மகன் இயக்கத்தில் அப்பா நடிக்கிறார்!
நகைச்சுவை நடிகராக தனக்கென தனித்துவமான பாதையை அமைத்துக்கொண்டவர் தம்பி ராமையா. நகைச்சுவை, குணச்சித்திரம் என எந்த வகை கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதிப்பவர். இயக்குநராகவும் தன் ஆளுமையை வெளிப்படுத்தியவர். இப்போது தன் மகன் உமாபதி ராமையா இயக்கியுள்ள ‘ராஜாகிளி’ படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். மகனுக்கு திருமணம் முடித்த கையோடு படம் வெளியாவதால் தம்பி ராமையாவின் முகத்தில் கூடுதல் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. மகன் இயக்கத்தில் நடிச்ச அனுபவம் எப்படியிருந்துச்சு?
முதன் முதலாக என்னுடைய மகன் உமாபதி ராமையா திரைக்கதை, இயக்கத்தில் நடிச்சது மகிழ்ச்சி. கதை, வசனம், பாடல்கள், இசை என்னுடையது. ‘வாழை‘, ‘லப்பர்பந்து’ மாதிரி இது கன்டன்ட் பேசும் படம். ‘சாட்டை’, ‘அப்பா’, ‘விநோதயசித்தம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு சமுத்திரக்கனியும் நானும் இணைந்து செய்யும் படம் இது. கிர்ஷ், ஆடுகளம் நரேன், ரேஷ்மா, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் முக்கியமான வேடத்துல வர்றாங்க.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி என்னுடைய மகன் உமாபதியின் மீது நம்பிக்கை வெச்சு டைரக்ஷன் வாய்ப்பை கொடுத்தார். என்னுடைய மகனைப் பற்றி அதிகப்படியா சொல்லணும்னு அவசியமில்லை. உண்மையில் அவர் டெக்னிக்கல் நாலெட்ஜ் அதிகம் உள்ளவர். சில படங்களில் ஹீரோவாக நடிச்சவர். லோகேஷ் கனகராஜிடம் டைரக்ஷன் கத்துக்கிட்டார். அவரிடம் டைக்ரஷன் ஸ்கில் இருப்பதைக் கண்டு உற்சாகப்படுத்தியதில் லோகேஷுக்கு அதிகமா பங்கு உண்டு.
‘ராஜாகிளி’ எதைப் பற்றி பேசுகிறது?
ஒரு மனிதன் பொன், புகழ், பொருள் என எல்லா வளமும் பெறலாம். ஆனால், குறிப்பிட்ட வயசுக்குப் பிறகு பெற்ற புகழையும், பெற்ற செல்வத்தையும் காப்பாற்றுவது என்பது உழைச்சு சம்பாதிச்சதைவிட மிக மிகக் கஷ்டம்.இந்தச் சமுதாயம் தடுமாறும்போது தாங்கிப்பிடிக்காது. தடம் மாறும்போது எச்சி துப்ப காத்திருக்கும். எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டாரேன்னு பார்க்கக்கூடிய ஒரு நிஜ மனிதரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைக் கோர்த்து எழுதப்பட்ட கதை இது.
அந்த நிஜ மனிதர் என்னுடைய நண்பர். படம் பார்க்கும்போது பரபரப்போடு வாழ்ந்து மறைந்த மனிதரின் சகாப்தம் கண் முன் வரும். அவருடைய மனித நேயத்தின் உச்சம் எனக்குத் தெரியும். நல்லவர்களை இந்தச் சமுதாயம் நல்லவர்களாவே வாழ விடுவதில்லை. கெட்டவனை நல்லவனாக்க எந்தளவுக்கு சமுதாயம் உதவி செய்கிறதோ அது மாதிரி நல்லவனைக் கெட்டவனாக மாத்த நினைச்சாலும் மாத்திடும். நல்லவன் கெட்டவனாக மாறாமல் இருப்பதற்கு நல்லவன்தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஐம்பது வயசு தாண்டிய ஒருவரை ஒரு பெண் காதலிக்கிறார் என்றால் அழகைப் பார்த்து காதலிப்பதில்லை. மாஸுக்கும், காசுக்கும் ஆசைப்பட்டு காதலிப்பார். அப்போது ஐம்பது வயசுக்காரர் ஜாக்கிரதையா இருக்கணும்.
அந்த ஆசைக்கு மயங்கும் கதாபாத்திரத்தில் வர்றேன்.‘ரத்தக்கண்ணீர்’ எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கையைச் சொன்னதோ அது மாதிரி இது வேறு ஒரு வெர்ஷனில் சொல்லப்பட்ட கதையாக இருக்கும். அனைத்து தலைமுறை ரசிகர்களையும் ஈர்க்கக்கூடிய படமாக இருக்கும். நீங்க பஞ்ச் டயலாக் நல்லா எழுதுவீங்க. மியூசிக் எப்படி?
பாடல் எழுதவும் இசை அமைக்கவும்தான் சென்னைக்கு வந்தேன். இது கன்டன்ட் உள்ள படம் என்பதால் கதையோடு கலந்த மாதிரி பாடல்கள் இருக்கும்.
மகாகவி பாரதியார் இசைக்காக பாடல்கள் எழுதமாட்டார். அவர் எழுதிய பாடல்களில் இசை இருக்கும். அதுபோல் இதில் கன்டன்ட்டுடன் கலந்த பாடல்கள் என்பதால் நானே இசையமைக்கும் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டேன்.
முன்புபோல் படங்கள் அதிகம் செய்வதில்லையே?
