய கரியரில் முக்கியமான படம். அரவிந்தசாமி, கார்த்தி ஆகியோரிடன் ஒர்க் பண்ணும்போது துறை சார்ந்து நிறைய கத்துக்கிட்டேன். இருவருமே இன்வால்வ்மென்ட்டோடு வேலை செய்வாங்க. அரவிந்தசாமிக்கு லாஜிக் தேவைப்படும். கேள்வி கேட்டு அதற்கு உதவுவார். படத்துல கார்த்தி வெள்ளந்தி. ஆனால், விவரவமானவர். அவருடைய டிரஸ்ஸை முரட்டுத்தனமா காட்டக் கூடாது. அழகாகவும், சிம்பிளாகவும் இருக்கணும்.
நூறு ரூபாய் மீட்டர் துணியை எடுத்துதான் சட்டை தைத்தேன். அரவிந்த்சாமி சாருக்கு எல்லாமே பிராண்டட் டிரஸ். இயக்குநர் பிரேம் புரிதல் உள்ளவர் என்பதால் என்னுடைய பாதி வேலை குறைந்துவிடும்.கேரக்டருக்காக உடைகள் தயாரிக்கும்போது நடிகர், நடிகைகளின் ஆலோசனைகளைக் கேட்பீர்களா?
ஆர்ட்டிஸ்ட் ஃபேஷன் ஐகானாக இருக்க நினைத்தால் கேரக்டரை விட்டு வெளியே போயிடுவாங்க. யாருமே கதைக்குத் தேவையில்லாத விஷயங்களை சொன்னதில்லை. சிலர் ஃபிட்டிங் மட்டும் இப்படி இருக்கலாமா என்று கேட்பாங்க. எப்போதும் ஃபோக்கஸ் படத்துக்காக மட்டுமே இருக்கணும். சினிமா ஒருவருடைய முயற்சி இல்லை. எல்லோரும் அவரவர் பங்களிப்பை செய்ய வேண்டும். இயக்குநரின் விஷனுக்காக உழைக்கணும்.
டெக்னீஷியன்கள் தங்கள் பங்களிப்பைக் கொடுத்தாலும் ஆர்ட்டிஸ்ட்தான் படத்தை மக்களிடம் சேர்க்கிறவர். அவருக்குப் படம் மீது புரிதல் இருக்கணும். அதனால் அவர்களுடைய புரிதல் என்னன்னு கேட்டு தெரிஞ்சுப்பேன். எல்லோருடைய பார்வையும் தெரிஞ்சுகிட்டு, கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுத்து பண்ணுவேன். சமரசம் இருக்காது.
எஸ்.ராஜா
|