களிமண் ராஜா!



பெயர் : ரஃபேல் நடால் பெரேரா.

பிறந்த தேதி : 03-06-1986.

பிறந்த இடம் :  ஸ்பெயினில் உள்ள மனாகோர்.

பெற்றோர் : அப்பா செபாஸ்டியன் நடால் ஹோமர், ஒரு பிசினஸ்மேன். சொந்தமாக இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் உணவகத்தை நடத்தி வந்தார். அம்மா அனா மரியா பெரேரா, சொந்தமாக வாசனைத் திரவியங்கள் விற்பனை செய்யும் கடையை வைத்திருந்தார். ரஃபேலையும், அவரது சகோதரியையும் வளர்ப்பதற்காக கடையை அவர் தொடர்ந்து நடத்தவில்லை.

உயரம் : 6 அடி, 1 அங்குலம்.

பரிசுத்தொகை : இந்திய மதிப்பில் ரூபாய் 1140 கோடிக்கும் மேல். டென்னிஸ் விளையாட்டில் அதிக பரிசுத் தொகையைப் பெற்றவர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

குடும்பம் : கடந்த 2005ம் வருடம் சகோதரி மூலமாக மரியா ஃப்ரான்சிஸ்கா என்ற பெண் ரஃபேலுக்கு அறிமுகமானார். அப்போது ரஃபேலுக்கு வயது 19. மரியாவுக்கு 17. இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். 2007-லேயே தங்களின் காதலைக் குறித்து பொது வெளியில் அறிவித்தார் ரஃபேல்.

ஆனால், 12 வருடங்கள் கழித்துதான், அதாவது 2019ல்தான் திருமணம் செய்துகொண்டனர். 2022ல் ரஃபேல் - மரியாவுக்கு ஒரு மகன் பிறந்தான். ரஃபேல் விளையாடும் பெரும்பாலான போட்டிகளை அவர் மனைவி நேரில் பார்ப்பதில்லை. ரஃபேலின் கடைசி போட்டியை மகனுடன் சேர்ந்து, மரியாவும் கண்டு களித்தார். தரவரிசைப் பட்டியல் : உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீரராக 209 வாரங்கள் இருந்தார்.

களிமண் ராஜா : களிமண் மைதானத்தில் ரஃபேலை வெல்வது கடினம். களிமண் மைதானத்தில் தொடர்ந்து 81 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். அவரை களிமண் ராஜா என்றே அழைக்கின்றனர்.

கிராண்ட்ஸ்லாம் : இரு ஆஸ்திரேலியன் ஓப்பன், 14 ஃபிரெஞ்ச் ஓப்பன், 2 விம்பிள்டன், 4 யுஎஸ் ஓப்பன் என 22 தனி நபர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார்.
இதுபோக ஒலிம்பிக்கில் ஒரு முறை தனி நபர் பிரிவில் தங்கமும், ஒரு முறை இரட்டையர் பிரிவில் தங்கமும் வென்றிருக்கிறார். ஆக மொத்தம் தனி நபர் பிரிவில் 92 பட்டங்களையும், இரட்டையர் பிரிவில் 11 பட்டங்களையும் வென்றிருக்கிறார்.

டென்னிஸ் ஆர்வம் : ரஃபேலின் மாமாவான மிகுல் நடால் ஒரு கால்பந்து விளையாட்டு வீரர். கால்பந்து விளையாடும்போதெல்லாம் சிறுவன் நடாலை உடன் அழைத்துச் செல்வார் அவரது மாமா.

இன்னொரு மாமா டோனி நடால் டென்னிஸ் பயிற்சியாளராக இருந்தார். அவர்தான் மூன்று வயதான நடாலுக்கு டென்னிஸ் விளையாட்டை அறிமுகப்படுத்தினார்.

மனாகோரில் உள்ள ஒரு டென்னிஸ் கிளப்பில்தான் டோனி பயிற்சியாளராக இருந்தார். அந்த கிளப்பில்தான் டோனியுடன் சேர்ந்து டென்னிஸ் ஆட ஆரம்பித்தார் ரஃபேல்.
ஐந்து வயதான ரஃபேலுக்கு டென்னிஸ் விளையாட்டு சலிப்பு தருவதாக இருந்தது. கால்பந்து விளையாட ஆரவமாக இருந்தார். டென்னிஸ் பயிற்சி முடிந்ததும் தெருக்களில் கால்பந்து விளையாடக் கிளம்பிவிடுவார்.