சரியான கேள்வி. சமீபத்தில்தான் மகனுக்கு திருமணம் முடிச்சேன். திருமணத்துக்காக நாலைந்து மாதங்கள் ஒதுக்க வேண்டியிருந்துச்சு. அந்தச் சமயத்தில் நடித்துக் கொண்டிருந்தால் படப்பிடிப்பு தடைப்படும் என்பதால் புதிய படங்களை கமிட் பண்ணவில்லை.திருமணத்துல முதல்வர், ரஜினி, அரசியல் தலைவர்கள் என ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். அந்த விழாவை ஒருங்கிணைக்கும் பணி என்பது சாதாரணமான விஷயம் இல்லை.
அதுமட்டுமல்ல, ‘ராஜாகிளி’ வெளியீட்டுக்காகவும் காத்திருந்தேன். ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் இருந்ததால் சில படங்களைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை இருந்துச்சு. இப்போது சில படங்கள் கமிட் பண்ணியிருக்கிறேன்.
நீங்க மிஸ் பண்ணிய படங்கள் உண்டா?
நிறைய படங்களைச் சொல்லலாம். குறிப்பாக ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’. அற்புதமான கதையம்சம் உள்ள படம். அந்தப் படத்துக்கு என்னால் தொடர்ச்சியா கால்ஷீட் ஒதுக்க முடியாத காரணத்தால் மிஸ் பண்ண வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுச்சு. தாணு சார் புரொடக்ஷனில் படம் முழுக்க வரக்கூடிய ரோல். ‘ராஜாகிளி’க்காக மிஸ் பண்ணினேன். சமீபத்தில் வெளியாகி வெற்றியடைந்த ‘சாமானியன்’ படத்தையும் சொல்லலாம்.
படம் வெளியாகிவிட்டதால் அதைச் சொல்லலாம்னு நினைக்கிறேன். ராமராஜன் வேடத்தில் தம்பி ராமையா நடிக்க வேண்டியது. அதன் இயக்குநர் என்னை மனசுல வெச்சு எழுதிய கதைன்னு சொல்லலாம். அந்தப் படத்திலும் ‘ராஜாகிளி’ வேலைகள் இருந்ததால் நடிக்க முடியவில்லை.
ஆனால், என்னைவிட பெரிய ஹீரோ ராமராஜன் சார் பிரமாதமாக நடிச்சிருந்தார். தற்போது அப்பாவாக என்னுடைய கடமைகளை செஞ்சு முடிச்சுட்டதால இனிமேல் வெறி பிடிச்ச வேங்கையா களத்துல குதிச்சு வேலை பார்ப்பேன்.இப்போ உங்க குடும்பம் பெரிய சினிமா குடும்பமா மாறியிருக்கு. உங்க சம்பந்தி ஆக்ஷன் கிங் அர்ஜுன், மருமகள் ஐஸ்வர்யாவை வெச்சு குடும்ப படம் எடுக்கும் ஐடியா இருக்கிறதா? ‘ஏழுமலை’ இரண்டாம் பாகத்தில் மாமனார் அர்ஜுன், மருமகன் உமாபதி பிரதான கதாபாத்திரத்துல நடிக்கிறாங்க. அர்ஜுன் சார் டைரக்ஷன் பண்றார். ‘டொனால்ட்’ என்ற படத்துல நான் கதை வசனம் எழுதி நடிக்க, உமாபதி திரைக்கதை, எழுதி இயக்கவுள்ளார். ‘தங்க நட்சத்திரமும் தமிழ் குற்றாலமும்’ படத்துல நானும், சமுத்திரக்கனியும் இணைஞ்சு நடிக்கிறோம். அரசியல் நையாண்டி கதையான அந்தப் படத்தை நான் இயக்கறேன்.
காமெடி நடிகர் என்ற முத்திரையை எப்படி பார்க்கிறீர்கள்?
ஊடக வளர்ச்சிக்குப் பிறகு இவருக்கு இந்த கதாபாத்திரம்தான் செட்டாகும் என்ற நிலை மாறிடுச்சு. யார் வேண்டுமானாலும் என்ன மாதிரி வேடமும் செய்யலாம் என்ற நிலை உருவாகியிருக்கு.
சின்ன படங்கள் தியேட்டரில் ஓடாது என்று பிம்பத்தை ரசிகர்கள் ‘வாழை’, ‘லப்பர் பந்து’ படங்கள் மூலமாக உடைச்சு நொறுக்கிட்டாங்க. கன்டன்ட் ஸ்ட்ராங்காகவும், உழைப்பு தெளிவாகவும் இருந்தால் படம் நன்றாக இருக்கும் என்று தியேட்டருக்கு வருகிறார்கள்.
பயோபிக் கதைகளில் உங்களுக்கு ஆர்வம் உண்டா?
‘அமரன்’ பயோபிக்காக வெளியாகி ஹிட்டாச்சு. அதுமாதிரி ‘ராஜாகிளி’ ஒரு வகையான பயோபிக் படம். ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய வாழ்க்கை மேன்மையாக இருக்கும்.
தம்பி ராமையா பார்க்காத தோல்வியா, கண்ணீரா, விழாத பள்ளமா, சுமக்காத வறுமையா, சிரிக்காத சிரிப்பா... எல்லாம் கடந்து வந்திருக்கிறேன்.
நவரசம் கலந்ததுதான் வாழ்க்கை. யாருடைய பயோபிக்கையும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. பயோபிக் எடுக்க பட்ஜெட் அதிகம் வேண்டும். என்னுடைய வாழ்க்கையில் என்னைச் சுற்றி நடந்தவைகள் நிறைய உள்ளன. அந்த வலியைச் சொல்லவே எனக்கு நேரம் கிடைக்காது. அதை என்னுடைய அடுத்தடுத்த படங்களில் சொல்வேன்.
எஸ்.ராஜா
|