சவுண்ட் அதிகமானா எரிச்சல் வரும்... படத்து மேல கோபம் வரும்!
தரமான இசையும், துல்லியமான ஒலி வடிவமும் ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை வரையறுக்கிறது. குறிப்பாக படம் பார்க்கும்போது ரசிகர்களின் உணர்ச்சிகளை உள்ளடக்கிய மனநிலையை கையாள்வதில் ஒலி முக்கிய பங்கு வகிக்கிறது. படம் முடிந்த பிறகும் படத்தோடு தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் ஒலியும் உதவுகிறது. காட்சிகள் அற்புதமாக படமாக்கப்பட்டிருந்தாலும் முழுமையான சினிமா அனுபவத்துக்கு ஒலி இல்லாமல் போனால் ஆக்ஷன் காட்சிகளோ அல்லது சென்டிமென்ட் காட்சிகளோ படத்திலிருந்து விலகி நிற்கும்.
அந்த வகையில் திரையில் பார்க்கும் காட்சியை மெய்மறந்து பார்க்க வைக்க வேண்டும் என்றாலும் அல்லது ரசிகர்களை என்கேஜாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றாலும் ஒலியை யதார்த்தமாக வழங்குவது முக்கியம்.
இந்த இடத்தில்தான் சவுண்ட் டிசைனரின் பங்களிப்பு முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதில் அவர்கள் லைவ் சவுண்ட், ரீ கிரியேஷன் என ஒலியை பல்வேறு விதங்களில் பதிவு செய்யும் நடைமுறைகளைக் கையாளுவார்கள். இது ஒரு தொழில்நுட்பம் சார்ந்த வேலையாக இருந்தாலும் கலைநயத்துடன் இருக்கும்போதுதான் படத்துக்கு வலுசேர்க்கும். அப்படி சவுண்ட் டிசைனிங் பற்றி பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் சவுண்ட் டிசைனர் ஹரீஷ். இவர் சமீபத்தில் வெளியான ‘ரெபல்’, ‘வடக்குப்பட்டி ராமசாமி’, ‘பேச்சி’, ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ், ‘பட்டி’ (தெலுங்கு) உட்பட ஏராளமான படங்களில் சவுண்ட் டிசைனராக வேலை செய்தவர்.
சினிமாவில் உங்கள் பயணம் எப்படி ஆரம்பமாச்சு?
எனக்கு சொந்த ஊர் மதுரை. 2006ம் ஆண்டு அனிமேஷன் கத்துக்கலாம்னு சென்னைக்கு வந்தேன். அதுல சவுண்ட் ஒரு பகுதி. அப்போது அனிமேஷனுக்கு பெரிய வரவேற்பு இல்லாததால் சவுண்ட்ல கவனம் செலுத்த ஆரம்பிச்சேன். ஒரு டப்பிங் ஸ்டூடியோவுல சவுண்ட் டிசைனிங் பற்றிய அடிப்படையை கத்துக்கிட்டேன். அங்கிருந்து தேசிய விருது வென்ற ராஜகிருஷ்ணன் சாரிடம் உதவியாளராக சேர்ந்தேன். அவரிடம் நூற்றுக்கும் மேலான படங்களில் வேலை பார்த்தேன்.
பிறகு தனியாக படம் செய்ய ஆரம்பிச்சேன். என்னுடைய முதல் படம் ‘பலூன்’. தொடர்ந்து ‘ஓ மை கடவுளே’, ‘டிக்கிலோனா’,‘ஹே சினாமிகா’, ‘அஸ்வின்ஸ்’, ‘லேபிள்’ உட்பட கிட்டத்தட்ட 80 படங்கள் பண்ணியிருப்பேன்.
ஒரு படத்துக்கான சவுண்ட் டிசைனிங்கை எப்படி வரையறுப்பீர்கள்?
சவுண்ட் டிசைனிங்கைப் பொறுத்தவரை ரசனைக்கு முக்கிய பங்கு உண்டு. இப்போது ‘உறுமீன்’ சக்தி இயக்கும் ‘அலங்கு’ என்ற படம் செய்துள்ளேன். முழுக்க முழுக்க வனப் பகுதியையொட்டி நடக்கும் கதை. அந்தப் படத்தைப் பொறுத்தவரை எஃபெக்ட்ஸை வெச்சுதான் பின்னணி இசையை வரையறுத்தார்கள். அந்த மாதிரி ஒர்க் பண்ணும்போது சத்தம் எரிச்சலை ஏற்படுத்தாமல் மென்மையாக இருக்கும்.
இப்போது சில படங்களில் சவுண்ட் சரியில்லைன்னு சொல்கிறார்கள். ஆனால், இந்த மாதிரி பிராசஸில் ஒர்க் பண்ணும்போது தேவையில்லாத சத்தத்தைத் தவிர்க்க முடியும்.
அந்த வகையில் விஷுவலுக்கு என்ன தேவையோ அதுதான் நல்ல சவுண்ட். தேவையில்லாத சவுண்ட் கொடுத்தால் அது காட்சியோடு ஒட்டாமல் விலகி நிற்கும்.
