உத்திரப்பிரதேசம்தான் முதலிடம்!



ஆண்டுதோறும் சாலை விபத்துக்களில் இந்திய அளவில் இந்த சாதனையாம்... சொல்கிறது ஒன்றிய அரசு

மக்கள் தொகையில் இந்தியாவுக்கு ஈடான சீனா மற்றும் அமெரிக்காவைவிட இந்தியாவில் சாலை விபத்துக்களும் அவற்றில் ஏற்படும் மரணங்களும் அதிகம் என்று நெற்றிப் பொட்டில் அடிக்கிறது ஒரு புள்ளிவிபரம்.
ஒன்றிய அரசின் அமைச்சகமான சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அண்மையில் ஓர் அறிக்கையை சமர்ப்பித்தது. இந்த அறிக்கை இந்தியாவில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் முக்கியமான நகரங்களின் சாலைகளில் ஏற்படும் வாகன விபத்து மற்றும் அது தொடர்பான மரணங்களை புட்டுப்புட்டு வைக்கிறது.அறிக்கை 2023க்கானது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன சொல்கிறது அறிக்கை?

இந்தியாவில் ஒரு மணிநேரத்துக்கு 55 சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. மொத்தத்தில் 2023ல் சுமார் 4 லட்சத்தி 80 ஆயிரத்தி 583 விபத்துக்கள் ஏற்பட்டன. இது 2022ஐ விட 4.2 சதவீதம் அதிகம். சாலை விபத்துக்களால் ஏற்படும் மரணங்களைப் பொறுத்தளவில் ஒரு மணிநேரத்துக்கு 20 உயிர்கள் பறிபோகின்றன. மொத்தத்தில் அந்த ஆண்டு மட்டுமே ஒரு லட்சத்தி 72 ஆயிரத்தி 890 மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

விபத்துக்களால் காயம் ஏற்படுவது ஒரு மணிநேரத்துக்கு 53 பேர். மொத்தத்தில் நான்கு லட்சம் சில்லரைக் காயங்கள் என்று சொல்லும் அறிக்கை, மாநிலங்கள் வாரியாகவும் விபத்து, மரணம் பற்றிப் பேசுகிறது.விபத்துக்களை பொறுத்தளவில் தமிழ்நாடுதான் முதலிடத்தில் உள்ளது. 

அந்த வருடத்தில் மட்டும் 67 ஆயிரத்தி 213 விபத்துக்கள். மரணத்தைப் பொறுத்தளவில் உத்திரப்பிரதேசம்தான் டாப் ஒன். உதாரணமாக உத்திரப் பிரதேசத்தில் 23,652, தமிழ்நாடு 18,347, மகாராஷ்டிரா 15,798, கர்நாடகா 12,321, இராஜஸ்தான் 11,762 என்று சொல்லும் அறிக்கை மேலும் சில சுவாரசியமான கருத்துக்களை பகிர்கிறது.

இந்தியாவின் மொத்த சாலைகளில் 4.9 சதவீதம் மட்டுமே இடம்பிடிக்கும் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுமார் 59.3 வாகன விபத்துக்கள் நிகழ்கின்றன. இந்த விபத்துக்களுக்குக் காரணம் வேகம் (Speed). வேகத்தால் ஏற்படும் மரணங்கள் மாத்திரம் 68.1 சதவீதம்.

44.8 சதவீத விபத்துக்கள்

டூ வீலர்களால் நிகழ்கின்றன. விபத்துக்களால் சுமார் 20 சதவீத பாதசாரிகளுக்கு மரணம் ஏற்படுகின்றன. நகரம், கிராமத்தை பொறுத்தளவில் கிராமத்தில் ஏற்படும் மரணம் 85.2. நகரம் வெறும் 31.5. ஆண், பெண் வேறுபாட்டில் ஆண்கள் இந்த விபத்தில் இறப்பது 85.2. பெண்கள் 14.8. விபத்து இறப்பில் குழந்தைகளின் இறப்பு மொத்தம் 9489. இது மொத்த இறப்பில் 6 சதவீதம். அதாவது தினசரி இந்த விபத்துக்களால் ஒரு மணிநேரத்துக்கு 26 குழந்தைகள் இறக்கிறார்கள் என்று சொல்லும் அறிக்கை முத்தாய்ப்பாக சில அதிர்ச்சியான தகவல்களையும் பகிர்கிறது.

100 விபத்தில் எத்தனை மரணங்கள் ஏற்படுகின்றன என்பதை வைத்துதான் விபத்தின் கோரமுகம் தெரியும். அப்படி பார்த்தால் இந்தியாவில் 100 விபத்துக்களில் 36 மரணங்கள் ஏற்படுகின்றன. மரணங்களில் உத்திரப்பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்தாலும் விபத்தில் தமிழகம் கடந்த 6 வருடங்களாக முன்னிலையில் இருப்பது ஆபத்தானது என்று எச்சரிக்கிறது அந்த அறிக்கை.

டி.ரஞ்சித்