ஐந்து வயதிலிருந்து கால்பந்தை ஓரம் கட்டிவிட்டு, தொடர்ந்து டென்னிஸ் விளையாட ஆரம்பித்தார் ரஃபேல். இதற்கு டோனி கொடுத்த அழுத்தமும் ஒரு காரணம்.
சிறுவன் ரஃபேல் டென்னிஸில் திறமையுடன் இருப்பதை அடையாளம் கண்டுகொண்டு, தனிக்கவனத்துடன் பயிற்சியளிக்க ஆரம்பித்தார் டோனி. சிறு வயதில் ரஃபேல் குழுவாகத்தான் விளையாடுவார்.

ஆனால், ரஃபேலைத் தனி நபராக விளையாட அழுத்தம் கொடுத்ததும் டோனிதான். மாமாவின் அழுத்தம் ரஃபேலுக்கு பயத்தையும், வெறுப்பையும் கொடுக்க, பயிற்சி செய்யாமல் அழுதுகொண்டே வீட்டுக்கு ஓடி வந்துவிடுவார்.

ஆனால், அவரது குடும்பம் டோனியிடம் டென்னிஸ் பயிற்சி பெறுவதுதான் ரஃபேலின் எதிர்காலத்துக்கு நல்லது என்று திருப்பிப் பயிற்சிக்கு அனுப்பியது. ஒரு வகையில் வேண்டா வெறுப்புடன்தான் டென்னிஸ் பயிற்சியை மேற்கொண்டார். நாளடைவில் டென்னிஸ் மீது ரஃபேலுக்கு பெருங்காதல் பிறந்துவிட்டது.

டென்னிஸே அவரது வாழ்க்கையாகிவிட்டது. மாவட்ட அளவில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றார்.

அப்போது ரஃபேலுக்கு வயது 8. இந்த வெற்றிக்குப் பிறகு இன்னும் சிறப்பான பயிற்சியை ரஃபேலுக்கு வழங்க வேண்டும் என்று டோனி எண்ணினார். ரஃபேல் இரண்டு கைகளிலும் விளையாடினார். டோனிதான் இடது கையில் விளையாடும்படி வழிகாட்டினார். இதுதான் ரஃபேலை உலகின் தலைசிறந்த இடது கை டென்னிஸ் வீரராக மாற்றியது.

11 வயதிலேயே தேசிய அளவிலான ஜூனியர் போட்டியில் வென்று, ஸ்பெயினின் சிறந்த இளம் டென்னிஸ் வீரராகப் புகழப்பட்டார். 14 வயதிலேயே புரபஷனல் டென்னிஸ் வீரராக பரிணமித்தார். 

இதற்குப் பிறகு நடந்தது டென்னிஸ் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவை. ஆம்; இருபது வயதுக்குள்ளேயே உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துவிட்டார்; அத்துடன் 16 பட்டங்களைத் தன்வசமாக்கினார்.

பதின்பருவத்திலேயே ஃபிரெஞ்ச் ஓப்பன் உட்பட முக்கியமான ஆறு டென்னிஸ் போட்டிகளில் வென்று, பதக்கங்களைக் கைப்பற்றினார். 22 வயதிலேயே விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை வென்று, உலகின் நம்பர் ஒன் வீரராகிவிட்டார். 

இப்படி ரஃபேல் ஓய்வு பெறும் வரை டென்னிஸ் விளையாட்டில் சாதனைகளை நிகழ்த்திக்கொண்டே இருந்தார்.ஓய்வு: கடந்த நவம்பர் 19ம் தேதி டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற ரஃபேல், ‘‘ஒரு நல்ல மனிதனாக மக்களால் நினைவு கூரப்பட விரும்புகிறேன்...’’ என்று ஓய்வை அறிவிக்கும் உரையில் சொல்லியிருக்கிறார்.

த.சக்திவேல்