அப்படி ஒர்க் அவுட் ஆகுமா, ஆகாதா என பகுத்துப் பார்க்கத் தெரிந்தாலே நல்ல சவுண்ட் கொடுக்க முடியும். சவுண்ட் என்ஜினியருக்கு ஒர்க் அவுட் ஆகாதுன்னு தெரிஞ்சா அவாய்ட் பண்ணிடணும்.
ஒரு படத்துக்கான குறிப்பிட்ட ஒலி அளவீடு ஏதேனும் இருக்கா?
அளவீடு என்பது கதையோட உணர்ச்சிகளுக்கு ஏற்ப மாறும். மெதுவாக நகரும் காட்சி என்றால் அதுக்கேத்த மாதிரியும், ஆக்ஷன் காட்சி என்றால் அதுக்கேத்த மாதிரியும் இருக்கும். சவுண்ட் லவுடா இருக்கணும்னா அதிகபட்சமா 85 முதல் 90 டெசிபல் வைக்கலாம். அதுதான் மனிதக் காதுகளுக்கு பாதுகாப்பானது. அந்த அளவைத் தாண்டும்போது காது வலிக்கும் என்பதைவிட எரிச்சலை ஏற்படுத்தும். அது அப்படியே படத்தின் மீதான கோபமா மாறும்.
பொதுவா ஒரு படத்துக்கான சவுண்ட் பிராசஸ் எப்படி செய்வீங்க?
‘அஸ்வின்ஸ்’ திகில் படம். திகில் படம்னு வரும்போது கதை ஒரு ரூமுக்குள் நடக்கிறது என்றால் அந்த ரூமை ரீ கிரியேட் பண்ணுவோம். பூட்டிய ரூம் என்றால் அந்த ரூமில் மாட்டிக்கொண்டவர் நடக்கும்போது எதிரொலி கேட்கும். அந்த மாதிரி காட்சிகளை யதார்த்தமாகக் கொண்டுவர முடிந்தளவுக்கு முயற்சிசெய்வோம்.
அதே மாதிரி திகில் படத்தைப் பொறுத்தவரை கொஞ்சம் சைலன்ட் கொடுத்த பிறகு சவுண்ட் கொடுத்தால்தான் பயத்தை ஏற்படுத்தும். ஆரம்பத்திலேயே அதிக சவுண்டைக் கொடுத்துவிட்டு மறுபடியும் சவுண்ட் சேர்த்தால் பார்வையாளர்களுக்கு பயத்தைக் கொடுக்காது. அப்படி எல்லாத்தையும் ஒருங்கிணைச்சுப் பண்ணினால்தான் பயமுறுத்தும் அப்ரோச் ஒர்க் அவுட்டாகும். ‘ஹேய் சினாமிகா’ ஃபீல் குட் படம். அந்தப் படத்துல மியூசிக் டாமினேட் பண்ணாது. வசனத்தோடு சேர்ந்து மியூசிக் வந்து போகும். அது டைனமிக்கான மிக்ஸிங்னு சொல்லலாம். கமர்ஷியல் படம் என்று வரும்போது அடிதடிதான் அதிகம் இருக்கும். லவுட் பேட்டர்ன்லதான் ஒர்க் பண்ணணும். அதிக சவுண்ட் வைக்காத காரணத்தாலதான் படம் ஓடலை என்ற கம்பளைன்ட் வரும். கமர்ஷியல் கதையில் ஹீரோ அறிமுகமாகிறார் என்றால் அதிரச் செய்தால்தான் நல்லாயிருக்கும்.
சமீபத்துல வந்த படம் ஓடாமல் போனதற்கு சவுண்டையும் குறை சொன்னார்கள்... கவனிச்சீங்களா?
அந்த விமர்சனங்களை நானும் கேட்டேன். எந்த காரணமும் இல்லாமல் சவுண்ட் மேல கம்ப்ளைன்ட் பண்ணியதை ஒப்புக்கொள்ளமாட்டேன். அது இரைச்சல் கிடையாது. யாரோ ஒருவர் சொன்ன கருத்தை அப்படியே பிடிச்சுக்கிட்டாங்க.
அந்தப் படத்தை நானும் பார்த்தேன். எனக்கு இரைச்சல் தர்ற மாதிரி ஃபீல் ஆகவில்லை. என்னுடைய கண்ணோட்டத்தில் அந்த மாதிரி படங்களுக்கு பேக்ரவுண்ட் பொறுத்துதான் சவுண்ட் டிசைனிங் செய்யப்படும். பேக்ரவுண்ட் டிமாண்ட் பன்ணும்போது வேற ஆப்ஷன் இருக்காது. ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் ஒவ்வொரு சவுண்ட் தேவை இருந்திருக்கும். விஷயம் தெரியாம கம்ப்ளைன்ட் பண்ணக்கூடாது. டால்ஃபி அட்மாஸ் சவுண்ட் பற்றி சொல்லுங்களேன்?
அட்மாஸ் சப்போர்ட் பண்ணும் தியேட்டரில்தான் அது ஒர்க் அவுட் ஆகும். மற்ற தியேட்டர்களில் 5.1 சவுண்ட் சிஸ்டம் இருக்கும். இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு.
அட்மாஸ் சிஸ்டம் மெயின் ஸ்கிரீன்ல மட்டும் இருக்கும். தியேட்டரில் அட்மாஸ் இருக்கிறதா என்று செக் பண்டிட்டு போனால்தான் அந்த அனுபவத்தைப் பெற முடியும். போனில் அட்மாஸ் சவுண்டுடன் படம் பார்த்தேன் என்று ஒருத்தர் சொல்கிறார் என்றால் அது அவருடைய அறியாமை.
அட்மாஸ் என்பது தனி ஃபார்மேட். 6 மோனோ டிராக் சேர்ந்ததுதான் 5.1. ஒரு படத்தோட அனைத்து கட்ட வேலைகள் முடிஞ்சதும் க்யூப்ல இயக்குநர், கேமராமேன், இசையமைப்பாளர், சவுண்ட் டிசைனர் என முக்கியமான டெக்னீஷியன்கள் படத்தைப் பார்த்து இதுதான் ஃபைனல் பிரிண்ட் என்று சொன்னால்தான் பிரிண்ட் அடிப்பாங்க.
ஸ்டூடியோவுல 100 சதவீதம் இருக்கும் சவுண்ட் குவாலிட்டி பிரிண்ட் எடுக்கும்போது 90 சதவீதமாகவும், தியேட்டருக்கு வரும் போது 70 சதவீதமாகவும் இருக்கும். ஆனாலும் அடிப்படை குவாலிட்டியில் மாற்றம் இருக்காது.
தமிழ் சினிமாவுல சவுண்டுக்கு எப்படி முக்கியத்துவம் தருகிறார்கள்?
ஸ்கிரிப்ட் லெவலில் எங்கள் வேலை ஆரம்பமாகிவிடும். ஆம்பியன்ஸ் எப்படி இருக்கும், குறிப்பிட்ட இடங்களில் சவுண்ட் எப்படி வரணும் என்பதைத தீர்மானித்து விடுவோம்.
உதாரணமாக, கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மென்ட் என்றால் அங்கு ஓப்பன் கிரவுண்ட் இருக்கும். குழந்தைங்க விளையாடிட்டு இருப்பாங்க. அதையெல்லாம் ரீ கிரியேட் பண்ணுவோம்.
வீட்டுக்குள் இருக்கும்போது வெளியே குழந்தைகள் விளையாடும் சத்தம் கேட்கும். அது மாதிரி சில சமயம் ஸ்பாட்டில் போய் லைவ் சவுண்ட் எடுப்போம்.‘அஸ்வின்ஸ்’ படத்தை லண்டனில் எடுத்தார்கள். அங்குள்ள தீவில் இரவில் எந்தவித சவுண்டும் இருக்காது. அதாவது பூச்சிகளின் கீச்... கீச்... சவுண்ட் இருக்காது. நம் ஊர்களில் இரவு நேரத்தில் சில பூச்சிகளின் கீச்... கீச்... சவுண்டை கேட்கலாம்.
அப்படி அந்தப் படத்தில் ஆம்பியன்ஸ் சவுண்டை ரீ கிரியேட் பண்ணுவதற்காக பூச்சி சவுண்ட் இல்லாத இடத்தை தேடியபோது விசாகப்பட்டினத்துல அப்படியொரு இடம் கிடைச்சது. ‘வடக்குப்பட்டி ராமசாமி’யில் ஊர் மக்கள் ஓடி வருவது போல் காட்சி. அந்தச் சத்தத்தை லைவ்வாக எடுத்து யூஸ் பண்ணினோம். சில படங்களில் பட்ஜெட் இல்லையென்றால் டப்பிங்ல கிரவுட் சவுண்டை டைரக்டர் டீமை வெச்சு எடுப்போம். சில சமயம் ஸ்டாக் சவுண்டை யூஸ் பண்ணுவோம்.
சவுண்ட் டிசைனிங்கைப் பொறுத்தவரை மாறணும்னு நினைக்கிற அம்சம் என்ன?
சினிமா என்பது ஒலியும் ஒளியும். தயாரிப்பு தரப்பு விஷுவலுக்கு தரும் முக்கியத்துவத்தை சவுண்ட் டிப்பார்மென்ட்டுக்கும் தரணும். ஆடியோ குவாலிட்டிக்காக நாங்க நிறைய முயற்சி எடுப்போம்.
ஆனால், பெரும்பாலான தியேட்டர்களில் ஒரிஜினல் ரிசல்ட் இருக்காது. தியேட்டருக்கான குவாலிட்டி கன்ட்ரோல் வேணும். 4 லட்சம் ஸ்பீக்கருக்கு 40 லட்சம் ஸ்பீக்கர் வாங்கச் சொன்னா தயங்குவாங்க. அதற்கு க்யூப் லெவலிலிருந்து சில டெக்னிக்கல் அம்சங்கள் சேர்க்கும்போதுதான் நாங்க போடுற எஃபோர்ட் ஆடியன்ஸிடம் போய்ச் சேரும்.
எஸ்.ராஜா
|